எல்லோரின் வாழ்க்கையிலும் சோகம் உண்டு; சோகம் இல்லாத வாழ்வில் சுகம் இல்லை.
அப்படிப்பட்ட தருணங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றமும், நட்பும்
நம்மைத் தேற்றி, நம்மைப் புதுப்பித்து, துயரத்தை எதிர்கொள்ளும் வலிமையைத்
தரும்.
அத்தகைய சுற்றமும், நட்பும்
நமக்கு அமையவில்லையெனில், 'தெய்வம் மனுஷ்ய ரூபேன' (எ) 'மனித வடிவில்
இறைவன்' நம்மை ஆட்கொண்டு, நல்ல பாதையினைக் காட்டுவான்; துயரத்தை
நீக்குவான்.
ஆயின் இங்கு அனுமனின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தாண்டுதற்கரிய பெருங்கடலைப் பசுவின் குளப்படி போலத் தாண்டி விடுகிறான்.
இடையில் உண்டான இடையூறுகளை மதி கொண்டு களைகிறான்.
வெல்லுதற்கரிய இலங்காதேவியை இடது முஷ்டியால் குத்தி ஜயிக்கிறான்.
இராவணேசுவரன் மாளிகையில் எவ்வித இடையூறுமின்றி தேடுகிறான்.
இத்தகைய சூழலில் அனுமன் 'தன் நினைத்த காரியம் வெற்றி பெறும்' என்று நினைத்ததில் தவறில்லை.
ஆனால், சீதாப் பிராட்டியைக் காண முடியாத போது தளர்கிறான்.
அனுமன் உறங்காத இரவு நீண்டு கொண்டே போகிறது; அவனது துயரத்தைப் பகிர்ந்து
கொள்ள யாருமில்லை; இருப்பதோ எதிரிகளின் கூடாரம்; சாய்ந்து கொள்ளத் தோள்கள்
இல்லை; புரிந்து கொள்ள யாருமில்லை; அனுமனின் வெற்றியில்தான் வானரர்களில்
உயர்வும், இராமபிரானின் உயிரும் அடங்கியிருக்கின்றன எனும்போது மனநிலை
இன்னும் பிறழ்கிறது.
நமக்குத் துயரம் வரும்போது, இச்சூழலில் தோய்ந்த
அனுமனை நினைக்க வேண்டும். அனுமனின் துயரம் நமக்கு ஈடாகுமா என அரை நொடி
சிந்திக்க வேண்டும். 'இல்லை' என்கிற உண்மையான பதில் நம் இதயத்திலிருந்து
வந்தால், நம் துயரங்களை அனுமன் உதவியைக் கொண்டே எதிர் கொள்ள முடியும்.
'தனியாகப் புலம்புவது' என்பதை வேடிக்கையான சொல்லாக்கி விட்டோம்; ஆனால்,
மேலே கூறியது போல, அது எவ்வளவு வேதனையான சூழலில் அனுமன் மூலம்
வெளிப்படுகிறது என்பதை எண்ணும்போது நமது கண்கள் கசிகின்றன.
வான்மீகி
முனிவர் அருளிய சுந்தர காண்டத்தில், அனுமனின் துயரைப் பிழிந்து தந்த
ஸர்க்கம் 12 மற்றும் 13 ஸர்க்கத்தைத் தினமும் படித்தால், நமது சொல்லொணாத்
துயரங்களிலிருந்தும், பிறவிப் பிணியிலிருந்தும் விடுபடலாம் என்பது
சத்தியமான உண்மை.
No comments:
Post a Comment