தொங்குகின்ற
மேகத்தை ஒத்தது; அகலமான முடிப்பகுதியை உடைய லம்பம் எனும் மலையில் அமைந்தது;
அழகிய வனம் - நீர்நிலைகளை உடையதுமான இலங்காபுரியில் இரவு வேளையில் அனுமன்
நுழைகிறான்.
செழுமையான இலங்காபுரி அலங்கரிக்கப்பட்ட பெண்ணை போல
இருக்கிறதாம்; இரத்தினமயமான பிரகாரங்களே ஆடைகள்; பசு-குதிரை கட்டும்
தொழுவங்களே காதணிகள்; ஆயுதசாலைகளே மார்பகங்கள் - என தீபங்களால் ஒளி
வீசுகின்ற மாளிகைகளாலும், இருள் விலகிப் போயிருந்ததுமான நகரத்தை அனுமன்
பார்க்கிறான்.
இப்படி மெள்ள மெள்ள
நகர்ந்து செல்லும் அனுமனை ஒரு காவற்காரி நின்று அதட்டுகிறாள்; இலங்காபுரியே
உருவாகிவந்த ஊர் தேவதை எனத் தோன்றுகிறது.
கம்பநாடன் ஐந்து பாடல்களில் இலங்காதேவியை வர்ணிக்கிறான்.
அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள்
அரவு எல்லாம் அஞ்சும் உவணத்தின் வேகம் மிகுத்தாள்
அருள் இல்லாள்!
ஐந்து நிறங்களைக் கொண்ட சேலையை அணிந்தவளும், எல்லாப் பாம்புகளும்
பயப்படும் கருடனைப் போல வேகம் கொண்டவளுமான இவளிடம் கருணையே இல்லையாம்!
அனுமன் தான் 'வெறுமனே' நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்
என்று கூறியதைக் கண்டு, சினம் கொண்டு, பெருத்த சப்தத்தை எழுப்பி,
உள்ளங்கையால் அனுமனைப் பலமாக ஓங்கி அறைகிறாள்.
பெண் என்பதால் அதிகக் கோபமடையாத அனுமன், அவளை - இடது கை விரல்களை மடக்கி, முஷ்டியாகச் செய்து - விளையாட்டாகத் தாக்குகிறான்.
அவள் நிலைகுலைந்து, கீழே விழுகிறாள். தன்னை நிலைப் படுத்திக் கொண்டு அனுமனை வேண்டுகிறாள்.
'தயவு செய்து என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். என்னைப் பிழைத்துப் போக விடுங்கள்.'
'வானர தலைவ! ஒரு உண்மையை உரைக்கிறேன். முன்னர் பிரம்மதேவன், 'எப்போது ஒரு
வானரன் உன்னைப் பராக்கிரமத்தினால் அழிக்கிறானோ, அப்போது
இராக்ஷஸர்களுக்குப் பெரும் அழிவு வரப் போகிறது என்பதைப் புரிந்து கொள்வாய்'
வரத்தை நினைவு கூர்கிறேன்.'
'வானரங்களில் முதல்வனே! உமது இஷ்டப்படி
இலங்காபுரியில் எங்கு வேண்டுமானாலும் போய், என்னென்ன காரியங்களைச்
சாதித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைச் செய்து
கொள்ளுங்கள். முக்கியமாய் நீங்கள் பார்க்க விரும்பும் சீதாப் பிராட்டியைத்
தேடுங்கள்' என்கிறாள் இலங்காதேவி.
மைநாக மலை, ஸுரஸை, ஸிம்ஹிகை
இவர்களோடு இலங்காதேவியையும் வென்ற அனுமன், 'சீதாப் பிராட்டியைப்
பார்ப்பதற்கானச் சுப சகுனங்களே இவை' என்று மனதில் எண்ணிக் கொள்கிறான்.
No comments:
Post a Comment