முத்து, மணிகள் கோர்த்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவள்;
இராவணேசுவரனுடைய மாளிகையையே தனது ஒளியினால் அழகு செய்கின்றவள்;
பொன்னிறமுள்ளவள்;
ராவணனுக்குப் பிரியமானவள்;
அந்தப்புர ராணி;
அழகிய தோற்றமுள்ளவள்.
இராவணேசுவரனுடைய மனைவி மண்டோதரி துயிலும் நிலை கண்ட அனுமன் அவளுடைய
உருவம்-இளமை காரணமாய் சீதாப்பிராட்டி என்று எண்ணி விடுகிறான். அது
சந்தோஷமாய் வெளிப்படுகிறது.
தோளைத் தட்டுகிறான்;
வாலை முத்தமிடுகிறான்;
ஆனந்தக் களிப்பில் கூத்தாடுகிறான்;
பாடுகிறான்;
உல்லாசமாக நடக்கிறான்.
இப்படி வானரர்களுக்குச் சுபாவமான குணத்தைக் காட்டுவது போலத் தூண்களில் ஏறி, மேலிருந்தவாறு, பூமியில் குதிக்கிறான் அனுமன்.
அனுமனின் இந்நிலையை மிக அழகாக வான்மீகி முனிவர் சித்தரிக்கிறார்.
ஆஸ்போடயாமாஸ சுசும்ப புச்சம்
நநந்த சிக்ரீட ஜகௌ ஜகாம |
ஸ்தம்ப ஆரோஹாந் நிபபாத பூமௌ
நிதர்ஸ்யந் ஸ்வாம் ப்ரக்ருதிம் கபீநாம் ||
மிகுந்த அறிவு கொண்ட அனுமன் இந்நினைவிலிருந்து உடனே விடுபடுகிறான்.
'இராமபிரானைப் பிரிந்தவள் உறங்கத்தான் முடியுமா? அல்லது உணவு செல்லுமா?
அலங்காரம் செய்து கொள்ளத்தான் தோன்றுமா? ஆக, இவள் சீதாப்பிராட்டி அல்ல'
எனத் தெளிகிறான்.
கம்பநாடன் அனுமனுக்கு இத்தகைய நிலை இல்லை.
சீதாப்பிராட்டி என்று நினைக்கிறான்; பின் உடனே தெளிந்து விடுகிறான். வேறு
சில குறிகளையும் அவளிடத்துக் காண்கிறான்.
இலக்கணங்களும் சிலஉள; என்னினும்
எல்லைசென்று உறுகில்லா
அலக்கண் எய்துவதுஅணியது உண்டு; என்று
எடுத்து
அறைகுவதுஇவள் யாக்கை;
இவளிடம் பெண்ணின் நல்ல இலக்கணங்கள் உள்ளன; என்றாலும், இவளின் உடல் மொழி,
முடிவைச் சென்று சேராத துன்பத்தை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை
அறிவிக்கின்றதாம் அனுமனுக்கு.
ஆக, இவள் வேறு எவளோ என்று நிச்சயித்து மேலே செல்லுகிறான் அனுமன்.
என் குறிப்பு:
சீதாப்பிராட்டியைப் போல இராவணேசுவரனின் மனைவி மண்டோதரி மகா பதிவிரதை;
இதனால்தான், இராமபிரானின் குறிப்பு (சீதாப்பிராட்டியின் உருவம் - இளமை)
பெரும்பான்மையாய் மண்டோதரிக்கும் பொருந்துகிறது. அதனால்தான் அனுமனும்
குழம்புகிறான்.
No comments:
Post a Comment