எல்லோரையும் மனதாரத் துதித்த அனுமன், யோசனையில் ஆழ்கிறான்.
'அநேக ராக்ஷஸர்கள் இருப்பதும், மரங்கள் நிறைந்ததும், செவ்வனே பராமரிக்கப் பட்டிருப்பதுமான இவ்வனம் தேடத் தகுந்தது.'
'இங்கு காவலுக்கு வைக்கப்பட்ட ராக்ஷஸர்கள் மரங்களைக் கடுமையாகப்
பாதுகாக்கிறார்கள்; என் தந்தையான வாயுவும் கடுமையாக இங்கு வீசக் காணேன்.'
'இராமபிரானின் காரியம் வெற்றியடையும் பொருட்டு, இராவணேசுவரன் என்னைக்
காணாமலிருக்க, என் உருவத்தைச் சுருக்கியிருக்கிறேன். நான் தொடங்கும்
இம்முயற்சியில் வெற்றி பெற வேண்டுகிறேன்.' என மீண்டும் இறைவனையும்,
தேவர்களையும், தேவதைகளையும் தொழுத அனுமனை
சீதாப்பிராட்டி நினைவு ஆட்கொள்கிறது.
'நிமிர்ந்த நாசி, வெண்மையான பற்கள், மாசில்லாத, நன்கு விரிந்த தூய தாமரை
இதழையொத்த கண்கள், வெண்ணிலவைப் போல பளீரென ஒளி வீசும் மங்கையர்க்கரசியான
சீதாப்பிராட்டியை எப்போது பார்ப்பேன்?'
'இராவணேசுவரனால் கவர்ந்து வரப்பட்டவளும், தவம் மிகுந்தவளும், மெல்லியலாளுமான கற்பின் கனலியைக் காண்பேனா?'
'ஊடு கண்டிலென் என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி'.
இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை
பொழிந்தனர் உவந்தார்,
என்று, சோலைபுக்கு எய்தினன்
'அசோகவனத்தில் சீதாப்பிராட்டி தென்படவில்லையெனில், திரிகூட மலையிலுள்ள
இலங்கையைப் பாழாக்கி விட்டு, நான் இறப்பேன்' என்று நினைத்துக்கொண்டே
அசோகவனத்தில் நுழைகிறான் அனுமன்;
தேவர்கள் பூமாரி பெய்தனராம் என்கிறான்
கம்பநாடன்.
No comments:
Post a Comment