Friday, January 03, 2020

சுந்தர காண்டம் - 39 - கண்டான் சீதாப்பிராட்டியை! (நிறைவுப் பகுதி)

இராமபிரானைத் தேடித் தேடிப் பார்வையால் வானத்தைத் துழாவும் சீதாப்பிராட்டிக்குப் பழைய நினைவுகள் வருவதாகக் கம்பநாடன் அமைத்திருக்கிறான்.

இராமபிரானின் தந்தை தயரதன் தானாகவே முன்வந்து, 'அயோத்திக்கு நீதான் ராஜா!' என்று கூறுகிறான்; மறுநாளே, 'ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய் ஏழிரண்டு ஆண்டின் வா' என்றும் கைகேயி வாயிலாகச் சொல்கிறான்.  அந்த இரு நிலைகளிலும் மலர்ந்த செந்தாமரையின் சித்திரம் போலிருந்த இராமபிரானின் முகத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறாராம் சீதாப்பிராட்டி.

    மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும்
    இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும்
    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
    ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள். 

இன்னொரு சம்பவத்தை நினைவு கூர்ந்தவுடன் அழுகை பொங்குகிறது சீதாப்பிராட்டிக்கு.

ஊரை விட்டு வனத்திற்குச் செல்லும் அரச குமாரனை வழிமறித்து, வறுமையால் வாடும் வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் தானம் கேட்கிறார்.

'உம்மால் பலம் கொண்ட மட்டும் இக்கழியை வீசி எறியும்; எங்கு கழி விழுகிறதோ அது வரையிலுள்ள நிலங்களும், பசுமாடுகளும் உமக்குத் தருவேன்' என்கிறான் இராமபிரான் புன்னகையுடன்.  வயோதிகர் ஆசை மேலிட்டுக் கழியை - உடலை வளைத்து - வீசுவதைக் கண்ட இராமபிரான் சிரிக்கிறார்.  

    பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
    அருத்தி வேதியர்க்கு ஆன் குலம் ஈந்து அவர்
    கருத்தின் ஆசை கரையின்மை கண்டு இறை
    சிரித்த செய்கை நினைந்து அழும் செய்கையாள்.

'கருத்தின் ஆசை கரையின்மை' - ஆசைக்கு அளவுதான் ஏது!

கங்கையைக் கடக்க உதவிய குகனைச் சகோதரனாக்கிக் கொண்டது; சித்திரக் கூடத்தில் பரதனைச் சடைமுடியுடன் கண்டதும் இரக்கம் கொண்டது எல்லாம் சீதாப்பிராட்டியின் நினைவில் தோன்றுகின்றன.

சீதாப்பிராட்டி நினைவில் கொள்வது இராமபிரானின் அழகும் வீரமும் அல்ல; உதார குணம், விரக்தியான மனப்பான்மை, எளியவனுடன் நட்பு, முடியிழக்கக் காரணமாயிருந்த கைகேயி மகனென்றாலும் பரதன் மீதான பாசம் மற்றும் கருணை, இவைகளே சீதாப்பிராட்டியின் மனதில் பதிந்தவை.

அத்தகைய உத்தமியைக் கண்டு அனுமன் ஆனந்தக் கண்ணீர் வடித்து, 'இராமபிரான் மிகவும் கொடுத்து வைத்தவர்' என்று நினைத்து, அவரை வணங்கி, சீதாப்பிராட்டியைக் கண்டுபிடித்த பெருமையில் மகிழ்வோடு மறைந்திருக்கிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers