ஏற்கெனவே எழுதியதுதான். மீண்டும் ஒரு முறை.
கைலாய மலையே பெயர்ந்து, இராவணேசுவரனை நசிப்பிக்க வந்தது போல வந்து கொண்டிருந்தானாம் அனுமன் எனக் கம்பநாடன் அருளினான்.
அனுமனை 'சிவபெருமானின் வடிவம்' என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை துளஸீதாசர்
பெருமானுக்கு. அனுமன் சாலீஸா என்கிற உயரிய தோஹாவில், சிவபெருமான் தான்
அனுமன் என்பதை உறுதிபடச் சொல்கிறார்.
सङ्कर सुवन केसरीनन्दन ।
तेज प्रताप महा जग बन्दन ॥६॥
சங்கர ஸுவன கேசரீ நந்தன |
தேஜ ப்ராதாப மஹா ஜகவந்தன || 6 ||
நீ சிவபெருமானின் அவதாரம். கேசரியின் மகன்.
உனது தேஜஸையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது.
जो यह पढ़ै हनुमान चालीसा ।
होय सिद्धि साखी गौरीसा ॥३९॥
ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா |
ஹோயி ஸித்தி ஸாகீ கௌரீசா || 39 ||
இந்த அனுமன் சாலீஸாவைப் படிப்பவனுக்கு கௌரீயுடன் கூடிய சிவபெருமான் அருள் புரிகிறார்; அதனால், அவன் பரிபூரண நிலையை அடைகிறான்.
கம்பநாடன் சாதாரணமானவனா? அவனும் உணர்ந்தேயிருப்பதால், தோதாகப் பாட்டில் வைத்து விட்டான் இங்கு. இதற்கு முன்னாலும் வைத்தான்.
தன் அரசன் சுக்ரீவனின் துன்பக் கடலை நீக்க இராமபிரான் வந்துவிட்டான் என்பதை அனுமன் எப்படி உரைத்தானாம் சுக்ரீவனிடம்?
"ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்."
ஆலகால நஞ்சையுண்ட சிவபெருமானைப் போல அரிய நடனம் ஆடிக் கொண்டே உரைத்தானாம் அனுமன்.
வான்மீகி முனிவரும் உணர்ந்ததால் தான், அனுமன் சீதாப் பிராட்டியைக் காணாது
துயறுற்று, பின் அசோகவனத்தைத் தேடாது போனோமே என்று வனத்துள் புகுமுன்,
காரிய ஸித்திக்கு வேண்டி, "நமோஸ்து ருத்ர:" எனச் சிவபெருமானை(யும்)
தொழுதானாம் அனுமன் என்கிறார்.
ஆக, சிவன் வடிவில் எழுந்தருளிய அனுமன் வாக்கில் இராமபிரான், இலக்குவன் தொழுதலோடு, சிவபெருமானும் இயற்கையாய் இணைந்து விடுகிறான்.
இது பற்றி நான் முன்பு எழுதியிருந்ததைப் படிக்க:
No comments:
Post a Comment