Monday, January 13, 2020

சுந்தர காண்டம் - 49 - குணம் மாறும் பாத்திரங்கள்

இராவணேசுவரன் அரக்கியரை அழைக்கிறான்.
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுறத்தேற்றியானும்
வஞ்சியிற் செவ்வியாளை வசித்தென்பால் வருவீர்,
அன்றில் நஞ்சுமக்காவென் என்னா
"பயமுறுத்துங்கள்; அறிவை(?)க் கொண்டு சொல்லுங்கள்; எவ்விதத்திலும் இவளை என் வசப்படுத்துங்கள்; இல்லையெனில், உங்களுக்கு நான் ஆலகால விடம் போலக் கொடியவனாவேன்!" என்று உத்தரவிடுகிறான்.

சினம் கொண்ட இராவணேசுவரனை இடைமறித்து, தான்யமாலினி என்கிற மனைவி சமாதானம் செய்கிறாள். "இஷ்டமில்லாத பெண்ணை விட, தங்களிடம் விருப்பம் கொண்ட மங்கையே மகிழ்ச்சியைப் பெருக்குவாள்." என்று அவனுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறாள்.

அவளுக்குப் பதில் சொல்லவில்லை; ஏனெனில் இராவணேசுவரன் காம வேட்கையால் துடிக்கவில்லை; பெண்களுக்குள் மாணிக்கத்தை அடையத் தவிக்கிறான் என்கிறார் வான்மீகி முனிவர்.

தன்னையும், தன்னைச் சுற்றியிருக்கும் பெருஞ்செல்வத்தையும், சுகத்தையும் துச்சமாக மதித்த பெண்ணின் மதிப்பைப் பெறுவதை விட எது முக்கியம்? தான் காமம் வசப்பட்டு, தன்னிலை இழக்கவில்லை, தனக்கும் மனோபலம் உண்டு என்பதை நமக்குக் காட்ட நினைத்தே வலுவில் வந்த தான்யமாலினியை நிராகரிக்கிறான் இராவணேசுவரன். இதனால்தான் இந்தக் காட்சியைத் தவிர்த்து விடுகிறான் கம்பநாடன்.

சீதாப்பிராட்டிக்கு அடிமையாகத் துணியும் இராவணேசுவரன்; ஆயின், சிறையிலிருந்தாலும், விடுதலைக்கு ஓர் வழியில்லாதிருந்தாலும், வீராங்கனையாக விளங்குகிறார் சீதாப்பிராட்டி.

வாழ்வில் பற்றை இழந்தவுடன் அச்சம் தொலைகிறது சீதாப்பிராட்டிக்கு; மிரட்டுபவன் போலி என்று உணர்ந்த பேதை அவனை மிரட்டுகிறார்.

தான் சிறை வைத்த பிராட்டிக்கு, பேதைப் பெண்ணுக்கு அஞ்சி நிற்கும் நிலைக்குத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டான் இராவணேசுவரன்.

ஆக, யாருக்கு வீரம், யாருக்கு பேதமை? பாத்திரங்களின் தன்மை இங்கு மாறித்தான் போய்விட்டது!

Sunday, January 12, 2020

சுந்தர காண்டம் - 48 - இராவணேசுவரனின் சினம்

சினம் பொங்கி வந்தாலும் இராவணேசுவரன் சொல்வது என்ன?

"என் சினத்தை அடக்குவது உன் மேலுள்ள காதலே; சமாதானப்படுத்திப் பேசினால் பெண்கள் வசமாவார்கள் என்பது உலக இயற்கை; ஆயின், நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்."

"நீ சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் கொலையே தக்க தண்டனை; ஆனால், கொல்லாமல் விடுகிறேன்; ஏனெனில், நீ மிகவும் அழகாயிருக்கிறாய்!" (அசடு வழியும் காரணமாயிருக்கிறது!).

"எதற்கும் இரண்டு மாதங்கள் தருகிறேன்; அதன் பின் எனக்கு இணங்காமற் போனால் உன்னை வெட்டிச் சமைத்து விடுவார்கள்." (உயிர் மேல் ஆசையிருந்தால் படுக்கையறை; மானம் மேல் ஆசையிருந்தால் சமையலறை, எது வேண்டும்?).

சீதாப்பிராட்டி நடுங்குவதைக் கண்டு மனமிரங்கி, சுற்றியுள்ள தேவப் பெண்டிர் "பயம் வேண்டாம்" என்று சமிக்ஞை செய்கிறார்கள். 

பெண்களுக்கே உரித்தான ஜாக்கிரதை உணர்வு மற்றும் அறிவு சீதாப்பிராடிக்குத் துணிச்சலைக் கொடுக்கிறது.

"உன் குரூரமான கண்கள் இரண்டும் தெறித்து விழாது இருக்கின்றனவே என்னைத் தீய நோக்கோடு பார்த்த பின்பும்?" (துடுக்குடன் பேசுகிறார்).

"இராமபிரானின் அனுமதியில்லை என்பதாலேயே உன்னை என் தவ வலிமையால் அழிக்க வில்லை." (உறுமுகிறார்).

இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்கிறான் இராவணேசுவரன்.

Saturday, January 11, 2020

சுந்தர காண்டம் - 47 - அறிவு காட்டி இடிக்குநர் இல்லை

இராவணேசுவரனை அம்பினால் வீழ்த்துவது எளிதாயிற்றே! அவனுக்குத்தான் பத்து தலைகள் இருக்கின்றனவே!
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற் கேற்ற
சித்திர இலக்கமாகும்
பறவையை வென்றேன் என்று சாகச வார்த்தையை எதிர்கொள்ளவே, 'சிவபெருமான் வாள் உன்னிடம் இல்லாதிருந்தால் சடாயு உன் இறுதிச் சடங்கைச் செவ்வனே செய்திருப்பார்.'

என்கிறார் சீதாப்பிராட்டி.

எல்லோரையும் கடிக்கும் தன்மையுடைய நல்ல பாம்பு, மந்திரத்திற்குக் கட்டுப்படும் (மகுடி). ஆயின், நீ (மந்திரி) ஆலோசனை கேட்காமல் இப்படிக் களித்துக் கொண்டிருக்கிறாயே? இங்கு உன்னை இடித்துக் காட்டும் நல்லவரே இல்லையா?

உன்னைச் சுற்றியுள்ளவர்கள், நீ எண்ணுவதைத் தாமும் எண்ணி, உன்னை படுகுழியில் தள்ளுகின்றனர். அழிவு ஒன்றுதான் உனக்கு முடிவு.

எனக் அருளும் சீதாப்பிராட்டியின் அரசியல் அறிவை மெச்சுவதா? இல்லை, துணிவை மெச்சுவதா?
....அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை, உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர்
அசோகவனத்தில் சிறை, அரக்கியர் சூழ் உலகு, எதுவும் செய்ய இயலாத பேதை என நினைத்திருந்த சீதாப்பிராட்டி, வலிமை மிகுந்த இராவணேசுவரனைச் சட்டென அவமதித்து விட்டார் அவனது மகளிர்கள் முன்.

இராவணேசுவரனுக்குச் சினம் எழுகிறது.

Friday, January 10, 2020

சுந்தர காண்டம் - 46 - துரும்பினும் இளையோன்!

இவற்றைச் செவியுற்ற சீதாப்பிராட்டி அழுது நடுங்குகிறார். ஆயினும், தன் பிரியமானவரை, இராமபிரானை நினைத்தவுடன் துணிவு வந்து விடுகிறது.

துரும்பைக் கிள்ளி அவனுக்கும் தனக்கும் இடையில் இட்டுப் பேசத் துவங்குகிறார்.
த்ருணமந்த்ரத: க்ருத்வா ப்ரத்யுவாச ஸுசிஸ்மிதா||

தன் தகுதிக்குக் கீழானவர்களுடனும், பேசக்கூடாதவர்களுடன் பேசும்போதும், கையாளும் பண்டைய வழக்கம்.

பாவம் செய்தவன் நற்கதியை அடைய முடியுமா?

தருமத்தை நினைத்துப் பார். நான் பிறன் மனைவி. பதிவிரதை. உனக்கு ஏற்றவளல்ல.

எப்படி உன் மனைவிகள் உன்னால் காப்பாற்றப்படுகிறார்களோ, அப்படியே பிறர் மனைவியும் காப்பாற்றப்படத்தக்கவர்கள்.

இங்கு நல்லவர்கள் இல்லையா?

