Friday, December 20, 2019

சுந்தர காண்டம் – 25 – நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)


‘சீதாப்பிராட்டியைக் காணாது, கிஷ்கிந்தைக்கு நான் திரும்பிபோவதில் பயனில்லை.  பெருங்கடலைத் தாண்டியது, இடையூறுகளைக் கடந்ததும், இலங்காபுரியில் புகுந்ததும் வீணாகிப் போகும்.’


‘‘சீதாப் பிராட்டியைப் பார்க்க முடியவில்லை’ என்கிற கொடிய வார்த்தைகளைக் கேட்டு முதலில் இராமபிரானது உயிர் அவரது உடலை விட்டு நீங்கி விடும்; அவரைத் தொடர்ந்து இலக்குவன், பரதன், சத்ருக்னன், கோசலை, கைகேயி, சுமித்ரை உயிரை விடுவார்கள்.’ 


‘செய்நன்றி மறவாத, என் அரசன் சுக்ரீவன் தன் உயிரை மாய்த்துக் கொள்வான்; அவன் மரணித்த பின் ருமை, அவனது அண்ணி தாரை, என் சேனா நாயகன் அங்கதன் உயிரோடு இருக்க மாட்டார்கள்.’


‘இனிய சொற்கள்/ பரிசுகள்/ உபசரிப்பு கொண்ட தலைவனை இழந்த வானரர் படை விளையாட்டுகளை அனுபவிக்காது; விஷத்தை உட்கொள்வார்கள்; மலை மேலிருந்து கீழே விழுவார்கள்; தூக்கிலிட்டுக் கொள்வார்கள்; நெருப்பில் குதிப்பார்கள்; உண்ணா நோன்பிருந்து உயிரைத் துறப்பார்கள்; கத்தியால் வெட்டிக் கொள்வார்கள்.’


‘இவ்வளவும் நான் ‘சீதாப் பிராட்டியைப் பார்க்காது’ திரும்பிப் போனால் நிகழும்.  வானரர் படைக்குச் சர்வ நாசமும், இஷ்வாகு குல அழிவிற்கும் நான் காரணமாக மாட்டேன்.’


‘நல்ல சேதியில்லாது திரும்பிப் போகவே மாட்டேன்; சுக்ரீவ மகாராஜாவைப் பார்க்க மாட்டேன்; இங்கேயே இருப்பேனாகில், எல்லோரும் அங்கு நலமாயும், என்னை எதிர்பார்த்துக் கொண்டும் உயிருடன் காத்திருப்பார்கள்.’


‘சீதாப்பிராட்டியைப் பார்க்காத நான், கையில் கிடைத்ததைச் சாப்பிடுகிறவனாகவோ, வாயில் போட்டதைச் சாப்பிடுகிறவனாகவோ  புலன்களை அடக்கி வனவாசம் கொள்கிறேன்.  பெருந்தீயை வளர்த்து, அதில் பிரவேசிக்கப் போகிறேன்.  அலலது நீர் வெள்ளத்தில் விழுந்து ஜலசமாதி அடைந்து விடுகிறேன்.’


‘இந்த இரவு நன்றாகத் துவங்கினாலும், முடிவில் சீதாப்பிராட்டியைப் பார்க்காததனால் பயனற்றதாக ஆகி விட்டது.  கருமை நிறம் அதிகம் கொண்ட கண்களை உடைய சீதாப்பிராட்டியைப் பார்க்காமல் திரும்பிப் போவதாயில்லை.  மரத்தடியில் வசித்துக் கொண்டு தவத்தை மேற்கொள்ளப்போகிறேன்.’

‘எழுநூறு யோஜனை (பரப்பளவு கணக்கு) அளவிற்கு அரண்களால் சூழப்பட்டுப் பரவியிருக்கும் இலங்காபுரியில் நான் பார்த்திராதவை இல்லை; ஆயின், பார்க்கப்பட வேண்டிய சீதாப் பிராட்டியைப் பார்க்க முடியாததால், கடல் கடந்து வந்த நான் துன்பப் பெருங்கடலில் மூழ்கி இறந்து விடுவேனோ?’


ஊழியான் பெருந்தேவி
     ஒருத்தியுமே யான் காணேன்
ஆழி தாய், இடர்- ஆழியிடையே
     வீழ்ந்து அழிவேனோ ?


‘உயிரை நாமாக விடுவதில் பல தோஷங்கள் இருக்கின்றன; உயிருடன் இருக்கின்றவன் என்றாவது இன்பத்தைத் துய்ப்பான் என்பது ஆன்றோர் வாக்கு.  சீதாப் பிராட்டியையும், இராமபிரானையும், சுக்ரீவ மகாராஜாவையும், வானரர்களையும் நான் மீண்டும் சந்திக்க வேண்டுமாயின், என் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.’


பலவித துயர சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்ட அனுமனுக்குச் சோகமே கடலாய்த் தெரிந்தது; கரை புலப்படவில்லை.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers