Saturday, December 07, 2019

சுந்தர காண்டம் - 11 - காற்றும் நுழையாத இலங்கை

இராவணேசுவரனுடைய இலங்கையை நோட்டமிடுகிறான அனுமன். எங்கு நோக்கினும் காவல்.

கையில் சூலமும், தடியும் ஏந்திய அரக்கர்கள் நிறைந்த இலங்கை கருநாகங்கள் சூழ்ந்த குகையைப் போலத் தோன்றுகிறதாம். கற்பனைக்கும் எட்டாத அழகைக் கொண்டதாய் இருக்கிறதாம்.

இலங்கையையும், திட்டமாக அமைக்கப்பட்ட காவல் கட்டுப்பாடுகளையும், சுற்றியிருந்த பெருங்கடலையும், பயங்கரமான விரோதி இராவணேசுவரனை எண்ணியும் அனுமன் கவலைப்படுகிறான்.

'வானரர்கள் வந்தாலும் பலனில்லை; தேவர்களாலும் வெல்ல முடியாது; நுழையவே முடியாத அரண்களைக் கொண்ட இராவணேசுவரன் ஆண்டு வருகிற இலங்கையைப் பராக்கிரமசாலியான நம் இராமபிரானே வந்தடைந்தாலும், என்ன செய்ய முடியும்?'

'கொடிய அரக்கர்களுடன் சமாதானம் செய்து கொள்ள முடியாது; செழிப்புடன் இவர்கள் இருப்பதால், செல்வத்தையும் கொடுத்து வசப்படுத்த இயலாது; மிகுந்த வீரத்துடன் இருப்பவர்களிடத்தில் கலகம் விளைவிக்க வாய்ப்பு இல்லை; அறிவும் ஆற்றலும் ஒருங்கே கொண்டதால் யுத்தம் என்கிற உபாயமும் எடுபடாது.'

'வானரர்களுக்குள் சக்தி மிகுந்தவர்களான நால்வருக்குத்தான் - வாலி மைந்தன் அங்கதன், நீலன், அரசன் சுக்ரீவன், நான் - இங்கு வரக்கூடிய திறன் உண்டு.'

'ஒருவேளை கடத்தற்கரிய கடலைக் கடந்து வந்தாலும் வானரர் இங்குள்ள காவலர் எனும் பெருங்கடலைக் கடப்பது அரிது' என்று கம்பநாடன் அருளுகிறான்.

காவலின் கொடுமையைக் குறிக்க வான்மீகி முனிவர்,

வாயுப்ரத்ர ந ஞாதஸ்ரேதிதி மதிர்மம

என்கிறார். 'இங்கு இவர்களறியாமல் காற்று கூட நடமாட முடியாது' என்று அனுமன் மூலமாகச் சொல்கிறார்.

(எதிரிகள் இருப்பிடம் தனிமையில் செலொவோர்க்குத் தோன்றும் நியாயமான அச்சம் இது!)

இவ்வாறெல்லாம் சிந்தித்துவிட்டு, அனுமன் 'இருக்கட்டும். சீதாப்பிராட்டி உயிரோடு இருப்பதைத் தெரிந்து கொண்டு, பின்னர் சிந்திப்போம்' என்று மனச் சமாதானம் கொள்கிறான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers