Friday, December 06, 2019

சுந்தர காண்டம் - 10 - மதிமுட்டுவன மாடம்

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்குள் களைப்பு மேலிடுகிறது; அதே போல அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்கும்.

ஆனால், நாம் போற்றும் பணிவு கொண்ட, தன்னம்பிக்கை நிறைந்த, ஆற்றல் மிக்க அனுமன், யாராலும் தாண்ட முடியாத பெருங்கடலைத் தாண்டிய பின் எப்படி இருந்தான்?

சிறிது கூடச் சிரமமில்லாமல், திரிகூட மலையின் மீதிருக்கும் இலங்கையைக் காண்கிறான்.
மலர்களால் உதிர்க்கப்பட்ட மலர்களின் மழையில் மூழ்கடிக்கப்பட்ட அனுமன், பெருங்கடலைக் கடந்த வந்த சுவடே தெரியாது, பெருமூச்சு விடாது, வாட்டமில்லாது இருக்கிறான்.

சந்திரன் தோன்றியதும் லங்கை கண்கொள்ளாக் காட்சியாகி ஆகாயத்தில் மிதக்கும் விந்தையெனத் தோன்றுகிறதாம் அனுமனுக்கு.

கிரிமூர்த்நி ஸ்திதாம் லங்காம்
பாண்டரைர்ப வநை: ஸுபை: |
ஸத்தர்ஸ: கபி: ஶ்ரீமாந்
புரம் ஆகாசகம் யதா || (ஸர்க்கம் 2, சுலோகம் 19)

கம்பநாடன் வான்மீகி வழி வந்தவனாயிற்றே? சும்மா இருப்பானா?

பொன்கொண்டு இழைத்து
மணியைக்கொடு புனைந்த
மின் கொண்டு இழைத்த
வெயிலைக்கொடு சமைத்த,
என் கொண்டியற்றிய?
எனத் தெரிகிலாத
வன் கொண்டல் தாவி
மதிமுட்டுவன மாடம்.

லங்கையின் செல்வத்தையும், நகர அமைப்பையும் வர்ணிக்கும் போது, அவை பொன் கொண்டு இழைத்த மாடமாளிகைகளில் ரத்னங்கள் பொதிந்திருந்தன என்கிறான். அவை 'மின்னலில் ஒளி கொண்டோ, சூரியனின் ஒளிகொண்டோ, எதைக் கொண்டு இயற்றப்பட்டன?' என்று திகைக்கும் வண்ணம், வானைத்தை முட்டி நிற்கின்றன என அனுமனோடு சேர்ந்து கம்பனும் வியக்கிறான்.

'சீதாப்பிராட்டியைத் தேடுமுன் என்ன செய்ய வேண்டும்?' என்று யோசிக்கத் துவங்குகிறான் அனுமன்.

Thursday, December 05, 2019

சுந்தர காண்டம் - 9 - சிவபெருமானே அனுமன்

ஏற்கெனவே எழுதியதுதான். மீண்டும் ஒரு முறை.

கைலாய மலையே பெயர்ந்து, இராவணேசுவரனை நசிப்பிக்க வந்தது போல வந்து கொண்டிருந்தானாம் அனுமன் எனக் கம்பநாடன் அருளினான்.

அனுமனை 'சிவபெருமானின் வடிவம்' என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை துளஸீதாசர் பெருமானுக்கு. அனுமன் சாலீஸா என்கிற உயரிய தோஹாவில், சிவபெருமான் தான் அனுமன் என்பதை உறுதிபடச் சொல்கிறார்.

सङ्कर सुवन केसरीनन्दन ।
तेज प्रताप महा जग बन्दन ॥६॥

சங்கர ஸுவன கேசரீ நந்தன |
தேஜ ப்ராதாப மஹா ஜகவந்தன || 6 ||

நீ சிவபெருமானின் அவதாரம். கேசரியின் மகன்.
உனது தேஜஸையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது.

जो यह पढ़ै हनुमान चालीसा ।
होय सिद्धि साखी गौरीसा ॥३९॥

ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா |
ஹோயி ஸித்தி ஸாகீ கௌரீசா || 39 ||

இந்த அனுமன் சாலீஸாவைப் படிப்பவனுக்கு கௌரீயுடன் கூடிய சிவபெருமான் அருள் புரிகிறார்; அதனால், அவன் பரிபூரண நிலையை அடைகிறான்.

கம்பநாடன் சாதாரணமானவனா? அவனும் உணர்ந்தேயிருப்பதால், தோதாகப் பாட்டில் வைத்து விட்டான் இங்கு. இதற்கு முன்னாலும் வைத்தான்.

தன் அரசன் சுக்ரீவனின் துன்பக் கடலை நீக்க இராமபிரான் வந்துவிட்டான் என்பதை அனுமன் எப்படி உரைத்தானாம் சுக்ரீவனிடம்?

"ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்."

ஆலகால நஞ்சையுண்ட சிவபெருமானைப் போல அரிய நடனம் ஆடிக் கொண்டே உரைத்தானாம் அனுமன்.

வான்மீகி முனிவரும் உணர்ந்ததால் தான், அனுமன் சீதாப் பிராட்டியைக் காணாது துயறுற்று, பின் அசோகவனத்தைத் தேடாது போனோமே என்று வனத்துள் புகுமுன், காரிய ஸித்திக்கு வேண்டி, "நமோஸ்து ருத்ர:" எனச் சிவபெருமானை(யும்) தொழுதானாம் அனுமன் என்கிறார்.

ஆக, சிவன் வடிவில் எழுந்தருளிய அனுமன் வாக்கில் இராமபிரான், இலக்குவன் தொழுதலோடு, சிவபெருமானும் இயற்கையாய் இணைந்து விடுகிறான்.

இது பற்றி நான் முன்பு எழுதியிருந்ததைப் படிக்க:

Wednesday, December 04, 2019

சுந்தர காண்டம் - 8 - கயிலையங்கிரியும் ஒத்தான்

சுந்தர காண்டம் பற்றிய பதிவுகளுக்குப் பின்னால் சான்றோர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள், பல புத்தகங்கள், இணையச் சுட்டிகள் தவிர,

இராமாயணத்தில் தோய்ந்த, ஆன்மீக வாழ்வில் அதீத ஈடுபாடு உடைய, என் மீது அளப்பரிய பிரியம் கொண்ட, எனது நண்பர் கணேஷ் அவர்களின் வழிகாட்டுதல்களும்,

'அவன் அருளாளே அவன் தாள் வணங்கி'யும் உண்டு.

இது பற்றி முழு விவரங்களைத் தொடர் முடிந்த பின் பகிர்கிறேன்.

============================================

மாபெரும் பணியில் ஈடுபடவிருக்கும் அனுமனின் மார்பு விரிகிறதாம்; தோள் வீங்குகிறதாம்; ஆர்ப்பரித்துத் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறானாம்; குன்றின் மீது ஏறி நின்று கடலைப் பார்வையிடுகின்றானாம். இது உவமைப்படுத்துகிறான் கம்பன்.

மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்.

மகேந்திர மலைமீது நின்ற அனுமனை கூர்மாவதாரமாகிய ஆமை மீது தோன்றிய மந்திர மலையைப் போல இருந்தானாம் (மலை கடைந்து அமுதம் வந்தது; அனுமன் கடல் கடந்து மகிழ்ச்சி வந்தது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்).

தரை அதிரும்படி நடந்து செல்லும் அனுமனின் வேகத்தால் மரங்களிலுள்ள பூக்கள் எல்லாம் உதிர்ந்து மலையெங்கும் பரவி இருந்தன என்கிறார் வான்மீகி முனிவர்.

உற்சாகம் பீறிட, 'சீதாப் பிராட்டியை எங்கிருந்தாலும் அழைத்து வருவேன்' என்கிறானாம்.

சுவாசத்தையடக்கி, காலால் மலையை உதைத்து அனுமன் எழும்பிய போது, வழியனுப்பும் உறவினர்கள் போல, கூட சில மரங்களும் சென்று கடலில் விழுந்தனவாம்.

வான்மீகி முனிவருக்கு வார்த்தைகள் வரவில்லை - கடல் கடந்து செல்லும் அனுமனை வர்ணிக்க... சூரியன்; பெரிய மலையே பெயர்ந்து வந்தது; யானை; பெருங்கலம் (கப்பல்); கார்மேகம் எனத் தேடித் தேடிப் பதங்களை இடுகிறார்; அனுமனின் உற்சாக ஊற்று அவரையும் விடவில்லை.

கம்பநாடன் சாதாரணமானவனா? இன்னும் யோசிக்கிறான்.

பெயர்ந்து வந்த மலை போல வருகிறான் - எப்படி?

முன்னர் இராவணேசுவரன் கயிலாய மலையைத் தூக்க முயன்ற போது, சிவபெருமானாரின் கட்டை விரல் அழுத்தத்தினால் நசுங்கிப்போனான். அது போதாதென்று அவனை மேலும் நசிப்பிக்கக் கைலாய மலையே பெயர்ந்து வந்ததாம்.

அண்ணல் வாள் அரக்கன்தன்னை அமுக்குவாம் இன்னம் என்னா
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங்கிரியும் ஒத்தான்.

அனுமன் கடல் கடந்து விட்டாலும், சுந்தர காண்ட ஆனந்தக் கடலில் நாம் இன்னும் நீந்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

Tuesday, December 03, 2019

சுந்தர காண்டம் - 7 - வல் வில் ராமனே துணை

சுந்தர காண்டம் எதனால் மற்ற காண்டங்களிலிருந்து உயர்ந்து, பாராயண முறையில் முதன்மையாய் நிற்கிறது?

சீதாப் பிராட்டியை நம் ஆன்மா (ஜீவன்)வுக்குப் பொருத்திக் கொள்வோம்; சீதாப்பிராட்டி சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை, வசிக்கும் ராக்ஷஸர்கள், அவர்களின் தலைவன் இராவணேசுவரன் - ஸம்ஸார ஸாகரம், லௌகீக விஷயங்கள், நமது ஐம்புலன்களுக்குப் பொருத்திக் கொள்வோம்.

இவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, துக்கப்பட்டு, கரை சேர மாட்டோமா, இறைவனை அடைய மாட்டோமா என ஒரு ஆன்மா துடிக்கிறது; துடிக்கக் கூடும். எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிட்டி விடாது; அப்படிக் கிட்ட, நமக்குப் பூர்வ ஜன்ம பலன் இருக்க வேண்டும்.

இப்படித் துக்கப்படும் ஜீவன் (எ) ஆன்மாவைக் கண்ட, பரம கருணை கொண்ட இறைவன், அதைத் தேடிச் சென்று தன்னிடம் இணைத்துக் கொள்ள ஆச்சார்யனை அனுப்புகிறான்.

ஆச்சார்யனின் தரிசனம் ஜீவனுக்குக் கிடைத்தது, இறைவனுடைய அளவற்ற கருணையை ஆச்சாரியன் ஜீவனுக்கு உபதேசித்தது, தன்னைக் காப்பாற்றுவான் இறைவன் என ஜீவன் தைரியம் கொண்டது, தன் நிலைமை, தன் சோகத்தை ஆச்சாரியன் மூலமாய் இறைவனுக்குத் தெரிவித்துக் கொண்டது, ஆச்சாரியன் ஜீவனின் விண்ணப்பத்தை இறைவனிடம் சேர்த்ததைத்தான் சுந்தர காண்டம் சொல்கிறது.

உலக மாயைகளில் இருந்து நம்மைத் திருப்பி, அஞ்ஞானம் விலக்கி, ஞானம் தந்து, முக்தி அடைவதற்கான விதை சுந்தர காண்டத்தில் விதைக்கப்பட்டது. ஆகையால்தான், இது சுந்தர காண்டமெனத் தகும்.

இதைத்தான் கம்பநாடனும் சுந்தர காண்டத்தின் துவக்கத்தில், கடவுள் வாழ்த்தாய் அருளுகிறான்.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப், பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா(டு) உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்?
அவர் என்ப கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே;
மறைகளுக்(கு) இறுதி ஆவார்.

மாலைக் காலத்தில், வழியில் நெளிந்து கிடக்கும் கயிறானது, பாம்பின் உருவமாய்க் காணப்பட்டுப் பார்ப்போரையெல்லாம் பயங் கொள்ளச் செய்வது போல,
ஐம்புலன்களின் இயல்பாகிய இவ்வுலகம் மாயையால் மூடப்பட்டுப் பரம்பொருளை அறியாதவாறு செய்து விடுகிறது.

யாரைக் கண்டால் இது நீங்கும்? வேதங்களின் முடிவில் கூறப்படும் பரம்பொருள், இலங்கையை அழிக்க வந்த - கைகளில் கோதண்டம் ஏந்திய - இராமபிரான்-ஆல் நீங்கும்.

வான்மீகி வழியில் வந்த கம்பநாடன், சுந்தர காண்டத்தின் சாரத்தை கடவுள் வாழ்த்தாய் அருளியதில் ஆச்சரியமில்லைதான்.

Monday, December 02, 2019

சுந்தர காண்டம் - 6 - ததோ ராவண நீதாயா:

சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கத்தின் முதல் சுலோகம்

ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸத்ரு கர்ஸந: |
இயேஷ பதமந் வேஷ்ட்டும் சாரணா சரிதே பதி ||

பொருள்:

இராமபிரான் பணி வெற்றியடைய வேண்டும் எனபதற்காக ஜாம்பவானால் தூண்டப்பட்ட, எதிர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய அனுமன், ராவணனால் அபகரிக்கப்பட்ட சீதாப் பிராட்டியைக் காண, சாரணர்கள் செல்லும் ஆகாயத்தில் செல்ல விரும்பினார்.

இதற்குப் பலப்பல அர்த்தங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் உன்னிப்பாய்க் கவனித்து விட்டு மேலே போகலாம்.

ராவண நீதாயா: ஸீதாயா: - ராவணேசுவரனால் அபகரிக்கப்பட்ட, அல்லது கொண்டு செல்லப்பட்ட, சீதாப் பிராட்டி என்கிற பொருளைக் கொள்ளுமாறு வான்மீகி முனிவர் அமைத்திருக்கிறார்.

ஆக, சீதாப்பிராட்டியின் தெய்வீகத் தன்மை (ஸாத்வீகம்) அக்னியிடத்தில் இருந்தது என்றும், மனிதத் தன்மை (ராஜஸம்) மஹாவிஷ்ணுவின் வலது திருக்கரத்தை எப்போதும் அலங்கரித்தது என்றும், அழிக்கும் தன்மை (தாமஸம்)யைத்தான் ராவணேசுவரன் கவர்ந்து போனான் என்பதை 'ராவண நீதாயா: ஸீதாயா:' என்பதன் மூலமாய் வான்மீகி முனிவர் அருளினார்.

இத்தெய்வீகத்தன்மையை மீட்க, இராமபிரான் 'அக்னிப் பிரவேச' நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது சுவராஸ்யம்.

அழிக்கும் தன்மை கொண்டதால்தான், இராவணேசுவரனால் சீதாப் பிராட்டியின் கை பிடித்து, கவர்ந்து செல்ல முடிந்தது. இப்படித்தான் வான்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆயின், கம்பன் படைத்த சீதாப் பிராட்டி 'கற்பின் கனலி'யாதலால், அவளைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகிறானாம்.

வான்மீகி முனிவர் இவ்வாறு அருளியதற்குக் கிருஷ்ண்ப் ப்ரேமி ஸ்வாமிகள் மிக அழகாய்க் காரணம் சொல்லுவார். 'உன்னை என்னால் ஒரு நொடியில் அழித்து விட முடியும். ஆனால், இராமபிரானால் கொல்லப்பட்டால்தான் எனக்குப் பெருமை. அதனால், உன்னைச் சும்மா விடுகிறேன்' எனப் பொறுமையாய்ச் சீதாப் பிராட்டி இராவணேசுவரனுக்குப் போதிப்பதைப் பொருத்திப் பாருங்கள் என்பார்.

அழிக்கும் தன்மை கொண்டது ஒருநாள் அழியத்தான் வேண்டும்; அதற்கு முன் கரையேற இறைவனைச் சரணடையத்தான் வேண்டும்.

அதைச் செய்ய ஒரு தூண்டுகோல் வேண்டும். அதைத்தான் அனுமன் செவ்வனே சுந்தர காண்டத்தில் செய்கிறான்.

Sunday, December 01, 2019

சுந்தர காண்டம் - 5 - சாகஸ நாயகன்

பக்தியாலும் அனுமன் மீது கொண்ட பேரன்பாலும் நமக்குப் பல விஷயங்கள் புலப்படுவதேயில்லை.

1. அனுமன் சீதாப் பிராட்டியை இதற்கு முன் கண்டது இல்லை. முன்னே பின்னே அறிந்திராத ஒருவரை, பலத்த பாதுகாப்பை அரணாகக் கொண்ட இலங்கையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவாலான பணியை அனுமன் தவிர யாரால் முடித்திருக்க இயலும்?

2. வழியில் எங்கும் தங்க மாட்டேன் என்கிற வாக்கைக் காப்பாற்றுவதற்காக, முதல் நாள் பகலில் கிளம்பி, இரவில் இலங்கையில் தேடி, அதிகாலையில் சீதாப் பிராட்டியக் கண்டு, காலையில் ராக்ஷஸர்களை யுத்தத்திற்கு அழைத்து, இராவணேசுவரனுக்கு உபதேசித்து, வாலில் வைத்த நெருப்புக்கு இலங்கையை உணவாக்கிப் பின் உடனே திரும்பும் - ஒரு நாள் - அசகாயச் செயல்களைக் கொண்டது சுந்தர காண்டம்.

3. ஒரு தூதன் நடந்து கொள்ள வேண்டிய முறை, அறிவின் நுட்பம், செய்ய வேண்டிய பணிக்கு ஊறு விளைக்காத இதர செயல்களின் மூலம் தலைவனின் பெருமையை உணர்த்தி மேலும் உயரச் செய்தல். இவைகளை அனுமன் செவ்வனே செய்தான்.

4. எந்த ஒரு சவால்கள், சிக்கல்கள் நிறைந்த பணியில், கதையின் நாயகன் வெற்றி பெறுவான் என்பது நமக்கு முதலிலேயே தெரியும்; அது போலத்தான் அனுமன் வென்றே தீர வேண்டும் என்கிற முடிவுக்கு நாம் எட்டிவிடுவதால், அவரது அசகாயச் செயல்களை நாம் எளிதாகப் பார்க்கிறோம். ஆனால், அவனோ ஒவ்வொரு பணியையும் செய்து முடித்தவுடன் தன் தலைவனும், இறைவனும் ஆன இராமபிரானுக்கு அர்ப்பணித்து விட்டான்.

5. யாரிடம் என்ன சொல்லவேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எந்தச் சூழலில் எப்படி இயங்க வேண்டும் என்பதை அனுமனைத் தவிர யாரும் அறிந்ததில்லை.
சுந்தர காண்டம் ஒவ்வொரு ஸர்க்கத்திலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

அனுமன் கடல் கடந்து இலங்கையை அடைந்து விட்டான். நாம், இன்னும் சுந்தர காண்டம் கடலில் மூழ்காது, அலைகளில் கால்களை நனைய விட்டு, ஆனந்தமாயிருக்கிறோம்.

Saturday, November 30, 2019

சுந்தர காண்டம் - 4 - பணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்

சுந்தர காண்டத்தின் நாயகன் அனுமன்தான் என்பதை உறுதி செய்ய அனுமனே நமக்குத் துணை நிற்கிறான்.

தன்னைச் சோதிக்க வந்த ஸுரஸைக்கு இராம காதையைச் சொல்கிறான்.

சீதாப் பிராட்டியின் காணாது, தன்னிரக்கத்தில் மூழ்கும்போதும் இராம காதையை இயல்பாகவே அனுமன் அசை போடுகிறான்.

துக்க ஸாகரத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீதாப் பிராட்டியை இராம காதையைச் சொல்லி கரை ஏற்றுகிறான்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பகைவர்கள் என்றாலும், கைலாய கிரியைப் பேர்த்தெடுத்த இராவணேசுவரன் முன்னால் நின்றாலும், உறுதியாய் இராம காதையை நயம்பட உரைக்கிறான்.

இராமபிரானிடம் தன் வீரப் பிரதாபங்களைச் சொல்லாது, 'கண்டேன் சீதாப்பிராட்டியை!' என்று மட்டும் சொல்லி மகிழ்ச்சியைத் தூண்டுகிறான்.

தான் நாயகன் அல்ல, இராமபிரானின் தாசானு தாசன் தான் என்பதை முக்கியமான கட்டங்களில் உணர்த்தியதோடு அல்லாமல் நமக்குப் பாடத்தையும் வைக்கிறான்.

அது, பணிவாய் இருப்பது; இயங்குவது. இதை நாம் புரிந்து கொண்டால் போதுமா?

பணிவாய் இருப்பது, இயங்குவது என்பது தன்னம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்ல. அது அனுமனிடம் நிறைய இருக்கிறது.

கடலைத் தாண்டு முன், "இராமபாண இலக்கு போல இலங்கை ஒன்றே குறியாய்க் கொண்டு சீதாப் பிராட்டியைத் தேடுவேன். அங்கு இல்லாவிடில், தேவலோகம், ஆகாயத்திலும் தேடுவேன். சீதாப்பிராட்டி கிடைக்காவிடில் இராவணேசுவரனைக் கட்டிப் பிடித்து இழுத்து வருவேன். எப்படியும் சீதாப் பிராட்டியோடு திரும்புவேன்" - தன்னம்பிக்கை!

சீதாப் பிராட்டி கலங்குவதைச் சகியாது, "இப்போதே இராமபிரானிடம் சேர்த்து விடுகிறேன்" - தன்னம்பிக்கை!

யுத்தம் செய்யாவிட்டால், இராவணேசுவரனைக் காண முடியாது என்பதால், ஒற்றை ஆளாய்ப் போருக்கு அழைக்கிறான் அனுமன் - தன்னம்பிக்கை!

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தர்மம் புரியாது என்றாலும், இராவணேசுவரன் காது கொடுத்துக் கேட்க மாட்டான் என்றாலும், இதமாய் ஆயின் உறுதியாய் "சீதாப் பிராட்டியை இராமபிரானிடம் இணைக்கா விட்டால் அழிந்து போவாய்" என்று உரைக்கிறான் - தன்னம்பிக்கை!

வானரங்களுக்கு முக்கியமானது வால்; நெருப்பு வைத்தாலும் கலங்காது, இலங்கையைப் பகலில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று அனுமன் எண்ணுவது - தன்னம்பிக்கை!

ஆக, பணிவும், தன்னம்பிக்கையும் நிறைந்த ஆயின், அனுமனின் அளப்பரிய சாகசங்களைக் கொண்ட சுந்தர காண்டத்தை நாமும் தினமும் கொஞ்சமேனும் பயின்று, பணிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வோம்.

Friday, November 29, 2019

சுந்தர காண்டம் - 3 - கடல் தாண்டினான்

இராமாயணத்தின் மிகப் பெரிய ஸர்க்கங்களில் ஒன்றான சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கம் பற்றி விரிவாகப் பேசுமுன் அனுமன் கடல் தாண்டிய படலத்தைப் படித்து விடலாம்.

ஜாம்பவனால் தூண்டப்பட்ட அனுமன், இராவணேசுவரனால் எடுத்துச் செல்லப்பட்ட சீதாப் பிராட்டியைக் காண கடல் தாண்டும் முயற்சியில் இறங்கினான்.

அப்படி ஈடுபட்ட போது, மூன்று தடங்கல்கள் / இடையூறுகள் அனுமனுக்கு நிகழ்ந்தன.
1. மைநாக பர்வதம் அனுமனை பூஜிக்க வேண்டிக் கடலில் இருந்து வளர்ந்தது.

2. தேவர்களின் தூண்டுதலின் பேரில், ஸுரஸை அனுமனைத் தன் வாயினுள் புகுமாறு பணித்தது.

3. தனக்கு உரிய ஆகாரம் கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியுடன், ஸிம்ஹிகை என்கிற ராக்ஷஸி அனுமனைக் கொல்ல நினைத்தது.

இம்மூன்றையும் அனுமன் அநாயாசமாய்க் கடந்தான். கடலையும் தாண்டினான் சிறு களைப்பில்லாது.

இவைகளில் உயரிய அர்த்தம் இருக்கிறது எனப் பெரியோர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
எந்த ஒரு நல்ல காரியத்தை (அ) மேலான காரியத்தை நாம் செய்யும்போதும், மூன்று வகை இடையூறுகள் வரும்.

1. உறவினர்கள் - தன்னை வாயு பகவான் இந்திரனிடமிருந்து காப்பாற்றியமையால் மைநாக பர்வதம், வாயுவின் மகனான அனுமனை உபசரிக்கக் கடலில் இருந்து எழுந்தான்.

2. நண்பர்கள் - நேர்மறையான எண்ணம் கொண்டவர்களே நண்பர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் நம்மை நயத்துடன் அணுகி, ஸுரஸையைப் போல, சோதனை செய்து பார்ப்பது, நம் வலிமையை அறிவதற்காக இல்லை; இவன் செய்யப்போகிற காரியத்திற்குத் தகுந்தவனா என்பதை அறியவே.

3. எதிரிகள் - ஸிம்ஹிகை போன்ற எதிரிகள் 'எப்போது வீழ்வான் இவன்?' எனக் காத்துக் கொண்டிருப்பது கண் கூடாய்த் தெரியும். இவர்களையும் மீறித்தான் மேலான காரியங்களை முடித்துக் கொள்ள முடியும்.

இதைத்தான் அனுமன் அவனுக்கே உரிய பாணியில், கடல் தாண்டும் படலத்தின் போது, மைநாக - ஸுரஸை - ஸிம்ஹிகை எதிர்கொள்வதன் மூலம் நமக்குப் பாடம் கற்பிக்கிறான்.

அனுமன் சதா துதிக்கும் இராமபிரானின் முதல் பாணம் தாடகை எனும் பெண் மீதுதான்; அவர் பாதம் பணிந்து, வேறேதும் எண்ணம் செலுத்தாத அனுமன் முதலில் அழித்ததும் ஸிம்ஹிகை எனும் பெண்ணைத்தான். அந்த அளவிற்கு இராமபிரானிடம் தன்னைக் கொடுத்த அனுமனின் தாள் பணிவோம். போற்றுவோம்.

கடல் தாண்டி இலங்கைக்கு அனுமன் வந்து விட்டாலும், முதல் ஸர்க்கத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் சில...

Thursday, November 28, 2019

சுந்தர காண்டம் - 2 - நேர்மறை நோக்கு வாழ்வைத் தருவது

சுந்தர காண்டத்தில் தற்கொலை விளிம்பு வரை செல்லும் இரண்டு பாத்திரங்கள் உண்டு.

எங்கு தேடியும் சீதாப் பிராட்டியைக் காணாது கலங்கி நிற்கும் அனுமன் (ஸர்க்கம் 12-13) வழி தெரியாது தன்னந்தனியாய்ப் புலம்புகிறான். 'கடலைத் தாண்டினேனே, மைனாகப் பர்வதத்தின் நட்பு பூண்டேனே, ஸுரஸையை ஜயித்தேனே, ஸிம்ஹிகையைக் கொன்றேனே, இலங்கை தேவதையை வென்றேனே, இலங்கையில் எல்லா இடங்களிலும் பரிபூர்ணமான சுதந்திரத்துடன் தேடினேனே, ஆனாலும், 'அம்மா'வைக் காணவில்லையே? என்ன செய்வேன்?' என்று அரற்றும் அனுமனின் சோகம் படிக்கும் உங்களையும் பற்றிக் கொள்ளும்.
'இராமபிரானிடம் 'சீதாப்பிராட்டியைக் காணவில்லை' எப்படி இயம்ப முடியும்? இங்கேயே பட்டினி கிடந்து உயிர் துறக்கிறேன்' என்கிற அனுமனின் முடிவு, அசோக வனத்தைக் கண்டவுடன் அடியோடு மாறிப் போகிறது.

இதே போல ராவணேசுவரனால் மிரட்டப்பட்டு, ராக்ஷஸிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு, 'இராமபிரான் எனைக் காக்க வருவாரா?' என்கிற ஐயப்பாடு மிகுந்து, சீதாப் பிராட்டி, 'சரி! பின்னலைக் கொண்டு தூக்கில் தொங்கலாம்' (ஸர்க்கம் 28) என்கிற கொடிய முடிவுக்குத் தள்ளப்படும் கட்டம்.  மிகவும் நெருக்கடியான சூழலில், அனுமன் மூலமாய் இராமாயணத்தைக் கேட்க நேரிடுகிறது; சுப சகுனங்கள் தோன்றுகின்றன. அனுமனுடனான சந்திப்பு சீதாப் பிராட்டியை வலிமை கொள்ளச் செய்கிறது.

நம் அனைவரின் வாழ்விலும் இத்தகைய தருணங்கள் வராமலிருக்கவும், வந்து மீளாது இருந்தாலும், சுந்தர காண்டம் பாராயணம் செய்வது போதுமானது.

வாழ்வை நேர்மறையாய் நோக்கக் கண்டிப்பாய் சுந்தர காண்ட பாராயணம் உதவும்.

Wednesday, November 27, 2019

சுந்தர காண்டம் - 1 - சோகம் நீக்க வல்லது

வான்மீகி இராமாயணத்தில் பால, அயோத்திய, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர என ஏழு காண்டங்கள் உண்டு.

நடுவில் அமைந்திருக்கும் சுந்தர காண்டம் புனிதமானது என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. ஏன்?

1. ஸேநா நாயகன் அங்கதன், வழி நடத்துபவன் ஜாம்பவான், தெற்கே தேடும் வானரக் கூட்டத்தின் - கடலைத் தாண்டி சீதாப் பிராட்டியைக் காண முடியுமா - சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

2. கடல் தாண்டி வந்தாலும், லங்கா தேவதையை வென்றாலும், லங்கா நகரம் முழுவதும் சுற்றி வந்தாலும், சீதாப் பிராட்டியைக் காண இயலாது பிதற்றும் அனுமனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

3. தன் நாயகனை விட்டுப் பிரிந்து, வருவரா, தன்னை மீட்பாரா, மீட்கும் வரை உயிர் மிஞ்சுமா, இதுதான் வாழ்வா, இப்படி வாழ்வது தேவைதானா என மீளாத் துயரில் ஆழ்ந்து, தற்கொலை எண்ணம் வரை சென்ற சீதாப் பிராட்டியின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

4. ராஜ்யத்தைப் பெற உதவி செய்த நண்பன் இராமபிரானுக்குக் கைம்மாறு ஏதும் இதுவரை செய்ய இயலாமல் போனதே என்று பரிதவிக்கும் சுக்ரீவனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

5. 'கண்டேன் சீதையை!' எனும் இரண்டு வார்த்தைகளில் இராமபிரானின் அளப்பரியச் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

உங்களைச் சோகம் பற்றிக் கொள்ளும் தருணங்களில் 'சுந்தர காண்டம்' போதும். வாழ்வின் அருமையையும், பொறுமையின் அவசியத்தையும் மிக அழகாய்க் கற்றுத் தரும்.

உலக வாழ்விலிருந்து உய்வு அடைய, இராமபிரான் - சீதாப் பிராட்டி அருள் கிட்ட, அனுமனின் ஆசிகள் பெற, சுந்தர காண்டம் நிச்சயம் உதவும்.

முந்தைய பதிவுகள்

Followers