Friday, January 10, 2020

சுந்தர காண்டம் - 46 - துரும்பினும் இளையோன்!

இவற்றைச் செவியுற்ற சீதாப்பிராட்டி அழுது நடுங்குகிறார். ஆயினும், தன் பிரியமானவரை, இராமபிரானை நினைத்தவுடன் துணிவு வந்து விடுகிறது.

துரும்பைக் கிள்ளி அவனுக்கும் தனக்கும் இடையில் இட்டுப் பேசத் துவங்குகிறார்.
த்ருணமந்த்ரத: க்ருத்வா ப்ரத்யுவாச ஸுசிஸ்மிதா||

தன் தகுதிக்குக் கீழானவர்களுடனும், பேசக்கூடாதவர்களுடன் பேசும்போதும், கையாளும் பண்டைய வழக்கம்.

பாவம் செய்தவன் நற்கதியை அடைய முடியுமா?

தருமத்தை நினைத்துப் பார். நான் பிறன் மனைவி. பதிவிரதை. உனக்கு ஏற்றவளல்ல.

எப்படி உன் மனைவிகள் உன்னால் காப்பாற்றப்படுகிறார்களோ, அப்படியே பிறர் மனைவியும் காப்பாற்றப்படத்தக்கவர்கள்.

இங்கு நல்லவர்கள் இல்லையா?

அல்லது அவர்கள் சொல்லியும் கேட்காது உன் புத்தி இப்படி விபரீதமாகச் செல்லுகிறதா? (விஷமக்கார மகனைக் கண்டிக்கும் அன்னையைப் போல)

செல்வத்தைக் காட்டி என்னை மயக்க முடியாது. சூரியனுக்கு ஒளியைப் போல இராமபிரானுக்கு நான்; அவரையன்றி வேறு ஒருவரை என் உள்ளம் நாடுமா?

சொல்வதைக் கேள்; ராவணா! என்னை இராமபிரானிடம் கொண்டு போய் விட்டுவிடு; அவரிடம் நட்பு கொள்; உயிர் தப்புவாய். இல்லையேல் சரமாரியில் விழும் அவரது அம்புகள் இந்நகரில் வந்து பாயும். (மிரட்டுகிறார்)

நீ ஒரு கோழை/பேடி/வீரம் இல்லாதவன்; இராம-இலக்குவர் இல்லாத சமயத்தில் முனி வேடம் பூண்டு என்னை அபகரித்தாயே? இது வீரத்தில் சேர்த்தியோ? (இடித்துக் காட்டுகிறார்).

Thursday, January 09, 2020

சுந்தர காண்டம் - 45 - மின் மருங்கும் அரிதாக்கியோ!

பல பெண்களைச் சேர்வதும், பிறன் மனை கவர்வதும் அரக்கர் வழக்கம்.

உன் மனம் மாறியதும் என் ஆசை கரம் புரண்டு ஓடும்.

நீ சோகத்தில் ஆழ்ந்திருப்பது சரியல்ல. என்னை நம்பு. என்மேல் அன்பு செலுத்து.

பெண்களுக்குள் மாணிக்கம் நீ. இப்படி இருக்கலாமா?

ஸ்த்ரீ ரத்னம் அணி மா ஏவம் பூ: குரு காத்ரேஷு பூஷணம்

எழில்மிகு இளமை வீணாய்ப் போகிறது; ஆற்று வெள்ளம் போல போன நாட்கள் திரும்புமா?

உன்னைப் படைத்த பின் பிரமனே ஓய்வு கொண்டான்; ஆஹா! எங்கெங்கு விழிகளைச் செலுத்தினாலும் உன் அழகே அழகு!

கம்பநாடனும் பிரமனுடைய விந்தையை வியக்கிறான்; ஆயினும் ஒரு குறையாம். என்ன?

தெருளு நான்முகன் செய்ததுன் சிந்தையின்
அருளும் மின்மருங்கும் அரிதாக்கியோ

'இடை எவ்வளவு சிறியதாய்க் கண்ணுக்குப் புலப்படாது இருக்கிறதோ, அவ்வளவுதான் உன் கருணை என் மீது!

(மின்மருங்கும் - மின்னலைப் போன்ற இடை, பொருந்தாக் காமம் கொண்டோர்க்குத் தேவியின் கடைக் கண் பார்வை கூடக் கிட்டாது என்கிறான் கம்ப நாடன்).

நான் இறப்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படவில்லை; என்னை விட ஏற்ற துணைவன் உனக்கு இல்லையே? என்றே நான் கவலைப்படுகிறேன்.

எங்கெல்லாமே சென்று, உத்தமப் பெண்களைக் கொணர்ந்து வந்திருக்கிறேன்; அவர்களனைவருக்கும் மேலாக நீ முதலிடம் பெறுவாய்.

உலகையே உன் பொருட்டு வென்று உன் தந்தை சனக மகாராஜாவிற்கு அளிப்பேன்.

அந்த நாடிழந்த இராமன் உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ?

கருடன் பாம்பைக் கொத்திப் போவது போல என் மனதைக் கவர்ந்து விட்டாய்! (கருடன் பாம்பைக் கொத்தியபின், பாம்பிற்கு அழிவுதான் என்பதைத் தன்னையறியாது கூறுகிறான்).

இராமன் தவத்திலோ, பலத்திலோ, வீரத்திலோ, செல்வத்திலோ, உடல் அமைப்பிலோ, புகழிலோ எனக்கு ஈடாகான் (இராமபிரானைப் பார்த்திராமலேயே, அவர் நிகரற்றவர் என்கிறான்!).

தேவலோகத்தில் ஶ்ரீதேவிக்குத் தேவ மகளிர் எப்படிக் கைகட்டிச் சேவகம் செய்வார்களோ, அப்படி இங்கு உனக்கு நடக்கும்.

என்னுடைய செல்வத்தை ஏற்றுக்கொண்டு என்னையும் ஏற்றுக்கொள்; நாமிருவரும் உல்லாசமாய்ச் சுற்றி வரலாம்.

என மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறான் இராவணேசுவரன்.

Wednesday, January 08, 2020

சுந்தர காண்டம் - 44 - மறம் தரு செங் கணாய்!

வான்மீகி முனிவர் அருளியிருக்கும் இராவணேசுவரனின் உரையாடல், காமத்தில் மூழ்கி, பொறுமை இழந்த மூர்க்கன், முரடன் போலவே தொடங்கும்;

'அழகியவளே! நீ என்னைப் பார்த்து அச்சப்பட்டு உன் மார்பகங்களையும், வயிற்றையும் மறைத்துக் கொள்வதன் மூலம் அவை என் கண்களில் படாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் போலும்!'

'உன்னைக் கண்டு யார்தான் மயங்க மாட்டார்? உன் அகன்ற கண்கள் போதுமே!' என்றுதான் துவங்குகிறான்.

எவ்வளவு பெரிய அறிவாளியாயிருந்தாலும், பேரரசை ஆண்டாலும், வீரத்தைக் கொண்டாலும், பொருந்தாக் காமம் எல்லாவற்றையும் அழித்து, மூர்க்கனாக்கி விடும் என்பதே வான்மீகி முனிவர் நமக்கு உரைக்கும் பாடம். காமம் என்பதை ஆசை எனப் பொதுப் பொருள் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் இரகசியம் எளிதாய் நமக்கு விளங்கிப் போகும்.

ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் கொஞ்சம் வித்தியாசமான வில்லன்; தீமை செய்வதிலும் தன் நுட்பமான அறிவினைச் செலுத்துகிறான்; அதனாலேயே, இழிந்த காமத்தைக் கலையாக மாற்றிப் போற்றிப் பேசுகிறான்.

இன்று இறந்தன, நாளை இறந்தன,
என் திறம் தரும்தன்மை இதால்;

'நீ இரங்குவாய் எனக் கருதிய பல இன்றைய தினங்களும், உன் மனம் மாறும் என நான் கருதிய பல நாள்களும் கடந்து போயின! உன் அருள் அந்த அளவிற்குத்தான் என் மீது உள்ளது!' என்று புத்திசாலித்தனமான காதலனாகப் பேசத் துவங்குகிறான். ஆனாலும்...அவனே சொல்லும் சொற்கள்...

மறம் தரு செங் கணாய்! - மேலோட்டமாய்ப் பார்த்தால், கண்களால் கொல்லாதே என்கிற பொருள்தான்; ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் வாயிலாகவே, 'தேவி! உன் கண்களால் என்னை எரித்துச் சாம்பலாக்கும் வல்லமை உண்டு' என்பதைத் தன்னை அறியாது சொல்கிறான்.

Tuesday, January 07, 2020

சுந்தர காண்டம் - 43 - வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்!

பட்டினி, சோகம், தியானம், பயம் இவை நான்கும் ஒருங்கே சீதாப்பிராட்டியை வாட்ட, உடல் நலிந்து, மெலிந்து தவம் செய்யும் அன்னையைப் போலிருக்கும் சீதாப்பிராட்டியிடம் ஆசை வார்த்தைகளைக் கொட்டுகிறான் இராவணேசுவரன்.

தான் அழிந்து போவதற்குத்தான் இப்படிப் பேசுகிறான் என்பார் வான்மீகி முனிவர்.

    அனுவ்ரதாம் ராமமதீவ மைதிலீம் ப்ரலோபயாமாஸ வதாய ராவண: 

'கொடிய நஞ்சை அமுதமென நினைத்து வேண்டும் தீயோன்' என்கிறான் கம்பநாடன்.

    வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்.

எப்பேர்ப்பட்ட மாவீரன் இராவணேசுவரன்?  கைலாய கிரியைப் பெயர்க்கத் துணிந்தவன்; சிவபெருமானிடம் அளவற்ற பக்தியை உடையவன்; சிவபெருமானை வணங்கும்போதும் தன் பெருமைக்குப் பங்கம் வராமல் காப்பவன்; குறைவில்லாத வீரம் கொண்டவன்; பொருந்தாக் காமத்தில் விழுந்த பின், வெட்கம் மட்டுமே மிஞ்சிப் போய் வந்து வந்து போகிறது என்று ஏசுகிறான் கம்பநாடன்.

    கூசிக் கூசி இவையிவை கூறினான்.

இனிய சொற்களால் சீதாப்பிராட்டியின் மனத்தை மாற்ற முயற்சிக்கிறான் இராவணேசுவரன்.

Monday, January 06, 2020

சுந்தர காண்டம் - 42 - வந்தான் இராவணேசுவரன்! (நிறைவுப் பகுதி)

அனுமன், மிகுந்த பராக்கிரமசாலி என்றாலும் (அப்போது), இராவணேசுவரனின் மாயாஜாலத்தின் முன் எடுபடாது, இலைகளின் அடர்ந்த பகுதியில் தன்னை மறைத்துக் கொள்கிறான்.

பொருந்தாக் காமம் எனும் மதம் பிடித்த யானையைப் போல வந்து கொண்டிருக்கும் இராவணேசுவரனையும், சோகமே அணிகலனாய்க் கொண்ட தூயவளான சீதாப்பிராட்டியையும் மாறி மாறிப் பார்த்து அனுமன் மனம் பதைக்கிறான்.

ஊசல் ஆடி உளையும் உளத்தினன்

அனுமன் தடுமாற்றம் அடைந்து, மன உளைச்சல் கொண்டான் என்கிறான் கம்பநாடன்.

இராவணேசுவரனால் ஏதும் தீங்கு வாராதிருக்க வழக்கம்போல இராமபிரானையே தோத்திரம் செய்திருக்க வேண்டும் அனுமன்; ஆயின், சீதாப்பிராட்டியைக் கண்ட பின் அனுமனது உள்ளம் அவரின் பால் அளவற்ற பக்தி கொண்டு விடுகிறது. அதைப் பாடலில் உணர்த்திய கம்பநாடன் அறிவை என்னென வியப்பது!

வாழி சானகி! வாழி இராகவன்! 
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்! 
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான் 
ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான்.


ஒவ்வொரு யுகத்திலும் புதுமையான புகழை உடைய அனுமன் என்று கம்பநாடன் அருளியதைப் படிக்கும்போது நமக்கு அனுமன் மீது பக்தி பெருகுகிறது.

கம்பநாடன் இராவணேசுவரனின் மாட்சியை விளக்குவதற்காக பத்தொன்பது பாடல்களை அருளினான்; வான்மீகி முனிவர் ஸர்க்கம் 17-18-களில் இராவணேசுவரனின் மாண்பையும், சீதாப்பிராட்டியின் நிலையையும் உருக்கத்தோடு அருளுகிறார்.

ஏன் இவ்வளவு விரிவாகத் தீயவனைச் சித்தரிக்க வேண்டும்? சீதாப்பிராட்டி தன் கற்பையும், பிறப்பையும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் எத்தகைய மாவீரனை எதிர்த்து நிற்கிறார் என்பதை நமக்கெல்லாம் தெரிவிப்பதற்காகத்தான்.

சுந்தர காண்டத்தைத் தொடர்ந்து படித்தால், நமக்கும் இது போன்ற வலிமையான, நல்லவைகளைத் தொடர்ந்து நாடும் உள்ளம் நிச்சயம் கிட்டும்.

Sunday, January 05, 2020

சுந்தர காண்டம் - 41 - வந்தான் இராவணேசுவரன்!

பொழுது புலரச் சில மணித்துளிகளே உள்ள போது, வேதம் ஓதும் பிராமண ராக்ஷஸர்களின் கோஷங்களைக் கேட்கிறான் அனுமன்.  மங்கல வாத்தியங்களின் ஒலி, செவிக்கும் மனதிற்கும் இதமளிக்கும் ஒலிகளைக் கேட்டு இராவணேசுவரனும் விழித்துக் கொள்கிறான்.

இராவணேசுவரன் வருகின்ற காட்சி, அவனுடைய மாட்சியைப் போட்டி போட்டு கொண்டு வான்மீகி முனிவரும், கம்பநாடனும் அருளுகின்றனர்.

    உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர
    மேனகை வெள்ளடை உதவச்
    செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
    அரம்பையர் குழாம்புடை சுற்ற

ஊர்வசி உடைவாள் எடுத்துக்கொண்டு பின்னே வருகிறாளாம்; மேனகை வெற்றிலை வழங்குகிறாளாம்; செருப்பினைத் திலோத்தமை தாங்குகிறாளாம்; தேவ மகளிர் சூழ வரும் இராவணேசுவரன் எப்படி இருக்கிறான்?

அனுமன் வாயிலாக வான்மீகி முனிவர்,

    ஸமக்ஷமிவ கந்தர்ப்பம் அபவித்த சராஸனம்

வில்லைத் தரிக்காத மன்மதனே நேரில் வந்தது போல இருந்தானாம் என்கிறார்.  கரும்பு வில் இல்லாததுதான் குறையாம்!

பொருந்தாக் காமத்தை ஒளிக்க முடியவில்லை; மதுமயக்கம்;  தோளிலிருந்து நழுவும் வெண்மை நிறங் கொண்ட மேலாடையை அலட்சியமாக அதனிடத்தில் வைத்த அழகை அனுமன் ரசிக்கிறான்.

எண்ணற்ற மங்கையர்கள் கடைக்கண் நோக்கிக் காத்திருக்க, அவர்களை மதியாதவனாய், சீதாப்பிராட்டியை எண்ணி எண்ணிக் காமத்தீ கொழுந்தெரிய அவரை நோக்கி வருகிறான் இராவணேசுவரன்.

இச்சந்திப்பால் என்ன நிகழுமோ என அஞ்சுகிறான் தேவேந்திரன்; ஆதிசேடனோ இவனது நடையைத் தாங்காது நடுங்குகிறான்; இரணியனை அழித்த நரசிங்கத்தின் சுவட்டினைக் கண்ட யானையைப் போல, திக்கு யானைகள் அலறுகின்றன.

Saturday, January 04, 2020

சுந்தர காண்டம் - 40 - அரக்கியர்கள் சூழ் பெருந்தகை!

சீதாப்பிராட்டியைக் கண்டு உவகை கொண்ட அனுமன் அவரைச் சூழ்ந்து காவல் காக்கும் அரக்கியரைக் காண்கிறான்.

வான்மீகி முனிவரும், கம்பநாடனும் சளைக்காமல் அரக்கியரையும் வர்ணித்திருப்பது சுந்தர காண்டத்திற்கு மெருகூட்டுகிறது.

     வெருவரு தோற்றத்தர் - பயத்தை உண்டு பண்ணும் தோற்றத்தை உடையவர்கள்.

    உருவு கொண்ட ஆலம் அனைய மேனியர் - முழு வடிவம் எடுத்த விஷம் போன்ற உடலைக் கொண்டவர்கள். 

ஆறு பாடல்களில் அரக்கியரை வர்ணித்தாலும், வார்த்தைகளில் வராத அளவுக்குச் சீதாப் பிராட்டியைக் கொடுமைப் படுத்துவதால்,

    பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர் - பெண் என்று பெயரளவே தவிர பெண்மை இல்லாத திரிபு நிலையை உடையவர்கள்.

என்று மனத்தாங்கலோடு முடித்துவிடுகிறான் கம்பநாடன்.

வான்மீகி முனிவர் 17-ம் ஸர்க்கம் சுலோகங்கள் 5 - 17 வரை அரக்கியரைக் குறிப்பிட்ட பின், அனுமன் சீதாப்பிராட்டியை மீண்டும் கொண்டாடுவதாய் அமைத்திருக்கிறார்.