அல்லது அவர்கள் சொல்லியும் கேட்காது உன் புத்தி இப்படி விபரீதமாகச் செல்லுகிறதா? (விஷமக்கார மகனைக் கண்டிக்கும் அன்னையைப் போல)

செல்வத்தைக் காட்டி என்னை மயக்க முடியாது. சூரியனுக்கு ஒளியைப் போல இராமபிரானுக்கு நான்; அவரையன்றி வேறு ஒருவரை என் உள்ளம் நாடுமா?

சொல்வதைக் கேள்; ராவணா! என்னை இராமபிரானிடம் கொண்டு போய் விட்டுவிடு; அவரிடம் நட்பு கொள்; உயிர் தப்புவாய். இல்லையேல் சரமாரியில் விழும் அவரது அம்புகள் இந்நகரில் வந்து பாயும். (மிரட்டுகிறார்)

நீ ஒரு கோழை/பேடி/வீரம் இல்லாதவன்; இராம-இலக்குவர் இல்லாத சமயத்தில் முனி வேடம் பூண்டு என்னை அபகரித்தாயே? இது வீரத்தில் சேர்த்தியோ? (இடித்துக் காட்டுகிறார்).

Thursday, January 09, 2020

சுந்தர காண்டம் - 45 - மின் மருங்கும் அரிதாக்கியோ!

பல பெண்களைச் சேர்வதும், பிறன் மனை கவர்வதும் அரக்கர் வழக்கம்.

உன் மனம் மாறியதும் என் ஆசை கரம் புரண்டு ஓடும்.

நீ சோகத்தில் ஆழ்ந்திருப்பது சரியல்ல. என்னை நம்பு. என்மேல் அன்பு செலுத்து.

பெண்களுக்குள் மாணிக்கம் நீ. இப்படி இருக்கலாமா?

ஸ்த்ரீ ரத்னம் அணி மா ஏவம் பூ: குரு காத்ரேஷு பூஷணம்

எழில்மிகு இளமை வீணாய்ப் போகிறது; ஆற்று வெள்ளம் போல போன நாட்கள் திரும்புமா?

உன்னைப் படைத்த பின் பிரமனே ஓய்வு கொண்டான்; ஆஹா! எங்கெங்கு விழிகளைச் செலுத்தினாலும் உன் அழகே அழகு!

கம்பநாடனும் பிரமனுடைய விந்தையை வியக்கிறான்; ஆயினும் ஒரு குறையாம். என்ன?

தெருளு நான்முகன் செய்ததுன் சிந்தையின்
அருளும் மின்மருங்கும் அரிதாக்கியோ

'இடை எவ்வளவு சிறியதாய்க் கண்ணுக்குப் புலப்படாது இருக்கிறதோ, அவ்வளவுதான் உன் கருணை என் மீது!

(மின்மருங்கும் - மின்னலைப் போன்ற இடை, பொருந்தாக் காமம் கொண்டோர்க்குத் தேவியின் கடைக் கண் பார்வை கூடக் கிட்டாது என்கிறான் கம்ப நாடன்).

நான் இறப்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படவில்லை; என்னை விட ஏற்ற துணைவன் உனக்கு இல்லையே? என்றே நான் கவலைப்படுகிறேன்.

எங்கெல்லாமே சென்று, உத்தமப் பெண்களைக் கொணர்ந்து வந்திருக்கிறேன்; அவர்களனைவருக்கும் மேலாக நீ முதலிடம் பெறுவாய்.

உலகையே உன் பொருட்டு வென்று உன் தந்தை சனக மகாராஜாவிற்கு அளிப்பேன்.

அந்த நாடிழந்த இராமன் உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ?

கருடன் பாம்பைக் கொத்திப் போவது போல என் மனதைக் கவர்ந்து விட்டாய்! (கருடன் பாம்பைக் கொத்தியபின், பாம்பிற்கு அழிவுதான் என்பதைத் தன்னையறியாது கூறுகிறான்).

இராமன் தவத்திலோ, பலத்திலோ, வீரத்திலோ, செல்வத்திலோ, உடல் அமைப்பிலோ, புகழிலோ எனக்கு ஈடாகான் (இராமபிரானைப் பார்த்திராமலேயே, அவர் நிகரற்றவர் என்கிறான்!).

தேவலோகத்தில் ஶ்ரீதேவிக்குத் தேவ மகளிர் எப்படிக் கைகட்டிச் சேவகம் செய்வார்களோ, அப்படி இங்கு உனக்கு நடக்கும்.

