Saturday, March 31, 2012

இராம நவமி!

இராம நவமியன்று பிறந்தவர் என் தந்தை. 

தன் பிறந்த நாளை இராமனின் நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து திளைத்தவர்.  ராம கதையைச் சொற்பொழிவாற்றி, பல உள்ளங்களைக் குளிர்வித்தவர்.  வால்மீகி / கம்பரில் திளைத்து, திளைத்து மெருகேற்றிக்கொண்டவர்.  சுந்தர காண்டம் ஸப்த ஸர்க்க (ஏழு அத்தியாயங்கள்) பாராயணத்தைத் தினமும் செய்து, ஆன்ம பலத்தைப் பெருக்கி, குடும்பத்தை ஏற்றம் பெறச் செய்தவர்.  குருவாய் இருந்து, ராம நவமியன்று எனக்கு சுந்தர காண்டம் எடுத்துக்கொடுத்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாகவும், ஆன்மீகமாயும் எதிர்கொள்ளச் செய்தவர்.

அவரைப் பற்றிப் பேசுவதை விட இந்நாளில் இராமனைப் பற்றிச் சிந்திப்பதையே விரும்பியிருப்பார் என்பதால் ‘உயிர் எழுத்து’-ல் அமைந்த, ராமனின் சரிதத்தைச் சொல்லும் பாடலை (அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து) என் தந்தையின் தாள்களில் வணக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

‘அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது

நிறைவான பகிர்வு !

முந்தைய பதிவுகள்

Followers