ஒரு கண், ஒரு காது, காதற்றவள், கூந்தல் இல்லாதவள், பன்றி - மான் - புலி - எருமை - ஆடு நரி போன்ற முகமுடையவர்கள், யானை - ஒட்டகம் - குதிரை போலக் கால்களை உடையவர்கள், எப்போதும் புலால் - கள் போன்றவைகளில் நாட்டமுடையவர்கள், விகாரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று அனுமன் காட்சியை வான்மீகி முனிவர் அருளுகிறார்.

இவர்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டி, 

    தன் நாயகனுக்குக் கட்டுப்பட்டு,
    கொடிய அரக்கியர்க்கு வசப்படாது,
    அசோகவனத்து மத்தியில் சோகக் கடலில் மூழ்கி,
    பூக்காத பூங்கொடி  போல்,

இருக்கிறார் என்று அனுமன் உருகுகிறான்.

Friday, January 03, 2020

சுந்தர காண்டம் - 39 - கண்டான் சீதாப்பிராட்டியை! (நிறைவுப் பகுதி)

இராமபிரானைத் தேடித் தேடிப் பார்வையால் வானத்தைத் துழாவும் சீதாப்பிராட்டிக்குப் பழைய நினைவுகள் வருவதாகக் கம்பநாடன் அமைத்திருக்கிறான்.

இராமபிரானின் தந்தை தயரதன் தானாகவே முன்வந்து, 'அயோத்திக்கு நீதான் ராஜா!' என்று கூறுகிறான்; மறுநாளே, 'ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய் ஏழிரண்டு ஆண்டின் வா' என்றும் கைகேயி வாயிலாகச் சொல்கிறான்.  அந்த இரு நிலைகளிலும் மலர்ந்த செந்தாமரையின் சித்திரம் போலிருந்த இராமபிரானின் முகத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறாராம் சீதாப்பிராட்டி.

    மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும்
    இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும்
    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
    ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள். 

இன்னொரு சம்பவத்தை நினைவு கூர்ந்தவுடன் அழுகை பொங்குகிறது சீதாப்பிராட்டிக்கு.

ஊரை விட்டு வனத்திற்குச் செல்லும் அரச குமாரனை வழிமறித்து, வறுமையால் வாடும் வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் தானம் கேட்கிறார்.

'உம்மால் பலம் கொண்ட மட்டும் இக்கழியை வீசி எறியும்; எங்கு கழி விழுகிறதோ அது வரையிலுள்ள நிலங்களும், பசுமாடுகளும் உமக்குத் தருவேன்' என்கிறான் இராமபிரான் புன்னகையுடன்.  வயோதிகர் ஆசை மேலிட்டுக் கழியை - உடலை வளைத்து - வீசுவதைக் கண்ட இராமபிரான் சிரிக்கிறார்.  

    பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
    அருத்தி வேதியர்க்கு ஆன் குலம் ஈந்து அவர்
    கருத்தின் ஆசை கரையின்மை கண்டு இறை
    சிரித்த செய்கை நினைந்து அழும் செய்கையாள்.

'கருத்தின் ஆசை கரையின்மை' - ஆசைக்கு அளவுதான் ஏது!

கங்கையைக் கடக்க உதவிய குகனைச் சகோதரனாக்கிக் கொண்டது; சித்திரக் கூடத்தில் பரதனைச் சடைமுடியுடன் கண்டதும் இரக்கம் கொண்டது எல்லாம் சீதாப்பிராட்டியின் நினைவில் தோன்றுகின்றன.

சீதாப்பிராட்டி நினைவில் கொள்வது இராமபிரானின் அழகும் வீரமும் அல்ல; உதார குணம், விரக்தியான மனப்பான்மை, எளியவனுடன் நட்பு, முடியிழக்கக் காரணமாயிருந்த கைகேயி மகனென்றாலும் பரதன் மீதான பாசம் மற்றும் கருணை, இவைகளே சீதாப்பிராட்டியின் மனதில் பதிந்தவை.

அத்தகைய உத்தமியைக் கண்டு அனுமன் ஆனந்தக் கண்ணீர் வடித்து, 'இராமபிரான் மிகவும் கொடுத்து வைத்தவர்' என்று நினைத்து, அவரை வணங்கி, சீதாப்பிராட்டியைக் கண்டுபிடித்த பெருமையில் மகிழ்வோடு மறைந்திருக்கிறான் அனுமன்.

Thursday, January 02, 2020

சுந்தர காண்டம் - 38 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டியின் பெருமையை அனுமன் நினைத்துப் பார்க்கிறான்.

'இவர் பொருட்டல்லவா இராமபிரான் வாலியை வீழ்த்தினார்?'

'கபந்தன், விராதன், கரன், தூஷணன் மடிந்ததும் இவரால்தானே?'

'சுக்ரீவ மகாராஜாவிற்கு அரசு கிடைக்கச் செய்ததும் இவர்தானே?'

'நான் கடல் கடந்து வந்ததும் இவர் பொருட்டல்லவா?'

'கணவன் மீது கொண்ட அளப்பரிய காதலினால் மாளிகையைத் துறந்து, வனத்தின் தனிமையை நாடினாள்; தன் கஷ்டங்களைப் பற்றி நினையாது, காய் கனிகளை உண்டு களித்திருந்தாள்.'

'இன்று இந்த அசோகவனத்தின் பூக்கள், பழங்கள், மரங்கள் எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை; சுற்றியிருக்கும் அரக்கியரும் பொருட்டில்லை.  ஒருமைப்பட்ட இவரது மனம் இராமபிரானையே நாடியிருக்கிறது.'

    நைஷா பச்யதி ராக்ஷஸ்யோ நேமான் புஷ்ப பல த்ருமான் |
    ஏகஸ்த ஹ்ருதயா நூனம் ராமமேவ அனுபச்யதி ||

இவர் உயிர் தரித்திருப்பது இராமபிரான் வருகையை எதிர்பார்த்து; ஆயின் இராமபிரான் - இவரைப் பிரிந்தும் - உயிர்தரிப்பது அசாதாரணம் என்கிற முடிவிற்கு வருகிறான் அனுமன்.

கம்பநாடனும் உருக்கமாகச் சொல்கிறான்.

    சுருதிநாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்
    சுருதி மாதிரம் அனைத்தியும் அளக்கின்ற கண்ணாள்.

இராமபிரான் வருவான் வருவான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எல்லாத் திக்குகளிலும் - வானத்தையே அளப்பது போன்ற - பார்வையை இடுகிறாளாம் சீதாப்பிராட்டி (கண்ணாள்!).

Wednesday, January 01, 2020

சுந்தர காண்டம் - 37 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

'இத்தகைய மனைவியைப் பிரிந்து உயிர் வாழும் இராமபிரான் செயற்கரிய செய்லை ஆற்றுகிறானாம்! சந்தேகமில்லை' என்று கூறுவது யார்?  திருமணம் வேண்டாத, என்றும் பிரம்மச்சாரியான அனுமன்.

அண்ணனைக் காட்டுக்குப் போ என்று சொன்னவன் தந்தையென்றாலும் அவரை விட மாட்டேன் என்று இலக்குவன் சினம் கொண்ட போது, இராமபிரான் அன்புடன், 'நம் சிற்றன்னை அறிவின் மீது தவறில்லை; நம் தம்பி பரதன் மீது தவறில்லை; நம் தந்தை மீது தவறில்லை; தம்பீ, இது விதியின் தவறு' என்று சமாதானம் செய்தது நினைவிருக்கலாம்.

வான்மீகி முனிவரும் இங்கு விதியின் வலிமையைக் கொணர்கிறார்.

'சீதாப்பிராட்டிக்கு ஏன் இப்படி நேர வேண்டும்?  இலக்குவனின் மதிப்பிற்குரியவர்; அவன் தமையனின் அன்பைப் பெற்றவளான இவரே இத்துணை துன்பப்பட வேண்டுமென்றால் 'விதி வலிமையானது' என்று கொள்ளத்தானே வேண்டும்?' என்று உருகுகிறான் அனுமன்.

    யதி ஸீதாபி துக்கார்த்தா காலோ ஹி துரதிக்ரம:

நெருப்பில் குளிப்பார்; புலன்களை அடக்குவார்; உண்ணுவதை நீக்கி நோன்பிருக்கும் முனிவர்கள் எவரும் கற்புநிலை தவறாத மகளிர்க்கு ஈடாகார் என்று உவகை கொள்கிறான் அனுமன்.

    வெங்கனல் மூழ்கியும், புனலுள் மேவியும்,
    நுங்குவ, அருந்துவ நீக்கி, நோற்பவர் 
    எங்குளர்? - குலத்தில் வந்(து) இல்லின் மாண்புடை
    நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ?

ஆம், சீதாப்பிராட்டியின் தோற்றத்தால் பிறப்பும், பெண்மையும் உயர்ந்து விட்டன.

முந்தைய பதிவுகள்

Followers