Sunday, December 08, 2019

சுந்தர காண்டம் - 12 - இராமதூதன்

தேவ அசுரர்களாலும் வெல்ல முடியாத இலங்காபுரியைப் பார்த்துக் கவலையோடு பெருமூச்சு விடுகிறான் அனுமன்.

தீயவனான இராவணேசுவரன் கண்களில் (இருபது!) படாமல் சீதாப் பிராட்டியைக் காண்பது எப்படி?

இராமபிரானின் காரியம் கெடாதிருக்க, ஜனக மகாராஜாவின் குமாரியை - வேறு ஒருவரும் இல்லாத நேரத்தில் - நான் பார்ப்பதற்கான வழி என்ன?

விவேகமில்லாத தூதனிடம் ஒப்படைக்கப்பட்ட காரியங்கள், உதயத்தில் காணாமல் போகும் இருள் போல அழிந்து விடுகின்றன.

எஜமானன் எது செய்யத் தக்கது, செய்யத் தகாதது என தீர்க்கமாய் ஆராய்ந்து முடிவு செய்து, பின்னர் புத்தியில்லாத தூதனிடம் ஒப்படைக்கப்பட்டால் வெற்றி அடைவதேயில்லை.

ராக்ஷஸர்கள் என்னைக் கண்டு கொள்வார்கெனில், இராவணேசுவரன் அழிவை விரும்பிய உலகப் புகழ் பெற்ற இராமபிரானின் காரியம் உருப்படாது.

ராக்ஷஸ வடிவை எடுத்துக் கொண்டாலும், அவர்களால் அறியப் படாமலிருக்கவே முடியாது எனும்போது, வேறு உருவங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

இந்த ராக்ஷஸ நகரில் இதே உருவத்தோடு உள்ள நுழைய முடியாது. பேராண்மை, மகாவீரர்கள், பலசாலிகளான அரக்கர்கள் - ஜானகியைத் தேடுகிற - என்னால் ஏமாற்றத் தக்கவர்கள்தாம்.

பிறரால் பார்க்கக் கூடிய உருவத்தில் செல்ல இயலாது; அதே போல, சிறு உருவம் கொண்டால் இலங்கை முழுவதும் சுற்றிப் பார்க்க முடியாது.

ஆக, கண்ணுக்குப் புலப்படாத உருவத்தில், இரவு நேரத்தில் இலங்காபுரியினுள் புகுவதற்கும், மகத்தான அருஞ்செயலைப் புரிவதற்கும் தோதான தருணம்.

கதிரவன் மறைந்து, இரவு வந்தவுடன் அனுமன் தன் உடலைப் பூனையளவுக்குச் சுருக்கிக் கொண்டு, ஆச்சரியப்படத்தக்க இலங்காபுரியினுள் பிரவேசித்தான்.

நினைத்துப் பார்க்க முடியாதது; அற்புத வடிவம் கொண்டது; வெண்மை நிறமுள்ள மாடிகளின் வரிசையை உடையது; கீர்த்தி உடையது; இராவணேசுவரனுடைய கைகளால் பாதுகாக்கப்படுவது; பயங்கரமான பலம் கொண்டவர்களும், இரவில் நகரைச் சுற்றி வருபவர்களுமான ராக்ஷஸர்களால் சூழப்பட்டது - இலங்காபுரி - கண்டு அனுமன் கவலை கொண்டான். ஆனால், சீதாப்பிராட்டியைப் பார்ப்பதில் உள்ள ஆர்வத்தால் சந்தோஷமும் கொண்டான்.

இதைத்தான் வான்மீகி முனிவர்...

அசிந்த்யாம் அத்புதாகாரம் த்ருஷ்ட்வா லங்காம் மஹாகபி: |
ஆஸீத் விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதேஹ்யா தர்சனோத் ஸுக: ||

என்கிறார்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers