Tuesday, December 31, 2019

சுந்தர காண்டம் - 36 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டியின் துயரையும் கற்பு நிலையினையும் அனுமன் கண்ட காட்சியாகவே வான்மீகி முனிவர் அமைத்திருக்கிறார்.  ஆயின் கம்பநாடன், சீதாப்பிராட்டியின் புறக்காட்சியையும், மனநிலையையும், அனுமன் காண்பதற்கு முன்பே படம் பிடித்து விடுகிறான்.  

அரக்கியர்கள் நடுவில் அமையும் சீதாப்பிராட்டி தனக்குத் தோன்றிய நற்சகுனங்களைக் கூறியவுடன், திரிசடை தான் கண்ட கனவினை விளக்குகிறாள்.  இராமபிரானை எண்ணி, எண்ணி ஏங்கியும், கொல்லாமல் கொல்லும் நினைவுகளுடன் மனம் நொந்த சீதாப்பிராட்டியின் உண்மை நிலை விளங்கப் பெறுகிறது.   இதன் பின்பே அவரின் இருக்குமிடத்தை அனுமன் காண்பதாக அமைக்கிறான் கம்பநாடன்.


இதனாலேயே சீதாப்பிராட்டியின் தூய்மையைக் கண்டு அனுமன் உயர்வாகப் பேசிக்கொண்டதைச் சுருக்கமாக அமைத்துவிடுகிறான் கம்பநாடன். 


காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் 

ஏசுண்ட தில்லையாள்; அறத்துக்(கு) ஈறுண்டோ? 

சீதாப்பிராட்டியின் கற்பும் காதாலும் காத்து இருப்பதால்,  தர்மத்திற்கு என்றும் இடையூறு இல்லை என்றுத் தெளிகிறான் அனுமன்.


வான்மீகி முனிவர் இதையே,


பொன்னிற அங்கங்களையுடையவளும், இராமபிரானின் பிரியத்திற்குப் பாத்திரமான பட்டத்து அரசியும்,  கற்பு நெறியிலிருந்து பிறழாதவளும்


என்கிறார்.


'தன்னைச் சேர்ந்த பெண்ணைக் காப்பாற்றாது விட்டு விட்டேனே?' என்று இரக்கம்;


'தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பது என்கிற கொள்கை தவறிப்போனதே?' என்று உருக்கம்;


'அக்னி சாட்சியாய் மணந்தவரை இழந்தேனே' என்று சோகம்;


'பிரிய சகியைப் பிரிந்தேனே' என்று காமம்;


என எவர் பொருட்டு இராமபிரான் நான்கு விதங்களாகத் தவிக்கிறாரோ அவரே இவர்.


சீதாப்பிராட்டியின் மனம் இராமபிரானிடத்திலும், இராமபிரானின் மனம் சீதாப்பிராட்டியிடத்திலும் நிலைத்திருக்கிறது.  அதனால்தான் இருவரும் இதுநாள் வரை உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


என அனுமன் இன்னும் வியந்து கொண்டுதானிருக்கிறான்.

Monday, December 30, 2019

சுந்தர காண்டம் - 35 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

அனுமன் சீதாப்பிராட்டியைக் கூர்ந்து கவனிக்கிறான். இராமபிரான் சொன்ன அடையாளங்களைக் கொண்டு இவர் சீதாப்பிராட்டி என ஊகித்து, மன அமைதி கொள்கிறான்.


‘எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன் உரையோடு மாறு கொண்டில,

அவள் எந்தெந்த அணிகலன்களை அணிந்து கொண்டிருந்தாளோ அவைகள் மரங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன; அவைகளை அணிந்த அடையாளம் அவரது கைகளில் தெரிகின்றன.

மேலாடை மஞ்சள் நிறமாயிருக்கிறது; இராவணேசுவரன் அவரை அபகரித்து எடுத்துச் சென்ற போது, ஓர் ஓரத்தைக் கிழித்து, அணிகலன்களை அதில் வைத்துக் கட்டி, கீழே வீசிய துணியும் மஞ்சள் நிறம்தான். நெடுநாட்கள் ஒரே ஆடையை அணிந்திருப்பதால் நிறம் மங்கியிருக்கிறது.

எந்தெந்த அணிகலன்களைக் கழற்றி அன்று எறிந்தாளோ அவைகள் இன்று இங்கு இல்லை; மற்றும் நான் அன்று யாரைப் பார்த்தேனே அவருக்கும் இவருக்கும் பேதம் எதுவுமில்லை.

மண்டோதரியைக் கண்ட அனுமன் நிலையை இப்போது கம்பநாடன் கொணர்கிறான். சீதாப்பிராட்டியைக் கண்டு கொண்ட அனுமன்

ஆடினன், பாடினன், ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்; உலாவினன் - உவகைத் தேன் உண்டான்.

என் வணக்குத்துக்குரிய, போற்றுதலுக்குரிய பிராட்டியைக் கண்டுகொண்டேன்; அறம் என்றும் அழியாது; நானும் அழிய மாட்டேன் என்கிறான் அனுமன்.

தேடினேன் கண்டெனென் தேவியை!
வீடினது அன்று அறன்; நானும் வீகலேன்.

இலக்குமி தேவியே சீதாப்பிராட்டியாய் அவதரித்தவர்; அவரைக் காணாது துவண்ட அனுமன் கூறியது 'வீடுவேன்' (இறப்பேன்); ஆயின் சீதாப்பிராட்டியைக் கண்டவுடனேயே, நம்பிக்கை வளர்ந்து, 'வீகலேன்' (இறவேன்) என்கிறான் அனுமன்.

ஆக, தேவியைக் கருத்தில் கொள்வோர்க்கு என்றும் அழிவில்லை எனக் கொள்ளலாம்.

Sunday, December 29, 2019

சுந்தர காண்டம் - 34 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சுந்தர காண்டம் முதல் ஸர்க்கம் - அனுமன் கடலைத் தாண்டியது.

சுந்தர காண்டம் 2வது ஸர்க்கம் துவங்கி 11வது ஸர்க்கம் வரை - அனுமன் இலங்காபுரியில் சீதாப் பிராட்டியைத் தேடியது. வான்மீகி முனிவரும், கம்பநாடனின் வர்ணனையில் இலங்காபுரி நம் கண்களில் நின்றாலும்...இதன் பின்னால் இரு சேதிகள் இருக்கின்றன.

சுந்தர காண்டம் 14 வது ஸர்க்கம் - அசோகவனம்.

சீதாப்பிராட்டியின் சோகம் ஒன்று என்பதைப் பார்த்து விட்டோம்.

இரண்டாவது, அனுமனின் கூர்ந்த அறிவுத் திறன். வான்மீகி முனிவரும், கம்பநாடனும் அனுமனின் கண்கள், வாய்மொழி, நடத்தை மூலம் நம்மை இலங்காபுரியை அனுபவிக்கச் செய்கிறார்கள்.

சாதாரணத் தூதுவன் என்பதிற்கு மேலாக அனுமன் பல அநாயாச காரியங்களைச் சுந்தர காண்டத்தில் செய்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

'நாளை இராவணேசுவரன் எங்கு வேண்டுமானாலும் சீதாப்பிராட்டியை ஒளித்து வைக்கலாம்' என்கிற எண்ணம் அனுமனுக்குள் உழன்று கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இண்டு இடுக்கு விடாது இலங்காபுரியில் தேடுவதாகவும், அழகை வியப்பதாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது சுந்தர காண்டம். Observation எனும் ஆங்கிலச் சொல்லை இங்கு பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

12-13 ஸர்க்கங்கள் அனுமனின் துயர் நிலையைச் சொல்கின்றன. அதுவும் அனுமனின் வாயிலாகவே. ஆக, எல்லாவற்றையும் அனுமன் மூலமாகத் தெரிந்து கொள்கிறோம்.

அவனுடைய ஆற்றல், அறிவு, மதிநுட்பம், மண்டோதரியைக் கண்டவுடன் மகிழ்தல், பின் சீதாப்பிராட்டியைக் காணாது கலங்குதல் என அனுமனுடன் நாம் பயணித்து, அதிசயித்து, தொழுது அவன் தாள்கள் போற்றுகிறோம்.

Saturday, December 28, 2019

சுந்தர காண்டம் - 33 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

இராமபிரான் சொன்ன அடையாளங்களை வைத்து இவர்தான் சீதாப்பிராட்டி என்று ஊகிக்கிறான் அனுமன். ஆனால், அதை எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது? அவர் படும் துயரங்கண்டு அவரே சீதாப்பிராட்டி என்று நிச்சயிக்கிறான் அனுமன். துயரமே பேரடையாளம்!


து:க்கேன புபுதே ஸீதாம் ஹனுமான் அனலங்க்ருதாம் |
ஸம்ஸ்காரேண யதாஹீனாம் வாசம் அர்த்தாந்தரம் கதாம் ||

முன்பு அழகை ஒரு அடையாளமாய் வைத்து மண்டோதரியைப் பார்த்தவுடன் சீதாப்பிராட்டி எனக் கொண்ட அனுமன், இப்போது காரணம் கொண்டு துயர் வடியும் பெண்ணே சீதாப்பிராட்டி எனக் கொள்கிறான்.

பதினைந்து ஸர்க்கங்களுக்கும் சிகரமாய் விளங்கும் ஸ்லோகம் இது எனக் கொள்ளலாம். 'து:க்கேன என்ற சொல்லுக்கு 'சிரமப்பட்டு' என்கிற அர்த்தமும் உண்டு.

இரண்டாவது வரியையும் சேர்த்துப் படித்தால், 'அர்த்தம் சிதைந்து, குலைந்து மாறுபட்டு இருக்கும் சொல்லைப் புரிந்து கொள்வது போல சிரமப்பட்டுப் புரிந்து கொண்டான் சீதாப்பிராட்டியை' என்று பொருள்படும்.

'இராமபிரான் வந்துதான் என்ன பயன்?' என்கிற அளவிற்குப் படைபலம், காற்றுப் புகமுடியாத காவல், தேவலோகம் ஒத்த வியக்கத்தக்க செல்வம், காதல் புரியும் அரம்பையர் போன்ற மகளிர், கண்களை மயக்கும் அழகு கொண்ட அசோக வனம், இவைகளையெல்லாம் சுவையோடு, ரசனையோடும் வான்மீகி முனிவர், கம்பநாடன் வர்ணித்தது எதற்காக?

சீதாப்பிராட்டியின் சோகத்தை எடுத்துக் காட்டும் நோக்கத்தோடுதான்.

இத்தகைய திரண்ட செல்வத்தைப் புறக்கணித்து, இராமபிரான் பிரிவின் சோகம்.

இத்தகைய காவலைக் கண்டு அச்சமுறாத சோகம்.

இத்தகைய உல்லாசமான சூழலில் தனித்து நிற்கும் சோகம்.

சிறை வைத்த இடமோ அ-சோக-வனம்!  

Friday, December 27, 2019

சுந்தர காண்டம் - 32 - கண்டான் சீதாப்பிராட்டியை (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டி எப்படியிருக்கிறாள்?

மான் இளம் பேடை அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள்

இளமையுடைய பெண் மான் கூரிய பற்களைக் கொண்ட புலிக்கூட்டத்தில் சிக்கியது போலிருந்தாள்.


சீதாப்பிராட்டி செய்கைகள் என்னவாயிருந்தன?

பூமியில் விழுதல்; தேம்பி அழுதல்; அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; அஞ்சுதல்; அழுதல்; வருந்துதல்; இராமபிரானை நினைத்து நினைத்து வணங்குதல்; தளர்ச்சியடைதல்; உடல் நடுக்கம் அடைதல்; துன்பத்தால் சிதைந்து பெருமூச்சு விடுதல்; புலம்புதல் அன்றி வேறு ஏதும் செய்யாதவளாக இருக்கிறாள் சீதாப்பிராட்டி.


சீதாப்பிராட்டியின் துயர் நிலை எவ்வாறிருந்தது?

கண்களில் இடையறாத அருவி போலக் கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருப்பதால்

'நெடும் இணை கண்கள், நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் மழைக்கண்'

என்கிறான் கம்பநாடன். மேகம் இருந்தால் தானே மழை வரும், ஆக, கண்களை மேகங்களாய்க் கொள்கிறான்.

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும்,கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;


கருமை நிறங்கொண்ட - கரிய மேகம் முதல் கண்களில் தீட்டும் மை வரை - எதனைக் கண்டாலும் இராமபிரானின் நினைவிற்கு வந்து, கடலில் புகும்படியான அளவிற்கு கண்ணீர்ப் பெருக்கு ஊற்றெடுக்கிறது.

Thursday, December 26, 2019

சுந்தர காண்டம் - 31 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டி நிலை எப்படி இருக்கிறது?

மெலிந்திருப்பதால், இன்னார் என்று ஊகித்து அறியக்கூடிய உருவம். புகைக்கூட்டத்தால் மறைக்கப்பட்ட அக்னிக் கனல். அழுக்கடைந்த பட்டாடையை உடுத்தியவள்.

அழுக்குப் படிந்தவள்; அலங்காரம் இல்லாதவள்; தாமரை மலர்கள் இல்லாத குளத்தைப் போன்றவள். இலக்குவனை அவமதித்துப் பேசியதால் உண்டான வெட்கம் உடையவள். சோகத்தால் தவித்துக் கொண்டிருப்பவள்; வாடிப் போயிருப்பவள்.

விரதங்களையும், அன்றாட அனுஷ்டானங்களையும் மேற்கொண்டிருப்பவள்; அங்காரகனால் (செவ்வாய்க் கிரகம்) ஆட்கொண்டிருக்கும் ரோஹிணி நட்சத்திரத்தைப் போன்றவள். கண்ணீர் வழியும் முகம்; நலிவை அடைந்தவள்; உணவு உட்கொள்ளாததால் இளைத்தவள்.

இராமபிரானையே என்றும் துதிப்பதால், அவரைப் பிரிந்ததால் உண்டான சோகத்தில் இருப்பவள். எளியவள்; எப்போதும் துக்கத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவள்.

தன்னிடம் அன்பு கொண்ட மக்களைக் காணாதவள்; இராக்ஷஸிகளின் கூட்டத்தையே பார்த்துக்கொண்டு இருப்பவள்; தன் கூட்டத்தை விட்டு விலகிப் போய், நாய்களின் கூட்டத்தில் சேர்ந்த பெண்மானைப் போன்றவள்.
பின்பாகம் தொடும் அளவுக்கு நீண்ட கருநாகம் போன்ற ஒற்றைப் பின்னலை உடையவள்; மழைக்காலங்களில் கரும்பச்சையான மரங்கள் கொண்ட பூமி போன்ற கருங்கூந்தலால் அழகாக விளங்குபவள்.

சுகத்தை அனுபவிக்க தக்கவள்; சோகத்தில் மூழ்கியிருப்பவள்.

கம்பநாடன் விவரிப்பும் இப்படித்தான் சொல்கிறது.

Wednesday, December 25, 2019

சுந்தர காண்டம் - 30 - கண்டான் சீதாப்பிராட்டியை!

சிம்சுபா மரத்தில் மறைந்து கொண்டு அனுமன் சுற்றுப் புறத்தை நோக்குகிறான்.

எல்லாக் காலங்களுக்கும் உரித்தான பூக்கள், பழக்குலைகள் தொங்கும் மரங்கள், மலர்ந்த மலர்களையுடைய அசோக மரங்களின் ஒளியினால் அசோகவனம் மிகப் பிரகாசமாய்த் தோன்றுகிறது.

இந்திரனுடைய நந்தனம் என்கிற வனத்தை ஒத்திருக்கிறது; குபேரனுடைய ரதத்தைப் போலிருக்கிறது என்று உவமைக்குத்தான் சொல்ல முடியுமே தவிர, இவைகளை விட உயர்ந்ததாயும், இராவணேசுவரனின் பிரியத்திற்கு உகந்ததாயும் இருக்கிறது அசோகவனம்.

தான் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் ஒரு தேவாலயத்தைக் காண்கிறான் அனுமன்; ஆயிரம் தூண்கள், கைலாச மலை போன்ற வெண்மை, பவளப் படிக்கட்டுகள், உருகிய தங்கத்தால் ஆன மேடைகள், மாசு மருவில்லாத கண்களைப் பறிக்கும் அழகுடன் மிகம் கூர்மையாயும், ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் இருக்கிறதாம் (skyscraper).

அழுக்கடைந்த ஆடை அணிந்தவளும், அரக்கியர்களால் சூழப்பட்டவளும், உணவு சரியாக உட்கொள்ளாததால் இளைத்தவளும், தளர்ந்தவளும், அடிக்கடிப் பெருமூச்சு விடுபவளும், தேய்பிறையின் இரண்டாம் நாள் - சிறு கோடாய்த் தோன்றும் - சந்திரன் போல் ஒளியிழந்து அடையாளம் காண முடியாதவளும், களங்கமில்லாதவளுமான ஒரு மங்கையைக் காண்கிறான் அனுமன் என்கிறார் வான்மீகி முனிவர்.

கம்பநாடன் 'கல்மருங்கெழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நன்மருந்து போல' என்கிற உவமையை அழகாகச் சேர்த்து, சீதாப்பிராட்டியின் நிலையை எளிதாகச் சொல்லி விடுகிறான்.

அரக்கியர் சூழ்ந்து நெருக்கிய நிலையில் வாடிய சீதாப்பிராட்டி, கல்லிடைய முளைத்து, ஒரு துளி நீர் எதிர்பார்த்து, வறண்டு நிற்கும் அரியதோர் மூலிகையைப் போல இருந்தாளாம்.

செடிக்கு நீர் எப்படியோ அப்படி மனிதர்க்கு நம்பிக்கை என்பதையும் இங்கு நினைவூட்டுகிறான் நம் கம்பன்.

அனுமத் ஜயந்தி நன்னாளில், சீதாப் பிராட்டியைக் கண்ட அனுமன் தாள்களில் வீழ்ந்து பணிந்தோமாயின், வாழ்வின் மீதான நேர்மறையான நம்பிக்கை கூடும் என்பதில் ஒரு துளி ஐயமுமில்லை.

Tuesday, December 24, 2019

சுந்தர காண்டம் - 29 - அசோகவனம்

கம்பநாடன் ஒரே பாடலில் 'அசோகவனத்தில் நுழைந்து விட்டான் அனுமன்' என்கிறான்; ஆயின், வான்மீகி முனிவர் ஸர்க்கம் 14 (51 ஸ்லோகங்கள்) முழுவதையும் அசோகவன வர்ணனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் சுவாமிகள் மற்றும் கீதா பிரஸ் உரையும் படிக்கும்போது வான்மீகி முனிவரின் அபரிமிதமான ரசனையை வியக்கவே தோன்றுகிறது.

வசந்த காலத் துவக்கம்; அனுமன் மதிற்சுவரில் இருந்தபடி பலவித மரங்களைக் காண்கிறான்; இராமபிரான் தொடுத்த அம்பினைப் போல மரச்சோலைக்குள் பாய்கிறான் அனுமன்.

தூங்கிக் கொண்டிருந்த பறவைகளை எழுப்ப, அவைகள் பறக்கத் துவங்க, இறக்கைகளால் அடிக்கப்பட்ட மலர்கள் அனுமன் மேல் மாரியாய்ப் பொழிய, மலர்களான மலை போல விளங்குகிறான் அனுமன்.

அவன் வேகத்தால் மலர்கள்/இலைகள்/பழங்களை பூமியில் விழுகின்றன. இவைகள் இல்லாத மரங்கள், எல்லாவற்றையும் இழந்த சூதாடிகள் போல வெறுமையாய் நிற்கின்றனவாம்.

ஏராளமான கொடிகள் சூழ்ந்த, சுற்றிலும் பொன் மேடைகள் அமைக்க்பட்ட, தங்க நிறத்தையொத்த, கிளைகளின் நுனியில் மலர்களைக் கொண்ட, அழகியதும் சிவந்த முளை-தளிர்க்ளைக் கொண்ட, இலைகள் அடர்ந்துள்ள சிம்சுபா மரத்தைக் கண்ட அனுமன் அதில் ஏறிக் கொள்கிறான்.

பறவைக் கூட்டங்கள் நிறைந்த இந்த தாமரை ஓடை நன்றாயிருப்பதால்,

காட்டு விலங்குகளிடம் அன்பு காட்டும் தன்மை இயல்பாகவே இருப்பதால்,

(காலை) சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்வதற்காக,

சீதாப்பிராட்டி இங்கு நிச்சயம் வருவார் என்கிற நம்பிக்கையுடன் சிம்சுபா மரத்தில் மறைந்திருக்கிறான் அனுமன்.

Monday, December 23, 2019

சுந்தர காண்டம் - 28 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (நிறைவுப் பகுதி)

எல்லோரையும் மனதாரத் துதித்த அனுமன், யோசனையில் ஆழ்கிறான்.

'அநேக ராக்ஷஸர்கள் இருப்பதும், மரங்கள் நிறைந்ததும், செவ்வனே பராமரிக்கப் பட்டிருப்பதுமான இவ்வனம் தேடத் தகுந்தது.'

'இங்கு காவலுக்கு வைக்கப்பட்ட ராக்ஷஸர்கள் மரங்களைக் கடுமையாகப் பாதுகாக்கிறார்கள்; என் தந்தையான வாயுவும் கடுமையாக இங்கு வீசக் காணேன்.'

'இராமபிரானின் காரியம் வெற்றியடையும் பொருட்டு, இராவணேசுவரன் என்னைக் காணாமலிருக்க, என் உருவத்தைச் சுருக்கியிருக்கிறேன். நான் தொடங்கும் இம்முயற்சியில் வெற்றி பெற வேண்டுகிறேன்.' என மீண்டும் இறைவனையும், தேவர்களையும், தேவதைகளையும் தொழுத அனுமனை 
சீதாப்பிராட்டி நினைவு ஆட்கொள்கிறது.

'நிமிர்ந்த நாசி, வெண்மையான பற்கள், மாசில்லாத, நன்கு விரிந்த தூய தாமரை இதழையொத்த கண்கள், வெண்ணிலவைப் போல பளீரென ஒளி வீசும் மங்கையர்க்கரசியான சீதாப்பிராட்டியை எப்போது பார்ப்பேன்?'

'இராவணேசுவரனால் கவர்ந்து வரப்பட்டவளும், தவம் மிகுந்தவளும், மெல்லியலாளுமான கற்பின் கனலியைக் காண்பேனா?'


'ஊடு கண்டிலென் என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி'.
இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை
பொழிந்தனர் உவந்தார்,


என்று, சோலைபுக்கு எய்தினன்

'அசோகவனத்தில் சீதாப்பிராட்டி தென்படவில்லையெனில், திரிகூட மலையிலுள்ள இலங்கையைப் பாழாக்கி விட்டு, நான் இறப்பேன்' என்று நினைத்துக்கொண்டே அசோகவனத்தில் நுழைகிறான் அனுமன்; 

தேவர்கள் பூமாரி பெய்தனராம் என்கிறான் கம்பநாடன்.

Saturday, December 21, 2019

சுந்தர காண்டம் - 27 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

'உயிர் உள்ளவரைதான் நம்பிக்கை இருக்கும்' என்கிற பொருளுக்கேற்ப, அனுமன் தன்னைத் தேற்றிக் கொண்டு, மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்கும்போது...

கள் உறையும் மலர்ச்சோலை
அயல் ஒன்று கண்ணுற்றான்.

என்று கம்பநாடனும்,

அஸோகவநிகா சேயம் த்ருஸ்யதே

என்று வான்மீகி முனிவரும் அருளிய அசோகவனம் தென்படுகிறது. மனதில் தெம்பும் பிறக்கிறது.

மாடு நின்ற அம் மணிமலர்ச்
சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல்
தீரும் என் சிறுமை;

பக்கத்தில் நிமிர்ந்துள்ள அழகிய மலர்கள் மலர்ந்துள்ள சோலையை (வனத்தை) அடைந்து, சீதாபிராட்டியைத் தேடி கண்டு கொண்டேன் எனில் என் துன்பம் தீர்ந்தே போகும் என்று நினைக்கிறான் அனுமன்.

'அஷ்ட வசுக்கள், மஹா ருத்ரர்கள், அச்வினீ தேவதைகளை வணங்குகிறேன். அரக்கர்களின் துயர் பெருக வேண்டி, இவ்வனத்துள் நுழையப் போகிறேன்.'

'எல்லா அரக்கர்களையும் வென்று, இஷ்வாகு குலத்திற்கு அதிகமாய் இன்பத்தை அருளும் சீதாப்பிராட்டியை - தவம் செய்தவரிடம், தவத்தால் மகிழ்ந்த இறைவன், அத்தவத்தின் பலனைக் கொடுப்பது போல - இராமபிரானிடம் சேர்க்கப் போகிறேன்.'

அனுமன் ஆழ்ந்து சிந்திக்கும்போது, தான் செய்த தவறை - மகேந்திர மலையில் இருந்து புறப்பட்டபோதும் இராமபிரான் உட்பட யாரையும் வணங்காததுதான் இந்நிலைக்குக் காரணம் - உணர்ந்து, மனப்பூர்வமாகவும், பணிவாகவும் தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றான்.

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்யை ஜனகாத் மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமா நிலேப்ய
நமோஸ்து சந்த்ரார்க்க மருத் கணேப்ய: ||

'இராமபிரான், இலக்குவன், சனகனின் மகளான சீதாப்பிராட்டி, சிவபெருமான், இந்திரன், யமதர்மராஜா, வாயு, சூரியன், சந்திரன், மருத் கணங்களுக்குப் பணிவான வணக்கங்களை அனுமன் தெரிவித்தான்' என்று வான்மீகி முனிவர் கூறுவார்.

இந்தச் சுலோகத்தைத் தினமும் படித்தல் நமக்கு நன்மை பயக்கும்; முக்கியமாய், நாம் எதையேனும் தொலைத்து விட்டு, தேடிக் கிடைக்காது போனால், இதைச் சொன்னால் அனுமனுக்குச் சீதாப்பிராட்டியின் தரிசனம் கிட்டியது போல நமக்கு அப்பொருள் கிடைத்து விடும் என்கிறான் என் நண்பன் Ganapathy Subramanian Sundaram.

சுந்தர காண்டம் - 26 - நம் துயரம் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

குழப்பமும், துயரமும் கலந்து கலங்கிய அனுமன் தைரியத்தை வளர்த்துக் கொள்கிறான்.

'சீதாப்பிராட்டியை அபகரித்த குற்றத்திற்காக இராவணேசுவரனைக் கொல்லப்போகிறேன் (அல்லது) இராவணேசுவரனைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி, பெருங்கடலைத் தாண்டி, - வேள்விச் சாலையில் சிவபெருமானை வேண்டிக் கொண்டு பலி ஆட்டை ஸ்தம்பத்தில் கட்டுவதைப் போல - இராமபிரானுக்குச் சமர்ப்பணம் செய்து விடுகிறேன்.'

சிவபெருமான் நினைவூட்டல் இயல்பாக நிகழ்கிறது.

இதையே கம்பநாடன் வேறு விதமாய் வெளிப்படுத்துகிறான்.

வல்அரக்கன் தனைப்பற்றி
வாயாறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால்
காட்டுஎன்று காண்கேனோ?

'மலையைக் கூடப் பொடியாக்கும் என் கைகளால், இராவணேசுவரனின் வாயில் இரத்தம் வரும்படியாய் இறுக்கிப் பிடித்துச் சீதாப் பிராட்டியை காட்டு என்பதைக் காணட்டுமா?' என்று நினைக்கிறானாம்.

மீண்டும் கலங்குகிறான் அனுமன். பின் தீர்க்கமான முடிவிற்கு வருகிறான்.

யாவத் ஸீதம் ஹி பஷ்யாமி ராமபத்நீம் யஷஸ்விநீம் |
தாவதே தாம் புரீம் லங்காம் விசிநோமி புன: புன:||

இதன் விளக்கத்தை என் நண்பன் Ganapathy Subramanian Sundaram ஒலி வடிவில் அனுப்பியதை இங்கே தருகிறேன்.

'இராமபிரானுடைய மனைவியும், அளப்பரிய புகழ் கொண்டவளுமான சீதாபிராட்டியைப் பார்க்கும் வரையில், இலங்காபுரியில் திரும்பத் திரும்பத் தேடப் போகிறேன்.' என்கிற உறுதியான நிலைக்கு வருகிறானாம் அனுமன்.

அனுமனுடைய குறிக்கோள் சீதாப் பிராட்டியைத் தேடுவது. அதற்குத்தானே இலங்காபுரிக்கு வருகிறான்? அதை விட்டு விட்டுக் கலங்கிப் போய் உட்கார்ந்தால், சீதாப்பிராட்டி கிடைப்பாரா? வந்த காரியம்தான் முடிந்து விடுமா?

நாம் எண்ணியது நடக்க வேண்டும் என்று பெரியவர்களை அணுகும்போது, அவர்கள் 'சுந்தர காண்டம் படி (அ) கந்த கோட்டம் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் போய் விட்டு வா (அ) ஒவ்வொரு பௌர்ணமியும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்' என்றெல்லாம் சொன்னால், நாம் எண்ணியது நடக்கும் வரை விடாது செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு முறை சுந்தர காண்டம் பாராயணம் செய்து விட்டு, இரண்டு வாரங்கள் கந்தகோட்டம் சென்று விட்டு, மூன்று பௌர்ணமிகள் அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு நடக்கவில்லையே எனத் தளர்ந்து விடக் கூடாது என்பதைத்தான் அனுமன் மூலமாக நமக்குச் சேதி வருகிறது என்கிறான் என் நண்பன்.

அப்படி அனுமன் யோசித்து, செயல்பட நினைத்தவுடனே அசோகவனம் தென்பட்டு விடுகிறதாம்.

நாம் எண்ணியது ஈடேற ஏதேனும் ஒன்றை விடாது, உண்மையாகப் பற்றி வந்தாலே போதுமானது என்பதையும் இங்கு உணரலாம்.

Friday, December 20, 2019

சுந்தர காண்டம் – 25 – நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)


‘சீதாப்பிராட்டியைக் காணாது, கிஷ்கிந்தைக்கு நான் திரும்பிபோவதில் பயனில்லை.  பெருங்கடலைத் தாண்டியது, இடையூறுகளைக் கடந்ததும், இலங்காபுரியில் புகுந்ததும் வீணாகிப் போகும்.’


‘‘சீதாப் பிராட்டியைப் பார்க்க முடியவில்லை’ என்கிற கொடிய வார்த்தைகளைக் கேட்டு முதலில் இராமபிரானது உயிர் அவரது உடலை விட்டு நீங்கி விடும்; அவரைத் தொடர்ந்து இலக்குவன், பரதன், சத்ருக்னன், கோசலை, கைகேயி, சுமித்ரை உயிரை விடுவார்கள்.’ 


‘செய்நன்றி மறவாத, என் அரசன் சுக்ரீவன் தன் உயிரை மாய்த்துக் கொள்வான்; அவன் மரணித்த பின் ருமை, அவனது அண்ணி தாரை, என் சேனா நாயகன் அங்கதன் உயிரோடு இருக்க மாட்டார்கள்.’


‘இனிய சொற்கள்/ பரிசுகள்/ உபசரிப்பு கொண்ட தலைவனை இழந்த வானரர் படை விளையாட்டுகளை அனுபவிக்காது; விஷத்தை உட்கொள்வார்கள்; மலை மேலிருந்து கீழே விழுவார்கள்; தூக்கிலிட்டுக் கொள்வார்கள்; நெருப்பில் குதிப்பார்கள்; உண்ணா நோன்பிருந்து உயிரைத் துறப்பார்கள்; கத்தியால் வெட்டிக் கொள்வார்கள்.’


‘இவ்வளவும் நான் ‘சீதாப் பிராட்டியைப் பார்க்காது’ திரும்பிப் போனால் நிகழும்.  வானரர் படைக்குச் சர்வ நாசமும், இஷ்வாகு குல அழிவிற்கும் நான் காரணமாக மாட்டேன்.’


‘நல்ல சேதியில்லாது திரும்பிப் போகவே மாட்டேன்; சுக்ரீவ மகாராஜாவைப் பார்க்க மாட்டேன்; இங்கேயே இருப்பேனாகில், எல்லோரும் அங்கு நலமாயும், என்னை எதிர்பார்த்துக் கொண்டும் உயிருடன் காத்திருப்பார்கள்.’


‘சீதாப்பிராட்டியைப் பார்க்காத நான், கையில் கிடைத்ததைச் சாப்பிடுகிறவனாகவோ, வாயில் போட்டதைச் சாப்பிடுகிறவனாகவோ  புலன்களை அடக்கி வனவாசம் கொள்கிறேன்.  பெருந்தீயை வளர்த்து, அதில் பிரவேசிக்கப் போகிறேன்.  அலலது நீர் வெள்ளத்தில் விழுந்து ஜலசமாதி அடைந்து விடுகிறேன்.’


‘இந்த இரவு நன்றாகத் துவங்கினாலும், முடிவில் சீதாப்பிராட்டியைப் பார்க்காததனால் பயனற்றதாக ஆகி விட்டது.  கருமை நிறம் அதிகம் கொண்ட கண்களை உடைய சீதாப்பிராட்டியைப் பார்க்காமல் திரும்பிப் போவதாயில்லை.  மரத்தடியில் வசித்துக் கொண்டு தவத்தை மேற்கொள்ளப்போகிறேன்.’

‘எழுநூறு யோஜனை (பரப்பளவு கணக்கு) அளவிற்கு அரண்களால் சூழப்பட்டுப் பரவியிருக்கும் இலங்காபுரியில் நான் பார்த்திராதவை இல்லை; ஆயின், பார்க்கப்பட வேண்டிய சீதாப் பிராட்டியைப் பார்க்க முடியாததால், கடல் கடந்து வந்த நான் துன்பப் பெருங்கடலில் மூழ்கி இறந்து விடுவேனோ?’


ஊழியான் பெருந்தேவி
     ஒருத்தியுமே யான் காணேன்
ஆழி தாய், இடர்- ஆழியிடையே
     வீழ்ந்து அழிவேனோ ?


‘உயிரை நாமாக விடுவதில் பல தோஷங்கள் இருக்கின்றன; உயிருடன் இருக்கின்றவன் என்றாவது இன்பத்தைத் துய்ப்பான் என்பது ஆன்றோர் வாக்கு.  சீதாப் பிராட்டியையும், இராமபிரானையும், சுக்ரீவ மகாராஜாவையும், வானரர்களையும் நான் மீண்டும் சந்திக்க வேண்டுமாயின், என் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.’


பலவித துயர சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்ட அனுமனுக்குச் சோகமே கடலாய்த் தெரிந்தது; கரை புலப்படவில்லை.

Wednesday, December 18, 2019

சுந்தர காண்டம் - 24 - நம் துயரம் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

இராவணேசுவரனின் இருப்பிடத்தில் நன்றாகத் தேடிப் பார்த்தும், சீதாப்பிராட்டி தென்படாததால், தனக்குள் பேசிக் கொள்கிறான் அனுமன்.

'இலங்காபுரி முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன். எல்லா வளங்களும் நிறைந்த இந்நிலம் முழுவதும் அலைந்து தேடியாயிற்று. சீதாப் பிராட்டியைக் காணவில்லையே?'

'கழுகார் சம்பாதி சொன்னது போல இலங்காபுரியில் சீதாப்பிராட்டியைக் காணவில்லையே?'

'பலவந்தமாய்க் கொணர்ந்ததில் இராவணேசுவரனுக்கு இணங்கியிருப்பாரோ? இராமபாணம் எங்கிருந்தாலும் என்னை விடாதே என்கிற பயத்தினால், இராவணேசுவரன் தன் பிடி தளர்ந்து அவரை விட்டிருப்பானோ?'

'பெருங்கடலைக் கண்டு சீதாப்பிராட்டியாரின் இதயம் நின்றிருக்குமோ? இராவணேசுவரன், தனக்கு இணங்காததால், அவரைத் தின்றிருப்பானோ? தீய எண்ணங்கள் கொண்ட இராவணேசுவரன் மனைவியர் அவரைப் பங்கிட்டுத் தின்று விட்டார்களோ?'

'இராமபிரானின் திருமுகத்தைத் தியானித்துக் கொண்டே தன் உயிரை விட்டிருப்பாரோ? அல்லது இராவணேசுவரனின் இருப்பிடத்திலேயே ரகசியமாய் ஓர் இடத்தில் வைக்கப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பாரோ?'

'இராவணேசுவரனுக்கு வசப்பட வாய்ப்பில்லை. ஆயின், மரணத்தைத் தழுவியிருந்தால், இராமபிரானிடம் இச்சேதியை எப்படிக் கூறுவேன்?'

'அவரிடம் இதைச் சொன்னாலும் குற்றம்; சொல்லாவிட்டாலும் பெருங்குற்றம்; என்னுடைய கடமைதான் என்ன?'

இதையே கம்ப நாடன் மிக அழகான தமிழில் அருளுகிறான்.

கொன்றானோ ?
கற்பழியாக் குலமகளை கொடு்ந்தொழிலால்
தின்றானோ?
எப்புறத்தே செறித்தானோ சிறை ?
சிறியேன் ஒன்றானும் உணரகிலேன்;
மீண்டு இனிப்போய் என்னுரைக்கேன்.

'எடுத்துக் கொண்ட காரியம் ஈடேறாத நிலையில் காலத்துக்குத் தக்கவாறு நான் என்ன முடிவு எடுக்க வேண்டும்?' என அனுமன் தனக்குள் பேசிக் கொள்வதை விட்டு விட்டு, மீண்டும் ஆலோசிக்கிறான்.

Tuesday, December 17, 2019

சுந்தர காண்டம் - 23 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

Soliloquy (/səˈliləkwē/) என்கிற ஆங்கில வார்த்தையின் முழுமையான உதாரணத்தை அனுமனின் நிலை/பேச்சில் காணலாம். சுற்றுப் புறத்தை மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல் என்று கொள்ளலாம் (ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ-ஜுலியட் நாடகத்தில், ஜுலியட்-ன் மன ஓட்டங்கள்-ஐப் பொருத்தலாம் என்று இணையம் கூறுகிறது).

சீதாப் பிராட்டி இராவணேசுவரனால் கொல்லப்பட்டிருப்பாள்;

கோரமான ராக்ஷஸிகளைக் காணச்சகியாது உயிரை விட்டிருப்பாள்;

எதிரிகளின் பலத்தை அறியாமலும், சீதாப்பிராட்டியைக் காணாமலும் சுக்ரீவ மகாராஜாவிடம் போகும் துணிவில்லை;

'இவ்வாறு எண்ணுவதெல்லாம் சரியல்ல, மனந்தளராமை மிக முக்கியம்' என உணர்ந்து, உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் முயல்கிறான் அனுமன்.

இராவணேசுவரனுடைய அந்தப்புரத்திலும், இலங்காபுரியிலும் அனுமன் போய்ப் பார்க்காத நான்கு அங்குல நிலம் கூட இல்லை என்கிறார் வான்மீகி முனிவர்.

சதுர அங்குல மாத்ரோSபி
நாவகாஸ: ந வித்யதே|
ராவணாந்த:புரே தஸ்மின் யம்
கபிர்ந ஜகாம ஸ: ||

எல்லா வகையான மகளிரையும் கண்ட அனுமன், மெல்லிய இடை கொண்டவளான சீதாப் பிராட்டியைக் காணாது, வானரத் தலைவர்களுடைய பெருமுயற்சியும், தான் கடல் தாண்டி வந்தது வீணானதாயும் நினைத்து அனுமன் பெருங்கவலை கொள்கிறான்.

இப்படிப்பட்ட சோகத்தில் ஆழ்ந்த மனதுடன் மீண்டும் ஆலோசிக்கத் துவங்குகிறான் அனுமன்.

Monday, December 16, 2019

சுந்தர காண்டம் - 22 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம்

எல்லோரின் வாழ்க்கையிலும் சோகம் உண்டு; சோகம் இல்லாத வாழ்வில் சுகம் இல்லை.

அப்படிப்பட்ட தருணங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றமும், நட்பும் நம்மைத் தேற்றி, நம்மைப் புதுப்பித்து, துயரத்தை எதிர்கொள்ளும் வலிமையைத் தரும்.

அத்தகைய சுற்றமும், நட்பும் நமக்கு அமையவில்லையெனில், 'தெய்வம் மனுஷ்ய ரூபேன' (எ) 'மனித வடிவில் இறைவன்' நம்மை ஆட்கொண்டு, நல்ல பாதையினைக் காட்டுவான்; துயரத்தை நீக்குவான்.

ஆயின் இங்கு அனுமனின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

தாண்டுதற்கரிய பெருங்கடலைப் பசுவின் குளப்படி போலத் தாண்டி விடுகிறான்.

இடையில் உண்டான இடையூறுகளை மதி கொண்டு களைகிறான்.

வெல்லுதற்கரிய இலங்காதேவியை இடது முஷ்டியால் குத்தி ஜயிக்கிறான்.

இராவணேசுவரன் மாளிகையில் எவ்வித இடையூறுமின்றி தேடுகிறான்.

இத்தகைய சூழலில் அனுமன் 'தன் நினைத்த காரியம் வெற்றி பெறும்' என்று நினைத்ததில் தவறில்லை.

ஆனால், சீதாப் பிராட்டியைக் காண முடியாத போது தளர்கிறான்.

அனுமன் உறங்காத இரவு நீண்டு கொண்டே போகிறது; அவனது துயரத்தைப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை; இருப்பதோ எதிரிகளின் கூடாரம்; சாய்ந்து கொள்ளத் தோள்கள் இல்லை; புரிந்து கொள்ள யாருமில்லை; அனுமனின் வெற்றியில்தான் வானரர்களில் உயர்வும், இராமபிரானின் உயிரும் அடங்கியிருக்கின்றன எனும்போது மனநிலை இன்னும் பிறழ்கிறது.

நமக்குத் துயரம் வரும்போது, இச்சூழலில் தோய்ந்த அனுமனை நினைக்க வேண்டும். அனுமனின் துயரம் நமக்கு ஈடாகுமா என அரை நொடி சிந்திக்க வேண்டும். 'இல்லை' என்கிற உண்மையான பதில் நம் இதயத்திலிருந்து வந்தால், நம் துயரங்களை அனுமன் உதவியைக் கொண்டே எதிர் கொள்ள முடியும்.

'தனியாகப் புலம்புவது' என்பதை வேடிக்கையான சொல்லாக்கி விட்டோம்; ஆனால், மேலே கூறியது போல, அது எவ்வளவு வேதனையான சூழலில் அனுமன் மூலம் வெளிப்படுகிறது என்பதை எண்ணும்போது நமது கண்கள் கசிகின்றன.

வான்மீகி முனிவர் அருளிய சுந்தர காண்டத்தில், அனுமனின் துயரைப் பிழிந்து தந்த ஸர்க்கம் 12 மற்றும் 13 ஸர்க்கத்தைத் தினமும் படித்தால், நமது சொல்லொணாத் துயரங்களிலிருந்தும், பிறவிப் பிணியிலிருந்தும் விடுபடலாம் என்பது சத்தியமான உண்மை.

Sunday, December 15, 2019

சுந்தர காண்டம் - 21 - தேடுதல் தொடர்கிறது

ஆடிப் பாடி விளையாடிக் களைத்து உறங்குகின்ற பெண்கள் பல விகாரங்களில் அனுமனுக்குத் தென்படுகின்றனர். அரைகுறையாய்த் தின்று வைத்த உணவுகளும், குடித்து மிகுந்த பானங்களும் கிடக்கின்றன.

அனுமனுக்குத் திடீரெனச் சந்தேகமும், அருவருப்பும் உண்டாகிறது.

'பெண்களை இப்படி உற்றுப் பார்த்ததினால் என்னுடைய பிரம்மசர்யத்திற்குக் குறைவு நேராதா?'

'எத்தனைப் பெண்களைப் பார்த்தேன்? எந்தெந்த நிலைகளில் பார்த்தேன்? இது தவறுதானே?' என நோகிறான்.

அவனே, 'புண்ணிய மற்றும் பாவ காரியங்களைச் செய்யப் புலன்களைத் தூண்டுவது மனம்தானே?

ஆனால், என் மனதில் காமம் என்கிற உணர்வு எழவில்லையே? சீதாப்பிராட்டியை வேறு இடத்தில் தேட முடியாது; பெண்களை, பெண்கள் இருக்குமிடத்தில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

காணாமல் போன பெண்ணை, பெண் மான்கள் கூட்டத்தில் தேட முடியாது' என்று தனக்குத் தானே சமாதானம் கொள்கிறான்.

மனோஹி ஹேதுஸ்ஸர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தனே......
ந சக்யா ப்ரமதா நஷ்டா ம்ருகீஷு பரிமார்கிதும்

வான்மீகி முனிவர் அருளிய சுந்தர காண்ட ஸர்க்கங்கள் 9, 10, 11-ஐ முறையாக ஓதி வருதல் நம் (அநாவசிய) காம(ஆசை)த்தை அடக்கும் என்பது பெரியோர் வாக்கு.

எங்கு பார்த்தாலும் ஆட்டம், பாட்டம், கேளிக்கை, கூத்துதான். ஆனால், கவலைப்படுவார் ஒருவரும் தென்படவில்லை என்று கம்பநாடனுடைய அனுமன் கூறுவான்.

அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர்
பாடுநர் ஆகிக்,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார்
ஒருவரைக் காணேன்!

அத்தகைய கவலை தோய்ந்த முகத்தைத் தானே தேடி அலைகிறான் அனுமன் இப்போது!

முதன்முதலாய் அனுமனின் உற்சாக நிலை தொலைந்து, சுயபச்சாதாபமும், சோர்வும் பற்றிக் கொள்கிறது.

சுந்தர காண்டம் - 20 - மண்டோதரியைக் காணல்

முத்து, மணிகள் கோர்த்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவள்;

இராவணேசுவரனுடைய மாளிகையையே தனது ஒளியினால் அழகு செய்கின்றவள்;

பொன்னிறமுள்ளவள்;

ராவணனுக்குப் பிரியமானவள்;

அந்தப்புர ராணி;

அழகிய தோற்றமுள்ளவள்.

இராவணேசுவரனுடைய மனைவி மண்டோதரி துயிலும் நிலை கண்ட அனுமன் அவளுடைய உருவம்-இளமை காரணமாய் சீதாப்பிராட்டி என்று எண்ணி விடுகிறான். அது சந்தோஷமாய் வெளிப்படுகிறது.

தோளைத் தட்டுகிறான்;

வாலை முத்தமிடுகிறான்;

ஆனந்தக் களிப்பில் கூத்தாடுகிறான்;

பாடுகிறான்;

உல்லாசமாக நடக்கிறான்.

இப்படி வானரர்களுக்குச் சுபாவமான குணத்தைக் காட்டுவது போலத் தூண்களில் ஏறி, மேலிருந்தவாறு, பூமியில் குதிக்கிறான் அனுமன்.

அனுமனின் இந்நிலையை மிக அழகாக வான்மீகி முனிவர் சித்தரிக்கிறார்.

ஆஸ்போடயாமாஸ சுசும்ப புச்சம்
நநந்த சிக்ரீட ஜகௌ ஜகாம |
ஸ்தம்ப ஆரோஹாந் நிபபாத பூமௌ
நிதர்ஸ்யந் ஸ்வாம் ப்ரக்ருதிம் கபீநாம் ||

மிகுந்த அறிவு கொண்ட அனுமன் இந்நினைவிலிருந்து உடனே விடுபடுகிறான்.

'இராமபிரானைப் பிரிந்தவள் உறங்கத்தான் முடியுமா? அல்லது உணவு செல்லுமா? அலங்காரம் செய்து கொள்ளத்தான் தோன்றுமா? ஆக, இவள் சீதாப்பிராட்டி அல்ல' எனத் தெளிகிறான்.

கம்பநாடன் அனுமனுக்கு இத்தகைய நிலை இல்லை. சீதாப்பிராட்டி என்று நினைக்கிறான்; பின் உடனே தெளிந்து விடுகிறான். வேறு சில குறிகளையும் அவளிடத்துக் காண்கிறான்.

இலக்கணங்களும் சிலஉள; என்னினும்
எல்லைசென்று உறுகில்லா
அலக்கண் எய்துவதுஅணியது உண்டு; என்று
எடுத்து
அறைகுவதுஇவள் யாக்கை;

இவளிடம் பெண்ணின் நல்ல இலக்கணங்கள் உள்ளன; என்றாலும், இவளின் உடல் மொழி, முடிவைச் சென்று சேராத துன்பத்தை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிவிக்கின்றதாம் அனுமனுக்கு.

ஆக, இவள் வேறு எவளோ என்று நிச்சயித்து மேலே செல்லுகிறான் அனுமன்.

என் குறிப்பு:

சீதாப்பிராட்டியைப் போல இராவணேசுவரனின் மனைவி மண்டோதரி மகா பதிவிரதை; இதனால்தான், இராமபிரானின் குறிப்பு (சீதாப்பிராட்டியின் உருவம் - இளமை) பெரும்பான்மையாய் மண்டோதரிக்கும் பொருந்துகிறது. அதனால்தான் அனுமனும் குழம்புகிறான்.

Saturday, December 14, 2019

சுந்தர காண்டம் - 19 - இராவணேசுவரனின் அந்தப்புரம் (தொடர்ச்சி)

சினம் எழுகிற போது அதைப் புத்தியைக் கொண்டு அணைப்பவர்கள் பெரியோர் என்பதை நொடியில் உணர்ந்து கொள்கிறான் அனுமன்.

'எதற்காக வந்தோம்? எதை செய்ய நினைக்கிறோம்? இது அறிவிற்கு உகந்துதானா? இப்படிச் செய்ய நினைப்பது துன்பத்திற்குத் தானே வழி வகுக்கும்? சீதாப்பிராட்டியின் நிலை என்னவாகும்?' எனப் பின் வாங்குகிறான் அனுமன்.

ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல்
உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்
பின்தூக்கின்இதுசாலப்
பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்.

'புத்திமதாம் வரிஷ்டம்' என்பதற்கு ஏற்ப நிதானமாய்ச் சிந்திக்கத் துவங்குகிறான் அனுமன். அது எப்படி இருந்ததாம்?

உலகங்களை எல்லாம் அழிக்கின்ற ஆற்றலை உடைய பெருங்கடலானது, காலத்தின் ஆணையை எதிர்பார்த்துக் கரையை மீறாது இருப்பது போல இருக்கிறான் அனுமன்.

உலகை
முற்றுவிக்கும் முறைதெரினும்
காலம் பார்த்து,இறைவேலை
கடவாதகடல் ஒத்தான்.

சடாரென மாறிப் போன காரணத்தை ஆராய்ந்தால்...

தேவர்களின் துன்பத்தை நீக்க வேண்டி, ஆலகால விடம் உண்ட சிவபெருமானைப் போல வலிமை பெற்றவன் என்றாலும், ஒழுக்கத்தைப் பாதுகாப்பவன் என்பதால் ஆராயாமல் ஒரு செயலைச் செய்யலாமா நான் என்று நினைக்கும் அனுமனைச் சிவபெருமான் அவதாரம் என்று சொல்லாமல் சொல்கிறான் கம்பநாடன்.

ஆலம்பார்த்து உண்டவன்போல்
ஆற்றல்அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்கஉரியோர்கள்
எண்ணாதுசெய்பவோ?

மீண்டும் சிவபெருமானைக் கொண்டு வருகிறான் கம்பநாடன்; இல்லையா பின்னே? சிவபெருமானே அனுமனாய் உருவெடுத்துத் திருமாலின் அவதாரத்திற்கு படிக்கல்லாய், அடிக்கல்லாய் இருக்கிறான்?

மீண்டும் பெண்கள்; அவர்கள் இராவணேசுவரனையே நினைத்துக் கொண்டு தூங்குகிறார்கள். அவன் முகமென்று அருகிலுள்ள பெண்ணின் முகத்தை முகர்ந்து இன்பங்காணுகின்றனர்; வீணையை அணைத்துக் கொண்டு சிலர்; மத்தளத்தைக் கட்டிக் கொண்டு சிலர்; ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு உறங்குபோது பெண் மாலையெனக் காட்சியளிக்கின்றனர்.

சுடர் விடும் தங்க விளக்குகள், ஆடாது அசையாது எரிந்து கொண்டிருப்பது, உறங்கிக் கொண்டிருந்த இராவணேசுவரனின் மகளிரைக் கண்கள் கொட்டாது பார்ப்பது போல இருந்தாம் (இராவணேசுவரன் விழித்துக் கொண்டு இருக்கும்போது பார்க்க முடியாது).

இராவணேசுவரனின் அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் அனைவரும், ஒருத்தி கூட மிச்சமில்லாமல், அவனது பராக்கிரமத்தாலும், குணத்தாலும் அடிமையானவர்கள். சீதாப்பிராட்டியைத் தவிர வேறு யாரும் வேறு ஒருவனால் விரும்பப்பட்டவளும் இல்லை; வேறு ஒருவனுக்கு மனைவியாய் இருந்தவளும் இல்லையாம் என்கிறார் வான்மீகி முனிவர்.

நதத்ர காஸ்சித் ப்ரமதா: ப்ரஸஹ்ய வீர்யோபன்னேன குணேன லப்தா: |
ந சான்யகாமாபி ந சான்யபூர்வா வினா வரார்ஹம் ஜனகாத்மஜாம் தாம் ||

இவர்களைப் பார்த்துவிட்டு, தனியே கட்டிலில் உறங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான் அனுமன்.

சுந்தர காண்டம் - 18 - இராவணேசுவரனின் அந்தப்புரம்

செல்வம் கொழிக்கும் இராவணேசுவரனின் மாளிகையில் தடையின்றி உலாவுதலே நல்ல சகுனம் எனத் தன்னைத் தேற்றிக் கொண்டு மேலும் தேடத் துவங்குகிறான் அனுமன்.

'சுவர்க்கம் என்பது இதுதானா? தேவலோகமா? இந்திரன் வாழும் அமராவதியா? களை சொட்டும் இம்மாளிகையைத் தன் மீது பிரியம் கொண்ட நாயகியைப் பார்த்துக் கொள்வது போலப் பரமாரிக்கிறானே இராவணேசுவரன்' என்று வியக்கிறான் அனுமன்.

பெரியதோர் கம்பளத்தில் பெண்களின் கூட்டம் ஒன்று - மதுபான மயக்கம், போகங்களில் ஈடுபட்ட களைப்பு - நித்திரையில் ஆழ்ந்திருப்பது, சூரியனின் மறைவுக்குப் பின் அன்னமும், வண்டும் ஓய்வெடுத்த அமைதி நிறைந்த தாமரைத் தடாகம் போலத் தோன்றுகிறது அனுமனுக்கு.

அம்புஜானீவ புல்லானி ப்ரார்த்தயந்தி புன: புன: என்கிறார் வான்மீகி முனிவர்.

நட்சத்திர நாயகியர் கூட்டம் நடுவே சந்திரனைப் போல விளங்கும், அயர்ந்து தூங்கும் இராவணேசுவரனைப் பார்க்கிறான் அனுமன்.
ராஜகளை, விரிந்த மார்பு, பரந்த தோள், திரண்ட புஜம், மெல்லிய வெண்ணிற ஆடை மார்பில், மஞ்சள் பட்டாடை இடுப்பில், 'கரு கரு'வென உளுந்து போன்ற உடல் கொண்ட அசுரவேந்தன், கங்கையில் அமுங்கியவாறே உறங்கும் யானையெனத் தோன்றுகிறது அனுமனுக்கு.

கம்பநாடன் மிகவும் விரிவாக இராவணேசுவரனின் துயில் நிலை, அழகு, கம்பீரத்தை விவரிக்கிறான். கும்பகருணனைப் பார்த்தவுடனேயே சினங் கொண்ட அனுமன், அவன் தமையனைப் பார்த்தால் சும்மா இருப்பானா? கடலைப் போலப் பொங்கி வரும் சினத்தினால், 'இவனைக் கொன்று விடலாமா?' என்று ஒரு கணம், ஒரே கணம் சிந்திக்கிறான்.

தாள் ஆற்றலால் இடித்துத்
தலை பத்தும் தகர்த்து இன்றென்
ஆள் ஆற்றல் காட்டேனேல்
அடியேனாய் முடியேனே !

என் கால் வலிமையால் தாக்கி, பத்து தலைகளையும் பொடிப்பொடியாக்கி, இன்றைய தினத்தில் என் அடிமையின் வலிமையைக் காட்டாது போனால், தொண்டு புரிபவனாகக் கருதப்பட மாட்டேன் என்கிற அளவுக்குச் சிந்தனை செல்கிறது அனுமனுக்கு.

Friday, December 13, 2019

சுந்தர காண்டம் - 17 - புஷ்பக விமானம்

இராவணேசுவரன் மாளிகையில் ஓரிடத்தில் கண்ணைப் பறிக்கும் வாகனம் ஒன்று நிற்பதைக் காண்கிறான் அனுமன். குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம், அன்னப்பறவைகள் சுமந்து செல்வது போல உருவாகியிருக்கிறது. இருபுறங்களிலும் வரைந்துள்ள இயற்கைக் காட்சிகள் தேரை மேகங்களிடையே பறந்து செல்லும் வாகனம் போல் தோற்றுவிக்கின்றன.

வானத்தில் மேகங்கள். தொலைவில் மலை. மலை மீது வெண்ணிற மாளிகைகள் கொண்ட ஓவியத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கண்டு வியக்கிறான் அனுமன்.

புஷ்பக விமானம் விடாப்பிடியான தவத்தாலும், பராக்கிரமத்தாலும் வெற்றி கொள்ளப்பட்டது. ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு மிகவும் உயரமாய் இருக்கிறது.

மனம் விரும்பியபடி விரைவாய்ச் செல்லக் கூடியது; பிறரால் அடக்க முடியாதது; புண்ணிய செய்த, புகழ் பெற்ற உயர்ந்த குணங்கள் கொண்ட முனிகளால் அடையப்படும் சொர்க்கத்தைப் போன்று, எல்லா சுக போகங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கிறது புஷ்பக விமானம்.

இலங்காபுரியின் பேரெழிலில் லயித்திருந்தாலும் இடையிடையே கவலை எட்டிப் பார்க்கிறது அனுமனுக்கு.

நிகரில்லாத அழகி, அறநெறி தவறாத குலத்தில் தோன்றியவள், நல்ல இடத்தில் வளர்ந்து பூத்த பூங்கொடி, மெலிந்த உடலமைப்பு கொண்டவள், இராமபிரானையே நினைத்துக் கொண்டிருப்பவள், இனிய குரலை உடையவள், அழுக்குப் படிந்த தங்கச்சிலை போன்றவள், புண்ணான இடத்தில் செலுத்தப்பட்ட பாணம் போன்றும் இருக்கும் சீதாப் பிராட்டியை வெகு நேரம் தேடியும் அனுமனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இராவணேசுவரன் பேராற்றலால் ஆளப்பட்ட இலங்காபுரி முழுவதும் அலைந்து தேடியும், கணவரின் நற்குணங்களால் வெற்றி கொள்ளப்பட்டவளும், கொண்டாடத் தக்கவளும் ஆன சீதாப்பிராட்டியைக் காணாததால் கவலை கொள்கிறான் அனுமன்.

Thursday, December 12, 2019

சுந்தர காண்டம் - 16 - இராவணேசுவரன் மாளிகையில் புகுதல்

இலங்காபுரிக்கு உயர்ந்த ஆபரணமாய் விளங்கும் இராவணேசுவரன் மாளிகையை அனுமன் சுற்றி வருகிறான்.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குத் தாவிச் செல்வது, ராக்ஷஸர்களின் தோட்டங்களைப் பார்வையிடுவது, அச்சமில்லாமல் உப்பரிகைகளில் நடந்த செல்வது - செயல்களைச் செய்கிறான் அனுமன்.

யாருடைய வீட்டில் புகுந்து தேடுகிறான்?

பிரஹஸ்தன், மகாபார்ஸ்வன், கும்பகருணன், விபீஷணன், மகோதரன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரச்மிகேது, சூர்யசத்ரு, வஜ்ரகாயன், தூம்ராக்ஷன், ஸம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன், சுகநாஸன், வக்ரன், சடன், விகடன், ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்விஜக்ரீவன், இந்த்ரஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன் வீடுகளுக்குச் சென்று, அந்தந்த வீடுகளின் செழிப்பையும், செல்வக் கொழிப்பையும் பார்க்கிறான் அனுமன்.

வான்மீகி முனிவர் அனுமன் கும்பகருணனைப் பார்த்தான் என்பதோடு நிறுத்திவிடுகிறார். ஆயின், கம்பநாடன் அப்படியில்லை.

12 பாடல்கள் அனுமன் - கும்பகர்ணன் பார்த்ததற்கு அருளியிருக்கிறான். ராவணன் என நினைத்து முதலில் சினம் கொண்டு, பின் தணிந்து,  பள்ளியறையைக் கடந்து செல்கிறானாம் அனுமன்.

அனுமன் தன் சினத்தை எப்படித் தணித்துக் கொள்கிறான்?

மறுகி ஏறியமுனிவு
எனும் வடவைவெங் கனலை
அறிவு எனும்பெரும் பரவை
அம் புனலினால், அவித்தான்.

(சீதாப் பிராட்டியைக்) காணாது கலங்கி நின்ற நிலையில், மேலும் மேலும் பெருகி வருகின்ற கோபம் என்கிற கொடிய ஊழித்தீயை, ஞானம் (அறிவு) என்கிற பெருமையுடைய கடல் நீரால் அணைத்தானாம்.

1. வடவை வெங்கனல் - கொடிய ஊழித் தீ.
2. பெரும் அம் பரவை அம்புனல் - பெருமையுடைய கடல் நீர்.

நமக்கும் இதில் சேதி இருப்பதாய் நான் நிச்சயம் நம்புகிறேன்.

Wednesday, December 11, 2019

சுந்தர காண்டம் - 15 - சந்திர வர்ணனை

வான்மீகி முனிவர் சந்திரனை எட்டு ஸ்லோகங்களில் வர்ணிக்கிறார் (ஸர்க்கம் 5, சுலோகம் 1-8); இதோடு நில்லாது சந்திரனால் இலங்காபுரியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் விரிவாகக் கூறுகிறார்.

சந்திர வர்ணனை ஒப்பற்றதாகக் கருதப்படுகிறது.
  • ஆகாயத்தின் நடுவில் வந்துள்ளது,
  • கிரணங்களுடன் கூடியது,
  • பேரொளி வெளிப்படுத்திக் கொண்டிருப்பது,
  • கொட்டிலில் மதங்கொண்ட காளை திரிவதைப் போல ஒப்பது,
  • பாவங்களின் சம்பளமான துயரத்தைப் போக்குவது,
  • பெருங்கடலைப் பொங்கச் செய்வது,
  • ஆகாய வீதியில் சென்று கொண்டிருப்பது,
  • திருமகளின் ஒளி, செழுமை, உற்சாகம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளின் உருவகத் தேவதை,
  • கூர்மையான கொம்புகளையுடைய காளை,
  • உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலை,
  • முயல் அடையாளமுள்ளது,
  • அரசாட்சியை அடைந்த மன்னன் போல,
எனப் பலவாறு வான்மீகி சந்திரனைச் சிலாகிக்கிறார்.

கம்பநாடன் கொஞ்சம் வித்தியாசமாய்ச் சிந்திக்கிறான்.

இராமபிரானுடைய தூதன் இலங்காபுரிக்கு வந்ததால், என் தந்தை இந்திரன் நல்வாழ்வை அடைந்து விட்டான் என்று நினைத்து, அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, எல்லை இல்லாத கிழக்குத் திசையில், சுருளான கூந்தல் அசைந்தாடும் நெற்றியை உடைய அழகியின் முகம்போல வெளிப்பட்டானாம்!

வந்தனன்இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையேஇந்திரன் ஆம் என்று ஏமுறா
அந்தம்இல்கீழ்த்திசை அளகவாள் நுதல்
சுந்தரிமுகம்எனப் பொலிந்து தோன்றிற்றே.

அளகவாள் நுதல் - சுருளான குழல் அசைந்தாடும் நெற்றி.

சந்திரனின் ஒளி, அனுமனோடு தொடர்பு கொண்டதால், சிறந்த குணங்களைக் கொண்ட இராமபிரானால் ஏவப் பெற்ற ஒப்பற்ற அம்பு போலப் பரவியதாம்.

'இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் பகழியின் செலவு என.'

இகழ்வு அரும் என்பது குறிப்பிடத்தக்கது. பழிக்கபடுதல் அல்லாத பெரும் குணம் கொண்ட பெருமான் இராமபிரான் என்கிறான் கம்பநாடன்.

உண்மைதானே?!

Tuesday, December 10, 2019

சுந்தர காண்டம் - 14 - இலங்காபுரியின் எழில்

எதிரிகளின் தலையில் கால் வைப்பது போல, தன் இடது காலை முன் வைத்து, வாயிற்படி இல்லாத இடத்தில் மதில் சுவரைத் தாண்டுகிறான் அனுமன்.

ஊருக்குள் நுழைந்து வீடு வீடாய்ப் பார்க்கையில், இலங்காபுரி இன்னும் அழகாய்த் தோன்றுகிறது. எங்கும் நாதம் நிறைந்த கீதம். பாடும் பெண்கள் அப்ஸரஸ்களைப் போலிருக்கிறார்கள். பிரபுக்களின் மாளிகையில், படியேறி நடந்து செல்லும் பெண்கள் இடுப்பில் கட்டிய சலங்கை நூலும், காலில் அணிந்த தண்டையும் சேர்ந்து ஒலிக்கின்றனவாம். இடையே கைகொட்டி ஆமோதிக்கும் ஆடவரின் குரல்.

சுச்ராவ மதுரம் கீதம் த்ரிஸ்தான ஸ்வரபூஷிதம் ஸ்த்ரீணாம் மதஸம்ருத்தானாம் திவிச அப்ஸரஸாம் இவ

தூரத்தில் மந்திரம் ஓதும் தொனி, அங்குள்ள மறையோர்கள், ராவணன் புகழ் பாடும் அரக்கர்கள் செய்யும் பயிற்சிகளைப் பார்க்கிறான் அனுமன்.

ஸ்வாத்யாய நிரதாம்ஸ்சைவ யாதுதானான் ததர்ச ஸ:
ராவணஸ்தவ ஸம்யுக்தான் கர்ஜதோ ராக்ஷஸானபி

வான்மீகி முனிவர்க்குச் சளைத்தவனா கம்ப நாடன்?

குழலும், வீணையும், யாழும், என்று
இனையன குழைய,
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து
அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடும் தடமணிச்
சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை
தரெிவரு நிலைய!

மாளிகையில் நின்று கிளியோடு கொஞ்சும் மகளிர், குழல், யாழ், வீணை-யை விட இனிய குரலில் பேசுகின்றனர். அந்தந்த வீடுகளில், சுவர்களிடையே பதிக்கப்பட்ட மணிகளும், கண்ணாடிகளும் அவர்களின் உருவைப் பிரதிபலிப்பதால், எது நிழல் (பிம்பம்), எது நிஜம் (பெண்) என்றறிவதே கடினமாயிருக்கிறதாம் அனுமனுக்கு.

ராஜ வீதியில் நுழையும் அனுமனுக்கு அரக்கர்களின் காவலே அரணாய்க் கொண்ட, இராவணேசுவரனின் மாளிகையில், நிறைந்து நிற்கும் ரதங்கள், குதிரைகள், யானைகள், உவகைமிக்க மங்கையர், மிருதங்க சப்தம், சங்கநாதம், முரசொலி பிரமிப்பைத் தருகிறது.

கடலைப் போலக் கம்பீரம், கடலைப் போன்ற அமைதி, இலங்காபுரிக்கே ஒரு அணிகலன் போல அமைந்திருக்கிறது இராவணேசுவரனின் மாளிகை.

Monday, December 09, 2019

சுந்தர காண்டம் - 13 - இலங்காதேவியை ஜயித்தான்

தொங்குகின்ற மேகத்தை ஒத்தது; அகலமான முடிப்பகுதியை உடைய லம்பம் எனும் மலையில் அமைந்தது; அழகிய வனம் - நீர்நிலைகளை உடையதுமான இலங்காபுரியில் இரவு வேளையில் அனுமன் நுழைகிறான்.

செழுமையான இலங்காபுரி அலங்கரிக்கப்பட்ட பெண்ணை போல இருக்கிறதாம்; இரத்தினமயமான பிரகாரங்களே ஆடைகள்; பசு-குதிரை கட்டும் தொழுவங்களே காதணிகள்; ஆயுதசாலைகளே மார்பகங்கள் - என தீபங்களால் ஒளி வீசுகின்ற மாளிகைகளாலும், இருள் விலகிப் போயிருந்ததுமான நகரத்தை அனுமன் பார்க்கிறான்.

இப்படி மெள்ள மெள்ள நகர்ந்து செல்லும் அனுமனை ஒரு காவற்காரி நின்று அதட்டுகிறாள்; இலங்காபுரியே உருவாகிவந்த ஊர் தேவதை எனத் தோன்றுகிறது.

கம்பநாடன் ஐந்து பாடல்களில் இலங்காதேவியை வர்ணிக்கிறான்.

அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள்
அரவு எல்லாம் அஞ்சும் உவணத்தின் வேகம் மிகுத்தாள்
அருள் இல்லாள்!

ஐந்து நிறங்களைக் கொண்ட சேலையை அணிந்தவளும், எல்லாப் பாம்புகளும் பயப்படும் கருடனைப் போல வேகம் கொண்டவளுமான இவளிடம் கருணையே இல்லையாம்!

அனுமன் தான் 'வெறுமனே' நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்று கூறியதைக் கண்டு, சினம் கொண்டு, பெருத்த சப்தத்தை எழுப்பி, உள்ளங்கையால் அனுமனைப் பலமாக ஓங்கி அறைகிறாள்.

பெண் என்பதால் அதிகக் கோபமடையாத அனுமன், அவளை - இடது கை விரல்களை மடக்கி, முஷ்டியாகச் செய்து - விளையாட்டாகத் தாக்குகிறான்.

அவள் நிலைகுலைந்து, கீழே விழுகிறாள். தன்னை நிலைப் படுத்திக் கொண்டு அனுமனை வேண்டுகிறாள்.

'தயவு செய்து என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். என்னைப் பிழைத்துப் போக விடுங்கள்.'

'வானர தலைவ! ஒரு உண்மையை உரைக்கிறேன். முன்னர் பிரம்மதேவன், 'எப்போது ஒரு வானரன் உன்னைப் பராக்கிரமத்தினால் அழிக்கிறானோ, அப்போது இராக்ஷஸர்களுக்குப் பெரும் அழிவு வரப் போகிறது என்பதைப் புரிந்து கொள்வாய்' வரத்தை நினைவு கூர்கிறேன்.'

'வானரங்களில் முதல்வனே! உமது இஷ்டப்படி இலங்காபுரியில் எங்கு வேண்டுமானாலும் போய், என்னென்ன காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைச் செய்து கொள்ளுங்கள். முக்கியமாய் நீங்கள் பார்க்க விரும்பும் சீதாப் பிராட்டியைத் தேடுங்கள்' என்கிறாள் இலங்காதேவி.

மைநாக மலை, ஸுரஸை, ஸிம்ஹிகை இவர்களோடு இலங்காதேவியையும் வென்ற அனுமன், 'சீதாப் பிராட்டியைப் பார்ப்பதற்கானச் சுப சகுனங்களே இவை' என்று மனதில் எண்ணிக் கொள்கிறான்.

முந்தைய பதிவுகள்

Followers