Saturday, March 31, 2012

இராம நவமி!

இராம நவமியன்று பிறந்தவர் என் தந்தை. 

தன் பிறந்த நாளை இராமனின் நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து திளைத்தவர்.  ராம கதையைச் சொற்பொழிவாற்றி, பல உள்ளங்களைக் குளிர்வித்தவர்.  வால்மீகி / கம்பரில் திளைத்து, திளைத்து மெருகேற்றிக்கொண்டவர்.  சுந்தர காண்டம் ஸப்த ஸர்க்க (ஏழு அத்தியாயங்கள்) பாராயணத்தைத் தினமும் செய்து, ஆன்ம பலத்தைப் பெருக்கி, குடும்பத்தை ஏற்றம் பெறச் செய்தவர்.  குருவாய் இருந்து, ராம நவமியன்று எனக்கு சுந்தர காண்டம் எடுத்துக்கொடுத்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாகவும், ஆன்மீகமாயும் எதிர்கொள்ளச் செய்தவர்.

அவரைப் பற்றிப் பேசுவதை விட இந்நாளில் இராமனைப் பற்றிச் சிந்திப்பதையே விரும்பியிருப்பார் என்பதால் ‘உயிர் எழுத்து’-ல் அமைந்த, ராமனின் சரிதத்தைச் சொல்லும் பாடலை (அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து) என் தந்தையின் தாள்களில் வணக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

‘அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

Friday, February 11, 2011

அம்பகவ”:


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி:

ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம் : மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை . எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி, எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

நன்றி – கல்கி

Sunday, September 25, 2005

பீமரதசாந்தி

அதாத: ஸம் ப்ரவக்ஷ்யாமி சாந்திம் பீம ரதா பிதாம்
ஹாயனே ஸப்ததிதமே ம்ருத்யுர் பீம ரதோபவேத்
ஷன் மாஸான் ம்ருத்யு மாப்ணோதி தணஹாநிஸ்ததைவச
புத்ர தாராதி நாசஸ்ச த்ரவ்ய தான்ய பசுக்ஷய ஹ
தத்தோஷ சமநார்த்தாய சாந்திம் குர்யாத் விதானாதஹ
ஜன்ம மாஸே ஜன்மதினே ஜன்மர்§க்ஷவா பலான்விதே
-ஸ்ரீ சௌனக மஹரிஷி

விரிவுரை
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் 70-ம் ஆண்டில் பீமரதம் (மிக பயங்கரமான ரதம்) என்னும் வாஹனத்தில் ஏறி ம்ருத்யு (யமன்) நம்மைத் தீர்க்க (அழிக்க) வருகிறான். அது முடியாவிடில் நமது குழந்தைகளுக்கு மரணம், வ்யாதி, விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் குழப்பம், சண்டை முதலியவைகளை ஏற்படுத்துகிறான். அதுவும் முடியாவிடில் திருட்டு, தன நாசம், பிராணிகள் நாசம் முதலிய இழப்புகளை ஏற்படுத்துகிறான். இத்தனை இழப்புகளையும் நீக்க வேண்டுமானால் நமது ஜன்ம தினத்தன்று ம்ருத்யுஞ்ஜயனான ஸ்ரீ பரமேச்வரனை "ஸ்துஹி ஸ்ருதம்" என்னும் மந்திரம் கொண்டு வழிபடவேண்டும். மேலும் ப்ரும்மா, விஷ்ணு, துர்க்கை, அஷ்ட திக் பாலகர்கள் முதலிய தெய்வங்களை "பீமரத சாந்தி" என்னும் இம்முறையில் வழிபடுபவர்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுள், வியாதியற்ற வாழ்க்கை, குடும்பத்தில் ஒற்றுமை ஐஸ்வர்ய சம்ருத்தி முதலிய §க்ஷமங்களோடு வாழ்ந்திருப்பார்கள்.

விளக்கவுரை
ஸ்ரீ பரமேச்வரனுடைய அனுக்¢ரஹத்தினால் நமது எல்லா பாவங்களும் விலகி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மனஸ் ஸாந்தி முதலிய எல்லா நன்மைகளும் நமக்குக் கிடைக்க ஸ்ரீ ருத்ர ஏகாதசினி என்னும் இந்த ஜப ஹோம வைபவம் உதவுகிறது. 59-ம் வயது முடிவில் "உக்ரரத சாந்தி", 60 வயது முடிவில் "ஷஷ்டியப்த பூர்த்தி", 70 வயது முடிவில் "பீமரத சாந்தி", 80 வயது முடிவில் "சதாபிஷேகம்", 90 வயதில் "விஜயரத சாந்தி", 100 வயதில் "கனகாபிஷேகம்"- பிள்ளைவழிப் பேரனுக்குக் குழந்தை பிறந்த பிறகு "ப்ரபௌத்ர சாந்தி" முதலிய வைபவங்களைச் செய்து மேற்படி காலங்களில் ஏற்படும் வ்யாதி, ம்ருத்யுபயம் முதலியவற்றை நீக்கி ஸகல §க்ஷமங்களையும் அடையும்படி சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

-திரு பி. ஆர். ராஜா வாத்தியார், சென்னை

Saturday, September 24, 2005

பூத்தவளே!

