இராமாயணத்தின்
மிகப் பெரிய ஸர்க்கங்களில் ஒன்றான சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கம்
பற்றி விரிவாகப் பேசுமுன் அனுமன் கடல் தாண்டிய படலத்தைப் படித்து விடலாம்.
ஜாம்பவனால் தூண்டப்பட்ட அனுமன், இராவணேசுவரனால் எடுத்துச் செல்லப்பட்ட
சீதாப் பிராட்டியைக் காண கடல் தாண்டும் முயற்சியில் இறங்கினான்.
அப்படி ஈடுபட்ட போது, மூன்று தடங்கல்கள் / இடையூறுகள் அனுமனுக்கு நிகழ்ந்தன.
1. மைநாக பர்வதம் அனுமனை பூஜிக்க வேண்டிக் கடலில் இருந்து வளர்ந்தது.
2. தேவர்களின் தூண்டுதலின் பேரில், ஸுரஸை அனுமனைத் தன் வாயினுள் புகுமாறு பணித்தது.
3. தனக்கு உரிய ஆகாரம் கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியுடன், ஸிம்ஹிகை என்கிற ராக்ஷஸி அனுமனைக் கொல்ல நினைத்தது.
இம்மூன்றையும் அனுமன் அநாயாசமாய்க் கடந்தான். கடலையும் தாண்டினான் சிறு களைப்பில்லாது.
இவைகளில் உயரிய அர்த்தம் இருக்கிறது எனப் பெரியோர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
எந்த ஒரு நல்ல காரியத்தை (அ) மேலான காரியத்தை நாம் செய்யும்போதும், மூன்று வகை இடையூறுகள் வரும்.
1. உறவினர்கள் - தன்னை வாயு பகவான் இந்திரனிடமிருந்து காப்பாற்றியமையால்
மைநாக பர்வதம், வாயுவின் மகனான அனுமனை உபசரிக்கக் கடலில் இருந்து
எழுந்தான்.
2. நண்பர்கள் - நேர்மறையான எண்ணம் கொண்டவர்களே
நண்பர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் நம்மை நயத்துடன் அணுகி, ஸுரஸையைப்
போல, சோதனை செய்து பார்ப்பது, நம் வலிமையை அறிவதற்காக இல்லை; இவன்
செய்யப்போகிற காரியத்திற்குத் தகுந்தவனா என்பதை அறியவே.
3. எதிரிகள்
- ஸிம்ஹிகை போன்ற எதிரிகள் 'எப்போது வீழ்வான் இவன்?' எனக் காத்துக்
கொண்டிருப்பது கண் கூடாய்த் தெரியும். இவர்களையும் மீறித்தான் மேலான
காரியங்களை முடித்துக் கொள்ள முடியும்.
இதைத்தான் அனுமன் அவனுக்கே
உரிய பாணியில், கடல் தாண்டும் படலத்தின் போது, மைநாக - ஸுரஸை - ஸிம்ஹிகை
எதிர்கொள்வதன் மூலம் நமக்குப் பாடம் கற்பிக்கிறான்.
அனுமன் சதா
துதிக்கும் இராமபிரானின் முதல் பாணம் தாடகை எனும் பெண் மீதுதான்; அவர்
பாதம் பணிந்து, வேறேதும் எண்ணம் செலுத்தாத அனுமன் முதலில் அழித்ததும்
ஸிம்ஹிகை எனும் பெண்ணைத்தான். அந்த அளவிற்கு இராமபிரானிடம் தன்னைக்
கொடுத்த அனுமனின் தாள் பணிவோம். போற்றுவோம்.
கடல் தாண்டி இலங்கைக்கு அனுமன் வந்து விட்டாலும், முதல் ஸர்க்கத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் சில...
No comments:
Post a Comment