Saturday, November 30, 2019

சுந்தர காண்டம் - 4 - பணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்

சுந்தர காண்டத்தின் நாயகன் அனுமன்தான் என்பதை உறுதி செய்ய அனுமனே நமக்குத் துணை நிற்கிறான்.

தன்னைச் சோதிக்க வந்த ஸுரஸைக்கு இராம காதையைச் சொல்கிறான்.

சீதாப் பிராட்டியின் காணாது, தன்னிரக்கத்தில் மூழ்கும்போதும் இராம காதையை இயல்பாகவே அனுமன் அசை போடுகிறான்.

துக்க ஸாகரத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீதாப் பிராட்டியை இராம காதையைச் சொல்லி கரை ஏற்றுகிறான்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பகைவர்கள் என்றாலும், கைலாய கிரியைப் பேர்த்தெடுத்த இராவணேசுவரன் முன்னால் நின்றாலும், உறுதியாய் இராம காதையை நயம்பட உரைக்கிறான்.

இராமபிரானிடம் தன் வீரப் பிரதாபங்களைச் சொல்லாது, 'கண்டேன் சீதாப்பிராட்டியை!' என்று மட்டும் சொல்லி மகிழ்ச்சியைத் தூண்டுகிறான்.

தான் நாயகன் அல்ல, இராமபிரானின் தாசானு தாசன் தான் என்பதை முக்கியமான கட்டங்களில் உணர்த்தியதோடு அல்லாமல் நமக்குப் பாடத்தையும் வைக்கிறான்.

அது, பணிவாய் இருப்பது; இயங்குவது. இதை நாம் புரிந்து கொண்டால் போதுமா?

பணிவாய் இருப்பது, இயங்குவது என்பது தன்னம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்ல. அது அனுமனிடம் நிறைய இருக்கிறது.

கடலைத் தாண்டு முன், "இராமபாண இலக்கு போல இலங்கை ஒன்றே குறியாய்க் கொண்டு சீதாப் பிராட்டியைத் தேடுவேன். அங்கு இல்லாவிடில், தேவலோகம், ஆகாயத்திலும் தேடுவேன். சீதாப்பிராட்டி கிடைக்காவிடில் இராவணேசுவரனைக் கட்டிப் பிடித்து இழுத்து வருவேன். எப்படியும் சீதாப் பிராட்டியோடு திரும்புவேன்" - தன்னம்பிக்கை!

சீதாப் பிராட்டி கலங்குவதைச் சகியாது, "இப்போதே இராமபிரானிடம் சேர்த்து விடுகிறேன்" - தன்னம்பிக்கை!

யுத்தம் செய்யாவிட்டால், இராவணேசுவரனைக் காண முடியாது என்பதால், ஒற்றை ஆளாய்ப் போருக்கு அழைக்கிறான் அனுமன் - தன்னம்பிக்கை!

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தர்மம் புரியாது என்றாலும், இராவணேசுவரன் காது கொடுத்துக் கேட்க மாட்டான் என்றாலும், இதமாய் ஆயின் உறுதியாய் "சீதாப் பிராட்டியை இராமபிரானிடம் இணைக்கா விட்டால் அழிந்து போவாய்" என்று உரைக்கிறான் - தன்னம்பிக்கை!

வானரங்களுக்கு முக்கியமானது வால்; நெருப்பு வைத்தாலும் கலங்காது, இலங்கையைப் பகலில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று அனுமன் எண்ணுவது - தன்னம்பிக்கை!

ஆக, பணிவும், தன்னம்பிக்கையும் நிறைந்த ஆயின், அனுமனின் அளப்பரிய சாகசங்களைக் கொண்ட சுந்தர காண்டத்தை நாமும் தினமும் கொஞ்சமேனும் பயின்று, பணிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வோம்.

Friday, November 29, 2019

சுந்தர காண்டம் - 3 - கடல் தாண்டினான்

இராமாயணத்தின் மிகப் பெரிய ஸர்க்கங்களில் ஒன்றான சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கம் பற்றி விரிவாகப் பேசுமுன் அனுமன் கடல் தாண்டிய படலத்தைப் படித்து விடலாம்.

ஜாம்பவனால் தூண்டப்பட்ட அனுமன், இராவணேசுவரனால் எடுத்துச் செல்லப்பட்ட சீதாப் பிராட்டியைக் காண கடல் தாண்டும் முயற்சியில் இறங்கினான்.

அப்படி ஈடுபட்ட போது, மூன்று தடங்கல்கள் / இடையூறுகள் அனுமனுக்கு நிகழ்ந்தன.
1. மைநாக பர்வதம் அனுமனை பூஜிக்க வேண்டிக் கடலில் இருந்து வளர்ந்தது.

2. தேவர்களின் தூண்டுதலின் பேரில், ஸுரஸை அனுமனைத் தன் வாயினுள் புகுமாறு பணித்தது.

3. தனக்கு உரிய ஆகாரம் கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியுடன், ஸிம்ஹிகை என்கிற ராக்ஷஸி அனுமனைக் கொல்ல நினைத்தது.

இம்மூன்றையும் அனுமன் அநாயாசமாய்க் கடந்தான். கடலையும் தாண்டினான் சிறு களைப்பில்லாது.

இவைகளில் உயரிய அர்த்தம் இருக்கிறது எனப் பெரியோர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
எந்த ஒரு நல்ல காரியத்தை (அ) மேலான காரியத்தை நாம் செய்யும்போதும், மூன்று வகை இடையூறுகள் வரும்.

1. உறவினர்கள் - தன்னை வாயு பகவான் இந்திரனிடமிருந்து காப்பாற்றியமையால் மைநாக பர்வதம், வாயுவின் மகனான அனுமனை உபசரிக்கக் கடலில் இருந்து எழுந்தான்.

2. நண்பர்கள் - நேர்மறையான எண்ணம் கொண்டவர்களே நண்பர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் நம்மை நயத்துடன் அணுகி, ஸுரஸையைப் போல, சோதனை செய்து பார்ப்பது, நம் வலிமையை அறிவதற்காக இல்லை; இவன் செய்யப்போகிற காரியத்திற்குத் தகுந்தவனா என்பதை அறியவே.

3. எதிரிகள் - ஸிம்ஹிகை போன்ற எதிரிகள் 'எப்போது வீழ்வான் இவன்?' எனக் காத்துக் கொண்டிருப்பது கண் கூடாய்த் தெரியும். இவர்களையும் மீறித்தான் மேலான காரியங்களை முடித்துக் கொள்ள முடியும்.

இதைத்தான் அனுமன் அவனுக்கே உரிய பாணியில், கடல் தாண்டும் படலத்தின் போது, மைநாக - ஸுரஸை - ஸிம்ஹிகை எதிர்கொள்வதன் மூலம் நமக்குப் பாடம் கற்பிக்கிறான்.

அனுமன் சதா துதிக்கும் இராமபிரானின் முதல் பாணம் தாடகை எனும் பெண் மீதுதான்; அவர் பாதம் பணிந்து, வேறேதும் எண்ணம் செலுத்தாத அனுமன் முதலில் அழித்ததும் ஸிம்ஹிகை எனும் பெண்ணைத்தான். அந்த அளவிற்கு இராமபிரானிடம் தன்னைக் கொடுத்த அனுமனின் தாள் பணிவோம். போற்றுவோம்.

கடல் தாண்டி இலங்கைக்கு அனுமன் வந்து விட்டாலும், முதல் ஸர்க்கத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் சில...

Thursday, November 28, 2019

சுந்தர காண்டம் - 2 - நேர்மறை நோக்கு வாழ்வைத் தருவது

சுந்தர காண்டத்தில் தற்கொலை விளிம்பு வரை செல்லும் இரண்டு பாத்திரங்கள் உண்டு.

எங்கு தேடியும் சீதாப் பிராட்டியைக் காணாது கலங்கி நிற்கும் அனுமன் (ஸர்க்கம் 12-13) வழி தெரியாது தன்னந்தனியாய்ப் புலம்புகிறான். 'கடலைத் தாண்டினேனே, மைனாகப் பர்வதத்தின் நட்பு பூண்டேனே, ஸுரஸையை ஜயித்தேனே, ஸிம்ஹிகையைக் கொன்றேனே, இலங்கை தேவதையை வென்றேனே, இலங்கையில் எல்லா இடங்களிலும் பரிபூர்ணமான சுதந்திரத்துடன் தேடினேனே, ஆனாலும், 'அம்மா'வைக் காணவில்லையே? என்ன செய்வேன்?' என்று அரற்றும் அனுமனின் சோகம் படிக்கும் உங்களையும் பற்றிக் கொள்ளும்.
'இராமபிரானிடம் 'சீதாப்பிராட்டியைக் காணவில்லை' எப்படி இயம்ப முடியும்? இங்கேயே பட்டினி கிடந்து உயிர் துறக்கிறேன்' என்கிற அனுமனின் முடிவு, அசோக வனத்தைக் கண்டவுடன் அடியோடு மாறிப் போகிறது.

இதே போல ராவணேசுவரனால் மிரட்டப்பட்டு, ராக்ஷஸிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு, 'இராமபிரான் எனைக் காக்க வருவாரா?' என்கிற ஐயப்பாடு மிகுந்து, சீதாப் பிராட்டி, 'சரி! பின்னலைக் கொண்டு தூக்கில் தொங்கலாம்' (ஸர்க்கம் 28) என்கிற கொடிய முடிவுக்குத் தள்ளப்படும் கட்டம்.  மிகவும் நெருக்கடியான சூழலில், அனுமன் மூலமாய் இராமாயணத்தைக் கேட்க நேரிடுகிறது; சுப சகுனங்கள் தோன்றுகின்றன. அனுமனுடனான சந்திப்பு சீதாப் பிராட்டியை வலிமை கொள்ளச் செய்கிறது.

நம் அனைவரின் வாழ்விலும் இத்தகைய தருணங்கள் வராமலிருக்கவும், வந்து மீளாது இருந்தாலும், சுந்தர காண்டம் பாராயணம் செய்வது போதுமானது.

வாழ்வை நேர்மறையாய் நோக்கக் கண்டிப்பாய் சுந்தர காண்ட பாராயணம் உதவும்.

Wednesday, November 27, 2019

சுந்தர காண்டம் - 1 - சோகம் நீக்க வல்லது

வான்மீகி இராமாயணத்தில் பால, அயோத்திய, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர என ஏழு காண்டங்கள் உண்டு.

நடுவில் அமைந்திருக்கும் சுந்தர காண்டம் புனிதமானது என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. ஏன்?

1. ஸேநா நாயகன் அங்கதன், வழி நடத்துபவன் ஜாம்பவான், தெற்கே தேடும் வானரக் கூட்டத்தின் - கடலைத் தாண்டி சீதாப் பிராட்டியைக் காண முடியுமா - சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

2. கடல் தாண்டி வந்தாலும், லங்கா தேவதையை வென்றாலும், லங்கா நகரம் முழுவதும் சுற்றி வந்தாலும், சீதாப் பிராட்டியைக் காண இயலாது பிதற்றும் அனுமனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

3. தன் நாயகனை விட்டுப் பிரிந்து, வருவரா, தன்னை மீட்பாரா, மீட்கும் வரை உயிர் மிஞ்சுமா, இதுதான் வாழ்வா, இப்படி வாழ்வது தேவைதானா என மீளாத் துயரில் ஆழ்ந்து, தற்கொலை எண்ணம் வரை சென்ற சீதாப் பிராட்டியின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

4. ராஜ்யத்தைப் பெற உதவி செய்த நண்பன் இராமபிரானுக்குக் கைம்மாறு ஏதும் இதுவரை செய்ய இயலாமல் போனதே என்று பரிதவிக்கும் சுக்ரீவனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

5. 'கண்டேன் சீதையை!' எனும் இரண்டு வார்த்தைகளில் இராமபிரானின் அளப்பரியச் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

உங்களைச் சோகம் பற்றிக் கொள்ளும் தருணங்களில் 'சுந்தர காண்டம்' போதும். வாழ்வின் அருமையையும், பொறுமையின் அவசியத்தையும் மிக அழகாய்க் கற்றுத் தரும்.

உலக வாழ்விலிருந்து உய்வு அடைய, இராமபிரான் - சீதாப் பிராட்டி அருள் கிட்ட, அனுமனின் ஆசிகள் பெற, சுந்தர காண்டம் நிச்சயம் உதவும்.

முந்தைய பதிவுகள்

Followers