'பூத்தவளே' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி, மாத்தவளே என்கிறது அம்பிகையை. மாத்தவளே என்றால் அரிய பெரிய தவம் செய்தவள் என்பது பொருள். தவமே தானாகிய தாய் ஏன் தவம் செய்கிறாள்? சின்னப் பிள்ளைகளூக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றால் சின்னப் பிள்ளை மாதிரியே நாம் நடந்து கொண்டு புரிய வைத்தால் லகுவில் புரியும். குழந்தைகட்கு 'அ-ஆ' சொல்லும் ஆசிரியை, குழந்தைகளை விடப் பெரிதாக வாயைத் திறந்து கொண்டு, குழந்தைத்தனமான முகத்துடன் 'ஆ' சொன்னால் அப்படியே குழந்தைக்குப் பதிந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு சின்னப் பிள்ளைத்தனமாகப் பெரியவர்கள் சேட்டை செய்கிறார்களோ, அவ்வளக்கவ்வளவு விரைவாகக் குழந்தைகள் மனத்தில் அது பதியும்.'
நமக்கெல்லாம் தவத்தைச் சொல்லிக் கொடுக்க வந்த அம்பாள் மனுஷத்தனமாகத் தவமிருந்தால் தானே தவம் நம் தலையில் ஏறும். அப்படித் தவமிருந்த விஷயமே ஒரு பெரிய விழாவாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது ஒரு ஊரில்..பத்து நாள் திருவிழா. ஆடித் தபசு என்று சங்கரன்கோவிலில் நடைபெறும் பெருவிழா.

- ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் - திரு சுகி சிவம், வானதி பதிப்பகம்.

Friday, September 23, 2005

பஜனின் உள்ளர்த்தம்

பஜனின் உள்ளர்த்தத்தை பாபாவே ஒரு முறை விளக்கியிருக்கிறார்.

'ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி, உரத்த குரலில் கத்தினால், மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும் எல்லாப் பறவைகளும் பறந்தோடிவிடும். மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பலவகைப் பறவைகள் உட்கார்ந்து நம்மைத் திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் எவை? காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் இவையெல்லாம் சேர்ந்து எழுப்பும் கலவையான ஒலியில் உங்களது மன அமைதியும் சமநிலையும் கெடுகின்றன. உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும். உங்கள் மனம் தூய்மையாகும். இதயம் அமைதியடையும்'

-குருவே சரணம், பிரபுநந்த கிரிதர்

Saturday, September 03, 2005

நித்யப் பிரளயம்

வாழ்நாள் முழுவதும் எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணை வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ¨க்ஷ வைத்துக்கொள்ளலாம். அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரிதான் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படித் தினமும் நாம் 'சாகிற' போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்புக்கிடையே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேற நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸ¤லபமாக இருக்கும். ஆனால் பண்ணிப்பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷ¢யோ, நடராஜாவோ, தக்ஷ¢ணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ - எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த இஷ்டதெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸ¤க்கு ஆறுதலாகவும், ரம்யமாகவும் இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். இப்படி ஏமாறாமல் பழகிக்கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சியில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
-காஞ்சி மஹா பெரியவர்

Thursday, August 04, 2005

வரி வசூல் பற்றி...

வண்டானது எப்படிப் புஷ்பத்துக்கு வலி தெரியாமல் தேனை எடுத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் ராஜா பிரஜைகளுக்குக் கொஞ்சங்கூட சிரமம் தெரியாமல், அவர்களூடைய மலர்ச்சி குன்றாமலே வரி வசூலித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதை இன்னொரு உவமையால் இன்னும் அழகுபடுத்திச் சொல்லியிருக்கிறான் உவமைக்கே பெயர் பெற்ற காளிதாஸன்.

'ஸ¤ர்யன் எப்படி முதலில் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சிக் கொண்டு அப்புறம் அதை பூமிக்கே மழையாகப் பொழிகிறானோ, அப்படி திலீபன் பிரஜைகளிடமிருந்து வசூலித்ததைப் பிறகு அவர்களுடைய நலனுக்கேயான காரியங்களில் செலவிட்டான்' என்கிறான்.
-காஞ்சி மஹா பெரியவர்

Tuesday, August 02, 2005

லுலு..லுலு

பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில் "லுலு..லுலு" என்று திரும்பத் திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வையாளர் பார்த்தார். "இந்த மனிதனுக்கு என்ன பிரச்னை?" என்று அவர் வைத்தியரிடம் கேட்டார். "லுலு என்கிற பெண் அவரை ஏமாற்றிவிட்டாள்" என்று வைத்தியர் பதில் சொன்னார். அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில், பஞ்சு நிரம்பிய பல பைகள் பொதிந்துள்ள சுவர்களை உடைய ஒரு அறைக்கு வந்தனர்; அங்கிருந்தவர், சுவற்றில் தனது தலையைத் திரும்பத் திரும்ப மோதிக்கொண்டு "லுலு" என்று முனகிக்கொண்டு இருந்தார்.