என்னுடைய செல்வத்தை ஏற்றுக்கொண்டு என்னையும் ஏற்றுக்கொள்; நாமிருவரும் உல்லாசமாய்ச் சுற்றி வரலாம்.

என மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறான் இராவணேசுவரன்.

Wednesday, January 08, 2020

சுந்தர காண்டம் - 44 - மறம் தரு செங் கணாய்!

வான்மீகி முனிவர் அருளியிருக்கும் இராவணேசுவரனின் உரையாடல், காமத்தில் மூழ்கி, பொறுமை இழந்த மூர்க்கன், முரடன் போலவே தொடங்கும்;

'அழகியவளே! நீ என்னைப் பார்த்து அச்சப்பட்டு உன் மார்பகங்களையும், வயிற்றையும் மறைத்துக் கொள்வதன் மூலம் அவை என் கண்களில் படாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் போலும்!'

'உன்னைக் கண்டு யார்தான் மயங்க மாட்டார்? உன் அகன்ற கண்கள் போதுமே!' என்றுதான் துவங்குகிறான்.

எவ்வளவு பெரிய அறிவாளியாயிருந்தாலும், பேரரசை ஆண்டாலும், வீரத்தைக் கொண்டாலும், பொருந்தாக் காமம் எல்லாவற்றையும் அழித்து, மூர்க்கனாக்கி விடும் என்பதே வான்மீகி முனிவர் நமக்கு உரைக்கும் பாடம். காமம் என்பதை ஆசை எனப் பொதுப் பொருள் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் இரகசியம் எளிதாய் நமக்கு விளங்கிப் போகும்.

ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் கொஞ்சம் வித்தியாசமான வில்லன்; தீமை செய்வதிலும் தன் நுட்பமான அறிவினைச் செலுத்துகிறான்; அதனாலேயே, இழிந்த காமத்தைக் கலையாக மாற்றிப் போற்றிப் பேசுகிறான்.

இன்று இறந்தன, நாளை இறந்தன,
என் திறம் தரும்தன்மை இதால்;

'நீ இரங்குவாய் எனக் கருதிய பல இன்றைய தினங்களும், உன் மனம் மாறும் என நான் கருதிய பல நாள்களும் கடந்து போயின! உன் அருள் அந்த அளவிற்குத்தான் என் மீது உள்ளது!' என்று புத்திசாலித்தனமான காதலனாகப் பேசத் துவங்குகிறான். ஆனாலும்...அவனே சொல்லும் சொற்கள்...

மறம் தரு செங் கணாய்! - மேலோட்டமாய்ப் பார்த்தால், கண்களால் கொல்லாதே என்கிற பொருள்தான்; ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் வாயிலாகவே, 'தேவி! உன் கண்களால் என்னை எரித்துச் சாம்பலாக்கும் வல்லமை உண்டு' என்பதைத் தன்னை அறியாது சொல்கிறான்.

Tuesday, January 07, 2020

சுந்தர காண்டம் - 43 - வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்!

பட்டினி, சோகம், தியானம், பயம் இவை நான்கும் ஒருங்கே சீதாப்பிராட்டியை வாட்ட, உடல் நலிந்து, மெலிந்து தவம் செய்யும் அன்னையைப் போலிருக்கும் சீதாப்பிராட்டியிடம் ஆசை வார்த்தைகளைக் கொட்டுகிறான் இராவணேசுவரன்.

தான் அழிந்து போவதற்குத்தான் இப்படிப் பேசுகிறான் என்பார் வான்மீகி முனிவர்.

    அனுவ்ரதாம் ராமமதீவ மைதிலீம் ப்ரலோபயாமாஸ வதாய ராவண: 

'கொடிய நஞ்சை அமுதமென நினைத்து வேண்டும் தீயோன்' என்கிறான் கம்பநாடன்.

    வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்.

எப்பேர்ப்பட்ட மாவீரன் இராவணேசுவரன்?  கைலாய கிரியைப் பெயர்க்கத் துணிந்தவன்; சிவபெருமானிடம் அளவற்ற பக்தியை உடையவன்; சிவபெருமானை வணங்கும்போதும் தன் பெருமைக்குப் பங்கம் வராமல் காப்பவன்; குறைவில்லாத வீரம் கொண்டவன்; பொருந்தாக் காமத்தில் விழுந்த பின், வெட்கம் மட்டுமே மிஞ்சிப் போய் வந்து வந்து போகிறது என்று ஏசுகிறான் கம்பநாடன்.

    கூசிக் கூசி இவையிவை கூறினான்.

இனிய சொற்களால் சீதாப்பிராட்டியின் மனத்தை மாற்ற முயற்சிக்கிறான் இராவணேசுவரன்.

Monday, January 06, 2020

சுந்தர காண்டம் - 42 - வந்தான் இராவணேசுவரன்! (நிறைவுப் பகுதி)

அனுமன், மிகுந்த பராக்கிரமசாலி என்றாலும் (அப்போது), இராவணேசுவரனின் மாயாஜாலத்தின் முன் எடுபடாது, இலைகளின் அடர்ந்த பகுதியில் தன்னை மறைத்துக் கொள்கிறான்.

பொருந்தாக் காமம் எனும் மதம் பிடித்த யானையைப் போல வந்து கொண்டிருக்கும் இராவணேசுவரனையும், சோகமே அணிகலனாய்க் கொண்ட தூயவளான சீதாப்பிராட்டியையும் மாறி மாறிப் பார்த்து அனுமன் மனம் பதைக்கிறான்.

ஊசல் ஆடி உளையும் உளத்தினன்

அனுமன் தடுமாற்றம் அடைந்து, மன உளைச்சல் கொண்டான் என்கிறான் கம்பநாடன்.

இராவணேசுவரனால் ஏதும் தீங்கு வாராதிருக்க வழக்கம்போல இராமபிரானையே தோத்திரம் செய்திருக்க வேண்டும் அனுமன்; ஆயின், சீதாப்பிராட்டியைக் கண்ட பின் அனுமனது உள்ளம் அவரின் பால் அளவற்ற பக்தி கொண்டு விடுகிறது. அதைப் பாடலில் உணர்த்திய கம்பநாடன் அறிவை என்னென வியப்பது!

வாழி சானகி! வாழி இராகவன்! 
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்! 
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான் 
ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான்.


ஒவ்வொரு யுகத்திலும் புதுமையான புகழை உடைய அனுமன் என்று கம்பநாடன் அருளியதைப் படிக்கும்போது நமக்கு அனுமன் மீது பக்தி பெருகுகிறது.

கம்பநாடன் இராவணேசுவரனின் மாட்சியை விளக்குவதற்காக பத்தொன்பது பாடல்களை அருளினான்; வான்மீகி முனிவர் ஸர்க்கம் 17-18-களில் இராவணேசுவரனின் மாண்பையும், சீதாப்பிராட்டியின் நிலையையும் உருக்கத்தோடு அருளுகிறார்.

ஏன் இவ்வளவு விரிவாகத் தீயவனைச் சித்தரிக்க வேண்டும்? சீதாப்பிராட்டி தன் கற்பையும், பிறப்பையும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் எத்தகைய மாவீரனை எதிர்த்து நிற்கிறார் என்பதை நமக்கெல்லாம் தெரிவிப்பதற்காகத்தான்.

சுந்தர காண்டத்தைத் தொடர்ந்து படித்தால், நமக்கும் இது போன்ற வலிமையான, நல்லவைகளைத் தொடர்ந்து நாடும் உள்ளம் நிச்சயம் கிட்டும்.

Sunday, January 05, 2020

சுந்தர காண்டம் - 41 - வந்தான் இராவணேசுவரன்!

பொழுது புலரச் சில மணித்துளிகளே உள்ள போது, வேதம் ஓதும் பிராமண ராக்ஷஸர்களின் கோஷங்களைக் கேட்கிறான் அனுமன்.  மங்கல வாத்தியங்களின் ஒலி, செவிக்கும் மனதிற்கும் இதமளிக்கும் ஒலிகளைக் கேட்டு இராவணேசுவரனும் விழித்துக் கொள்கிறான்.

இராவணேசுவரன் வருகின்ற காட்சி, அவனுடைய மாட்சியைப் போட்டி போட்டு கொண்டு வான்மீகி முனிவரும், கம்பநாடனும் அருளுகின்றனர்.

    உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர
    மேனகை வெள்ளடை உதவச்
    செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
    அரம்பையர் குழாம்புடை சுற்ற

ஊர்வசி உடைவாள் எடுத்துக்கொண்டு பின்னே வருகிறாளாம்; மேனகை வெற்றிலை வழங்குகிறாளாம்; செருப்பினைத் திலோத்தமை தாங்குகிறாளாம்; தேவ மகளிர் சூழ வரும் இராவணேசுவரன் எப்படி இருக்கிறான்?

அனுமன் வாயிலாக வான்மீகி முனிவர்,

    ஸமக்ஷமிவ கந்தர்ப்பம் அபவித்த சராஸனம்

வில்லைத் தரிக்காத மன்மதனே நேரில் வந்தது போல இருந்தானாம் என்கிறார்.  கரும்பு வில் இல்லாததுதான் குறையாம்!

பொருந்தாக் காமத்தை ஒளிக்க முடியவில்லை; மதுமயக்கம்;  தோளிலிருந்து நழுவும் வெண்மை நிறங் கொண்ட மேலாடையை அலட்சியமாக அதனிடத்தில் வைத்த அழகை அனுமன் ரசிக்கிறான்.

எண்ணற்ற மங்கையர்கள் கடைக்கண் நோக்கிக் காத்திருக்க, அவர்களை மதியாதவனாய், சீதாப்பிராட்டியை எண்ணி எண்ணிக் காமத்தீ கொழுந்தெரிய அவரை நோக்கி வருகிறான் இராவணேசுவரன்.

இச்சந்திப்பால் என்ன நிகழுமோ என அஞ்சுகிறான் தேவேந்திரன்; ஆதிசேடனோ இவனது நடையைத் தாங்காது நடுங்குகிறான்; இரணியனை அழித்த நரசிங்கத்தின் சுவட்டினைக் கண்ட யானையைப் போல, திக்கு யானைகள் அலறுகின்றன.

Saturday, January 04, 2020

சுந்தர காண்டம் - 40 - அரக்கியர்கள் சூழ் பெருந்தகை!

சீதாப்பிராட்டியைக் கண்டு உவகை கொண்ட அனுமன் அவரைச் சூழ்ந்து காவல் காக்கும் அரக்கியரைக் காண்கிறான்.

வான்மீகி முனிவரும், கம்பநாடனும் சளைக்காமல் அரக்கியரையும் வர்ணித்திருப்பது சுந்தர காண்டத்திற்கு மெருகூட்டுகிறது.

     வெருவரு தோற்றத்தர் - பயத்தை உண்டு பண்ணும் தோற்றத்தை உடையவர்கள்.

    உருவு கொண்ட ஆலம் அனைய மேனியர் - முழு வடிவம் எடுத்த விஷம் போன்ற உடலைக் கொண்டவர்கள். 

ஆறு பாடல்களில் அரக்கியரை வர்ணித்தாலும், வார்த்தைகளில் வராத அளவுக்குச் சீதாப் பிராட்டியைக் கொடுமைப் படுத்துவதால்,

    பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர் - பெண் என்று பெயரளவே தவிர பெண்மை இல்லாத திரிபு நிலையை உடையவர்கள்.

என்று மனத்தாங்கலோடு முடித்துவிடுகிறான் கம்பநாடன்.

வான்மீகி முனிவர் 17-ம் ஸர்க்கம் சுலோகங்கள் 5 - 17 வரை அரக்கியரைக் குறிப்பிட்ட பின், அனுமன் சீதாப்பிராட்டியை மீண்டும் கொண்டாடுவதாய் அமைத்திருக்கிறார்.

ஒரு கண், ஒரு காது, காதற்றவள், கூந்தல் இல்லாதவள், பன்றி - மான் - புலி - எருமை - ஆடு நரி போன்ற முகமுடையவர்கள், யானை - ஒட்டகம் - குதிரை போலக் கால்களை உடையவர்கள், எப்போதும் புலால் - கள் போன்றவைகளில் நாட்டமுடையவர்கள், விகாரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று அனுமன் காட்சியை வான்மீகி முனிவர் அருளுகிறார்.

இவர்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டி, 

    தன் நாயகனுக்குக் கட்டுப்பட்டு,
    கொடிய அரக்கியர்க்கு வசப்படாது,
    அசோகவனத்து மத்தியில் சோகக் கடலில் மூழ்கி,
    பூக்காத பூங்கொடி  போல்,

இருக்கிறார் என்று அனுமன் உருகுகிறான்.

முந்தைய பதிவுகள்

Followers