Sunday, January 27, 2013

தணியா வதிமோ கதயா பரனே!

..பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே!
 
 -கந்தரநுபூதி

‘தணியா அதிமோக தயாபரனே!’ இங்கு மோகம் என்றால் கணவன் மனைவியிடத்து வைக்கும் மோகம் என்று பொருள் அல்ல. மோகம் என்றால் கருணை. முருகனது அருள் பெற்றவர் அருணகிரிநாதர். முருகனைச் சிந்திக்கும் அடியார் பார்க்கும் திக்கில் காமம் இருக்காது. ஆகையினாலே, சுப்பிரமணிய சுவாமி வள்ளியிடம் போய்ப் பணிந்தாரா? பணியவில்லை. பணியவில்லையா? பணிந்தார்.

பதினெட்டு வருடங்களாக ஒருவனுக்குக் குழந்தை இல்லை. பிறகு முருகனருளால் பிறந்தது. குழந்தைக்கு வயது ஒன்றரை ஆயிற்று. ஒரு நாள் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. தாய் புறக்கடையில் வேலையாயிருந்தாள். தகப்பன் அறுவடைக்குச் சென்றிருந்தான். குழந்தை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. எதிரே ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கைத் தொட்டால் சுடும் என்று குழந்தைக்குத் தெரியாது. ஏதோ பிரகாசமான பொருளாக இருக்கின்றதே என்று எண்ணி, விளக்கின் தண்டைப் பிடித்துக் கொண்டு தொட முயன்றது. அந்தச் சமயத்தில் குழந்தையின் தகப்பன் வந்தான். குழந்தையை அப்படியே வாரி அணைத்து, ‘திருத்தணி முருகா! நான் வர அரை நிமிடம் தாமதமாயிருந்தால் குழந்தையின் கதி என்னவாயிருக்கும்? எல்லாம் உன் செயல்!’ என்றான். குழந்தையைக் கவனிக்கவில்லையென்று தாயைக் கோபிக்கலாமா? விவேகமில்லாதவர்கள்தான் மனைவியைக் கோபித்துக்கொள்வான். கருணையும் அன்பும் நிறைந்த தந்தை குழந்தைக்கு விளக்கைத் தொட்டால் சுடும் என்று சொல்ல விரும்பினார். குழந்தைக்குச் சொன்னாலோ புரியாது.

விளக்கினால் குழந்தைக்கு இடர் வரும். அதனால் விளக்கியே தீரவேண்டும். விளங்காத குழந்தைக்கு விளங்க வைக்க வேண்டும். என்ன சொல்லி விளக்குவார்? குழந்தைக்கு முன் தந்தை இரண்டு தடவை விளக்கில் கை வைப்பது போல் வைத்தார். உதறினார். அழுதார். வைத்தாரா? வைக்கவில்லை. வைக்கவில்லையா? வைத்தார். உதறினாரா? இல்லை. உதறவில்லையா? உதறினார். அழுதாரா? இல்லை. அழவில்லையா? அழுதார். விளங்காத குழந்தைக்கு விளங்க வைத்தார். அது போல முருகன் நடித்துக் காண்பிக்கிறார். என் திருவடியை நினைந்தாலொழிய இந்த மகமாயை தொலையாது எனறு விளங்க வைக்கிறார் முருகன்.

கந்தரநுபூதி விரிவுரை (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகன் வாரியார் பதிப்பகம்) புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

Saturday, January 12, 2013

கொடுங்கூற்று என் செயும்?

மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது மனதில் வந்து போகின்றன.  பல சமயங்களில் பயம் எட்டிப் பார்க்கிறது.  ஏன் என்று தெரியவில்லை.


ஔவையார் கூறுவது
...கணபதி என்றிடக் காலனும் கைதொழும்’

அருணகிரிநாதர் உரைப்பது

..கொடுங்கூற்று என் செயும்
குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும்,
தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!



குமரேசனது இரு தாள்கள் (பாதங்கள்) அதில் ஒலிக்கும் சிலம்புகள், சதங்கைகள், தண்டைகள், ஆறுமுகங்கள், பன்னிருதோள் களும், அதில் கடப்பமலர் மாலையும், முன்னே வந்து தோன்றும்போது, எமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.


அபிராம பட்டர் அருளுவது

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய - கவர்ந்து கொண்ட, செவ்வியும் - செம்மையான (நிறம்), அவ்வியம் - அசுத்தங்கள், வெவ்விய - சினம்/கோபம்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.


திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்
சுலபமாக்கித் தருகிறார்


....எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே!


மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.

என்றெல்லாம் தினமும் படித்தாலும், அமரத்வம் என்று ஏதுமில்லை.  பிறந்தவன் மரிப்பான்.  மரணம் வந்தே தீரும். தடுக்க முடியாது.  படத்தில் வரும் ‘எல்லோருக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் போட்டுத்தான் இறைவன் அனுப்பறான்’ என்றெல்லாம் சில சமயங்களில் முதிர்ச்சியாய் எண்ணினாலும் ஏனோ மரணத்தின் மீதான அச்சம் போகவேயில்லை.

வாழ்க்கையை நான் விரும்பும்படி - புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது, ஆலயங்களுக்குச் செல்வது, நல்ல படங்களைத் தியேட்டரில் பார்ப்பது, உணவு வகைகளைத் தேடிச் சாப்பிடுவது, சமயத்தில் என்னை நொந்து கொள்வது, குடும்பத்தை ஓரளவுக்குச் சீராகக் கொண்டு செல்வது, எழுதிக் கிழிப்பது - என அமைத்துக்கொண்டாலும் இந்த எண்ணம் சமீப காலமாய் வந்தும், போயும் கொண்டிருக்கிறது.

நிற்க.

வருடத் துவக்கத்தில் எங்கள் குலதெய்வம் குணசீல ப்ரஸன்ன வேங்கடாசலபதி பெருமானையும், என்னைக் காத்த, காக்கும் தெய்வம் சுவாமிமலை சுவாமிநாதனையும் தரிசித்து விடுவேன். 

சுவாமிமலையில் பொது தரிசனத்தில் ஐயப்ப பக்தர்கள் திரண்டிருந்ததால், ஐம்பது ரூபாய் சிறப்புத் தரிசனத்தில் சுவாமிநாதனைத் தரிசனம் செய்தேன்.   முருகனைப் பார்த்துக் கொண்டும்,  தோத்திரங்களைப் படித்துக் கொண்டுமிருந்தேன்.

விபூதி அலங்காரத்தில், கையில் வேலுடன், வெள்ளிக் கவசத்தில் பிரம்மாண்டமாய் நின்ற முருகன், தனிமை, ஏகாந்தம் என் மனதை ஈர்த்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே உட்காரச் செய்துவிட்டது.  வார்த்தைகளில் விவரிக்க இயலாத, அனுபவித்துதான் அறிய முடியும் சூழல்.

வெளியில் வந்து, பிரகாரத்தைச் சுற்றும்போது மனதில் தோன்றியது ‘ போறுமேடா! இதுக்கு மேலே என்ன வேணும்?  அப்படியே செத்துப் போயிறலாம்!’

அப்பனுக்கு மட்டும் அல்ல, இந்தப் பொடியனுக்கும் கூட சுவாமிநாதன் ஒரு பாடத்தைத் தந்ததாகத்தான் நினைக்கிறேன்.

Tuesday, January 01, 2013

வாக்குண்டாம்!


சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் இருக்கும் பிள்ளையார் படங்கள் சர்வ சாதாரணமாய்த் தமிழ்நாட்டில் தென்படும்.


எனக்கு இது புதிராய் இருந்தது. விநாயகருக்கும், அலைமகள் / கலைமகள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விக்கு நெடுங்காலம் விடை கிடைக்காமலேயே இருந்தது.



பூஜா ரூம் என்கிற புத்தகத்தில் கணபதியைப் பற்றிய பாட்டு ஒன்றைப் படித்தேன். மஹாபெரியவர் அவர்கள் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் அந்தப் பாட்டை எழுதியவர் ஔவைப் பாட்டி என்றும் தெரிந்து கொண்டேன். என்னுடைய கேள்விக்கு விடை இங்கு கிடைத்தது.

நீங்களும் படியுங்களேன்....

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்

உடலை வருத்திக்கொள்ளாமல் பூக்களைக் கொண்டு, தும்பிக்கை கொண்ட பவள நிறத் திருமேனியோன் விநாயகன் திருவடிகளைத் தினந்தோறும் தவறாமல் துதிப்பவருக்கு, நல்ல வாக்கு உண்டாகும்; நல்ல மனம் உண்டாகும்; இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல் துப்பு ஆர் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி

இணையத்தில் மேய்ந்தபோது, மேலும் சில அரிய விஷயங்கள் கிடைத்தன.

அ. மூதுரை என அழைக்கப்படும் நூலில் அமைந்த கடவுள் வாழ்த்து இந்தப் பாடல். எளிய கருத்துகளுக்காக ‘வாக்குண்டாம்’ என்கிற இன்னொரு பெயரும் நூலுக்கு உண்டு.

ஆ. இன்றைய அரிய சொற்கள்
1. நுடங்காது - வருத்திக் கொள்ளாது
2. துப்பு - பவளம்


இ. துப்பு என்கிற சொல் இங்கும் புழங்குகிறது
1. துப்பு உறழ் துவர் வாய் - கம்ப ராமாயணம்
2. துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி - திருப்புகழ்

2013 ஆண்டின் முதல் நாள் அங்காரக சதுர்த்தி (செவ்வாய் அன்று வரும் சங்கடஹர சதுர்த்தி) நன்னாளோடு துவங்குகிறது.

முந்தைய பதிவுகள்

Followers