"இந்த மனிதரின் பிரச்சினையும் லுலுதானா?" என்று கேட்டார் பார்வையாளர்.
"ஆமாம்" என்றார் வைத்தியர், "இவரைத்தான் லுலு, கடைசியாகத் திருமணம் செய்துகொண்டாள்"

வாழ்க்கையில் இரண்டு இன்னல்கள் மட்டுமே இருக்கின்றன.
நீங்கள் ஆசைப்படுவதை அடையாமல் இருக்கிறதும்....
நீங்கள் ஆசைப்படுவதை அடைகிறதும்!

-அந்தோணி டி மெல்லோ அவர்கள் எழுதிய தவளையின் பிரார்த்தனை (பாகம் 2) , கண்ணதாசன் பதிப்பகம்

Wednesday, July 27, 2005

இறை நம்பிக்கை

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...
இருந்தும்.........உன்னை நேசிக்கவே செய்கிறேன்...
ஏனெனில்..நான் சுவாசிக்க வேண்டும்!

Sunday, July 17, 2005

ஆமை ஓடு

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். தாய்மார்களுக்கு என்ன கொடுத்தார்? அழகு. ஆண்களுக்கு வீரம். நரிக்குத் தந்திரம், குதிரைக்கு வேகம், மாட்டுக்கு உழைப்பு, மயிலுக்குத் தோகை, சிம்மத்துக்கு ஆற்றல், யானைக்குத் தந்தம், சேவலுக்குக் கொண்டை. ஆமைக்கு வேகம் குறைவு. அதற்காகப் பகவான் ஓடு கொடுத்தார். தற்காப்பாக.

அந்த ஓடு இல்லையென்றால் ஆமை விரைவில் செத்துப் போகும். ஓடு இருப்பதினாலே ஆமையைக் கொல்ல முடியாது. ஓடு அவ்வளவு மொத்தமானது (thickness). ஐந்து பேர் ஒன்று சேர்ந்தார்கள். மாரன், தீரன், வீரன், சூரன், கோரன்; ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, மூன்று கல் எடுத்து, அடுப்பு மாதிரி வைத்தார்கள். வெல்லம் காய்ச்சுகிற இரும்புக் கொப்பரை வைத்து, இருபது குடம் தீர்த்தத்தை வார்த்து, ஆமையை அந்தத் தண்ணீரிலே தூக்கிப்போட்டு, மேலே ஒரு பித்தளைத் தாம்பாளத்தை, அது துள்ளிக் குதித்து ஓடாவண்ணம் மூடி, நான்கு எடை சவுக்குக் கட்டையை வைத்து தீ வைத்தார்கள். ஆரம்பத்தில் தண்ணீர் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இனிமேல்தான் கட்டை தீப்பிடித்துத் தளதள என்று தண்ணீர் கொதித்து, ஆமை செத்துப் போகும். இப்பொழுது தண்ணீர் ஜில் என்று இருப்பதால், ஆமை நீந்தி விளையாடும். ஆனால், இன்னும் அரைமணி கழித்துத்தானே தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது? இது கதை அல்ல.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்பனதான் அந்த அடுப்பு மாதிரியான மூன்று கற்கள். இந்தத் தேகம்தான் இரும்புக்கொப்பரை. ஆசைதான் அந்த நீர். அந்த ஐந்து பேர் தான் ஊறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்பன. ஆத்மா என்கிற ஆமையைப் போட்டுப் பந்த பாசம் என்னும் தாம்பாளம் இட்டு, தீவினை என்கிற அக்கினியை மூட்டிவிட்டு இருக்கிறார்கள். இந்த ஆமையாகிய நாமெல்லாம் 'அந்த ஓட்டலிலே பூரி, மசாலா நன்றாக இருக்கிறது. இந்த ஓட்டலிலே ரசம், வடை எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறோம். இது யார் சொன்னது? அப்பர் பெருமான் சொல்லுகிறார்.

வளைத்து நின்(று) ஐவர் கள்வர்
மனத்திடைத் துயரஞ் செய்து
தளைத்து வைத்(து) உலையில் ஏற்றி,
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்(று) ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்து நின்(று) ஆடுகின்றேன்;
என் செய்வேன் தோன்றி னேனே!

-அப்பர் தேவாரம்

ஏன் இந்த ஆமை துன்பப்பட்டது? துன்பத்தை இன்பமாய் எண்ணியது, அஞ்ஞானம். ஞானம் இருந்தால், என்ன வந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

- வாரியார் வாக்கு, வானதி பதிப்பகம்

முந்தைய பதிவுகள்

Followers