Sunday, July 17, 2005

ஆமை ஓடு

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். தாய்மார்களுக்கு என்ன கொடுத்தார்? அழகு. ஆண்களுக்கு வீரம். நரிக்குத் தந்திரம், குதிரைக்கு வேகம், மாட்டுக்கு உழைப்பு, மயிலுக்குத் தோகை, சிம்மத்துக்கு ஆற்றல், யானைக்குத் தந்தம், சேவலுக்குக் கொண்டை. ஆமைக்கு வேகம் குறைவு. அதற்காகப் பகவான் ஓடு கொடுத்தார். தற்காப்பாக.

அந்த ஓடு இல்லையென்றால் ஆமை விரைவில் செத்துப் போகும். ஓடு இருப்பதினாலே ஆமையைக் கொல்ல முடியாது. ஓடு அவ்வளவு மொத்தமானது (thickness). ஐந்து பேர் ஒன்று சேர்ந்தார்கள். மாரன், தீரன், வீரன், சூரன், கோரன்; ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, மூன்று கல் எடுத்து, அடுப்பு மாதிரி வைத்தார்கள். வெல்லம் காய்ச்சுகிற இரும்புக் கொப்பரை வைத்து, இருபது குடம் தீர்த்தத்தை வார்த்து, ஆமையை அந்தத் தண்ணீரிலே தூக்கிப்போட்டு, மேலே ஒரு பித்தளைத் தாம்பாளத்தை, அது துள்ளிக் குதித்து ஓடாவண்ணம் மூடி, நான்கு எடை சவுக்குக் கட்டையை வைத்து தீ வைத்தார்கள். ஆரம்பத்தில் தண்ணீர் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இனிமேல்தான் கட்டை தீப்பிடித்துத் தளதள என்று தண்ணீர் கொதித்து, ஆமை செத்துப் போகும். இப்பொழுது தண்ணீர் ஜில் என்று இருப்பதால், ஆமை நீந்தி விளையாடும். ஆனால், இன்னும் அரைமணி கழித்துத்தானே தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது? இது கதை அல்ல.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்பனதான் அந்த அடுப்பு மாதிரியான மூன்று கற்கள். இந்தத் தேகம்தான் இரும்புக்கொப்பரை. ஆசைதான் அந்த நீர். அந்த ஐந்து பேர் தான் ஊறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்பன. ஆத்மா என்கிற ஆமையைப் போட்டுப் பந்த பாசம் என்னும் தாம்பாளம் இட்டு, தீவினை என்கிற அக்கினியை மூட்டிவிட்டு இருக்கிறார்கள். இந்த ஆமையாகிய நாமெல்லாம் 'அந்த ஓட்டலிலே பூரி, மசாலா நன்றாக இருக்கிறது. இந்த ஓட்டலிலே ரசம், வடை எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறோம். இது யார் சொன்னது? அப்பர் பெருமான் சொல்லுகிறார்.

வளைத்து நின்(று) ஐவர் கள்வர்
மனத்திடைத் துயரஞ் செய்து
தளைத்து வைத்(து) உலையில் ஏற்றி,
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்(று) ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்து நின்(று) ஆடுகின்றேன்;
என் செய்வேன் தோன்றி னேனே!

-அப்பர் தேவாரம்

ஏன் இந்த ஆமை துன்பப்பட்டது? துன்பத்தை இன்பமாய் எண்ணியது, அஞ்ஞானம். ஞானம் இருந்தால், என்ன வந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

- வாரியார் வாக்கு, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers