Saturday, January 12, 2013

கொடுங்கூற்று என் செயும்?


 மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது மனதில் வந்து போகின்றன.  பல சமயங்களில் பயம் எட்டிப் பார்க்கிறது.  ஏன் என்று தெரியவில்லை.

 

ஔவையார் கூறுவது
 
...கணபதி என்றிடக் காலனும் கைதொழும்’

 
அருணகிரிநாதர் உரைப்பது

..கொடுங்கூற்று என் செயும்
குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும்,
தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!குமரேசனது இரு தாள்கள் (பாதங்கள்) அதில் ஒலிக்கும் சிலம்புகள், சதங்கைகள், தண்டைகள், ஆறுமுகங்கள், பன்னிருதோள் களும், அதில் கடப்பமலர் மாலையும், முன்னே வந்து தோன்றும்போது, எமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.


அபிராம பட்டர் அருளுவது

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய - கவர்ந்து கொண்ட, செவ்வியும் - செம்மையான (நிறம்), அவ்வியம் - அசுத்தங்கள், வெவ்விய - சினம்/கோபம்

 
அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.


திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்
சுலபமாக்கித் தருகிறார்

 
....எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே!


மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.

 
என்றெல்லாம் தினமும் படித்தாலும், அமரத்வம் என்று ஏதுமில்லை.  பிறந்தவன் மரிப்பான்.  மரணம் வந்தே தீரும். தடுக்க முடியாது.  படத்தில் வரும் ‘எல்லோருக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் போட்டுத்தான் இறைவன் அனுப்பறான்’ என்றெல்லாம் சில சமயங்களில் முதிர்ச்சியாய் எண்ணினாலும் ஏனோ மரணத்தின் மீதான அச்சம் போகவேயில்லை.

 
வாழ்க்கையை நான் விரும்பும்படி - புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது, ஆலயங்களுக்குச் செல்வது, நல்ல படங்களைத் தியேட்டரில் பார்ப்பது, உணவு வகைகளைத் தேடிச் சாப்பிடுவது, சமயத்தில் என்னை நொந்து கொள்வது, குடும்பத்தை ஓரளவுக்குச் சீராகக் கொண்டு செல்வது, எழுதிக் கிழிப்பது - என அமைத்துக்கொண்டாலும் இந்த எண்ணம் சமீப காலமாய் வந்தும், போயும் கொண்டிருக்கிறது.

 
நிற்க.

 
வருடத் துவக்கத்தில் எங்கள் குலதெய்வம் குணசீல ப்ரஸன்ன வேங்கடாசலபதி பெருமானையும், என்னைக் காத்த, காக்கும் தெய்வம் சுவாமிமலை சுவாமிநாதனையும் தரிசித்து விடுவேன். 

 
சுவாமிமலையில் பொது தரிசனத்தில் ஐயப்ப பக்தர்கள் திரண்டிருந்ததால், ஐம்பது ரூபாய் சிறப்புத் தரிசனத்தில் சுவாமிநாதனைத் தரிசனம் செய்தேன்.   முருகனைப் பார்த்துக் கொண்டும்,  தோத்திரங்களைப் படித்துக் கொண்டுமிருந்தேன்.
 

விபூதி அலங்காரத்தில், கையில் வேலுடன், வெள்ளிக் கவசத்தில் பிரம்மாண்டமாய் நின்ற முருகன், தனிமை, ஏகாந்தம் என் மனதை ஈர்த்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே உட்காரச் செய்துவிட்டது.  வார்த்தைகளில் விவரிக்க இயலாத, அனுபவித்துதான் அறிய முடியும் சூழல்.

 
வெளியில் வந்து, பிரகாரத்தைச் சுற்றும்போது மனதில் தோன்றியது ‘ போறுமேடா! இதுக்கு மேலே என்ன வேணும்?  அப்படியே செத்துப் போயிறலாம்!’

 
அப்பனுக்கு மட்டும் அல்ல, இந்தப் பொடியனுக்கும் கூட சுவாமிநாதன் ஒரு பாடத்தைத் தந்ததாகத்தான் நினைக்கிறேன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers