Sunday, January 27, 2013

தணியா வதிமோ கதயா பரனே!

..பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே!
 
 -கந்தரநுபூதி

‘தணியா அதிமோக தயாபரனே!’ இங்கு மோகம் என்றால் கணவன் மனைவியிடத்து வைக்கும் மோகம் என்று பொருள் அல்ல. மோகம் என்றால் கருணை. முருகனது அருள் பெற்றவர் அருணகிரிநாதர். முருகனைச் சிந்திக்கும் அடியார் பார்க்கும் திக்கில் காமம் இருக்காது. ஆகையினாலே, சுப்பிரமணிய சுவாமி வள்ளியிடம் போய்ப் பணிந்தாரா? பணியவில்லை. பணியவில்லையா? பணிந்தார்.

பதினெட்டு வருடங்களாக ஒருவனுக்குக் குழந்தை இல்லை. பிறகு முருகனருளால் பிறந்தது. குழந்தைக்கு வயது ஒன்றரை ஆயிற்று. ஒரு நாள் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. தாய் புறக்கடையில் வேலையாயிருந்தாள். தகப்பன் அறுவடைக்குச் சென்றிருந்தான். குழந்தை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. எதிரே ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கைத் தொட்டால் சுடும் என்று குழந்தைக்குத் தெரியாது. ஏதோ பிரகாசமான பொருளாக இருக்கின்றதே என்று எண்ணி, விளக்கின் தண்டைப் பிடித்துக் கொண்டு தொட முயன்றது. அந்தச் சமயத்தில் குழந்தையின் தகப்பன் வந்தான். குழந்தையை அப்படியே வாரி அணைத்து, ‘திருத்தணி முருகா! நான் வர அரை நிமிடம் தாமதமாயிருந்தால் குழந்தையின் கதி என்னவாயிருக்கும்? எல்லாம் உன் செயல்!’ என்றான். குழந்தையைக் கவனிக்கவில்லையென்று தாயைக் கோபிக்கலாமா? விவேகமில்லாதவர்கள்தான் மனைவியைக் கோபித்துக்கொள்வான். கருணையும் அன்பும் நிறைந்த தந்தை குழந்தைக்கு விளக்கைத் தொட்டால் சுடும் என்று சொல்ல விரும்பினார். குழந்தைக்குச் சொன்னாலோ புரியாது.

விளக்கினால் குழந்தைக்கு இடர் வரும். அதனால் விளக்கியே தீரவேண்டும். விளங்காத குழந்தைக்கு விளங்க வைக்க வேண்டும். என்ன சொல்லி விளக்குவார்? குழந்தைக்கு முன் தந்தை இரண்டு தடவை விளக்கில் கை வைப்பது போல் வைத்தார். உதறினார். அழுதார். வைத்தாரா? வைக்கவில்லை. வைக்கவில்லையா? வைத்தார். உதறினாரா? இல்லை. உதறவில்லையா? உதறினார். அழுதாரா? இல்லை. அழவில்லையா? அழுதார். விளங்காத குழந்தைக்கு விளங்க வைத்தார். அது போல முருகன் நடித்துக் காண்பிக்கிறார். என் திருவடியை நினைந்தாலொழிய இந்த மகமாயை தொலையாது எனறு விளங்க வைக்கிறார் முருகன்.

கந்தரநுபூதி விரிவுரை (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகன் வாரியார் பதிப்பகம்) புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers