Thursday, December 06, 2018

உபதேசமும் அனுஷ்டானமும்!

நான் சொல்ல வந்த விஷயம், 'ஒருவருடைய பழக்கம் அவருக்கு நல்லதில்லை, அதை நல்லபடியாக மாற்ற வேண்டும்' என்று இன்னொருத்தருக்கு இருந்தால், இவர் அந்தப் பழக்கத்தைத் தாமே அநுஷ்டானத்தில் நடத்திக் காட்ட வேண்டும். நாம் பிறத்தியாருக்குச் சொல்வதுதான் நிஜமாகவே நல்லது என்ற நம்பிக்கை முதலில் நம் மனசில் பூரணமாக வரவேண்டும்.

இந்த மாதிரி முழு நம்பிக்கை இல்லாமலே கூடப் பெரிசாக உபந்நியாசம் பண்ணிவிடலாம். ஆனால் அது லோகத்தில் எடுபட வேண்டுமானால் முதலில் தனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கப்புறம் 'நல்லதாக நாம் நினைக்கிறதை நாமே காரியத்தில் பண்ணிப் பார்க்க முடியுமா?' என்று பிரயாசைப்பட வேண்டும். மற்றவர்களை 'அதைப் பண்ணு, இதைப் பண்ணு' என்று வைகிறது ரொம்ப சுலபம். ஆனால் நாமே அதைப் பண்ணிக் கொள்ள முடிகிறதா என்று பார்த்துக் கொண்டால்தான், இன்னொருத்தனை வைகிற லாயக்கு நமக்கு உண்டா என்று தெரியும்.

இத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் சொல்வது என்ன? நம் மனசு, ஆசைகள் இப்படி கட்டுப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்க்கக் கூடாது என்பதுதான். தன்னைத்தானே அடக்கிக் கொள்வதில்தான் எல்லாம் இருக்கிறது. அதற்குத்தான் சாஸ்திர விதிகள் எல்லாம். ஒருத்தன் எத்தனைக்கெத்தனை நல்ல நம்பிக்கையோடு, முடிகிற வரையில் தன்னை இம்மாதிரி அடக்கிக் கொண்டு, எவ்வளவு தூரம் தன்னைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறானோ, அந்த அளவுக்கு அவனால் உலகம் சீர்படும். அந்த அளவுக்குத்தான். இவன் கொஞ்சம் கூடத் தன்னை உயர்த்திக் கொள்ளாமல் உலகத்தையே உயர்த்துகிறேன் என்று எத்தனை உபந்நியாசம் செய்தாலும் வீண்தான்.

உலகம், உலகம் என்கிறேனே, இதனால் இந்த லோகம் முழுக்கவும் என்று அர்த்தமில்லை. இவன் யாரைச் சீர்படுத்த வேண்டும் என்று நினைக்கிறானோ, அவர்கள்தான் இவனுக்கு உலகம். இவனுடைய சொந்த வாழ்க்கைச் சக்தி அதிகமாக ஆக, இன்னும் தானாக மற்றவர்களும் இவன் வழிக்கு மாறலாம். இவனுடைய சொந்த நிறைவுதான் முக்கியம்.

நான் சொன்னபடி கேட்க முடியவில்லையே என்று பரிதாபப்பட்டுக் கொள்கிறீர்கள். ஸ்வாமிகள் இவ்வள்வு சொன்னாரே, நாம் கேட்கவில்லையே என்று என்னிடமும் ரொம்பப் பரிதாபப்படுகிறீர்கள். இனிமேலாவது கொஞ்சம் கேட்டால் தேவலையே என்று தனித்தனியாகவும், எல்லோரும் சேர்ந்தும் என்னிடம் பரிதாபப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கேட்கவில்லை என்பதற்காகப் பரிதாபம் வேண்டாம். வேறு எதற்காகப் பரிதாபப் பட வேண்டும்?

இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு ரொம்பக் கடுமையாகத் தோன்றினால் கூட, தனக்குத் தெரிகிற குறையைச் சொல்லத்தான் வேண்டும் என்ற நியாயப்படி சொல்கிறேன்; உங்களை நீங்கள் நல்ல வழிக்கு அடக்கிக் கொண்டு வரும்படி நான் செய்யவில்லை என்றால், என்னை நானே அடக்கிக் கொள்ளும்படியான சக்தி, எனக்கு அத்தனை குறைச்சலாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆகையால், நீங்கள் நான் சொன்னதைக் கேட்காததற்காக என்னிடம் பரிதாபம் வேண்டாம். எனக்கு என்னையே அடக்கிக் கொள்கிற சக்தி போதவில்லையே என்பதற்காகத்தான் பரிதாபப்பட வேண்டும்.

என்னை எவ்வளவு தூரம் அடக்கிக் கொள்ளும்படியான சக்தி எனக்கு இருக்கிறதோ, அவ்வளவு தூரத்துக்கே நீங்கள் எல்லாமும் திருந்தியிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் எவ்வளவு திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவும் நான் திருந்தியாக வேண்டும். அதற்கான சக்தி எனக்கு வருவதற்காக நான் ஸ்வாமியைப் பிரார்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். பிரார்த்திக் கொண்டே திருந்த முடியாமல் மறுபடியும் மறுபடியும் எத்தனை இடைஞ்சல் வந்தாலும் கஷ்டப்பட்டுக்கொண்டு, பிரயத்தனத்தைப் பண்ணியாக வேண்டும்.

இப்படிப் பண்ணி என்றைக்காவது நானும் ஸித்த புருஷனாக (நிறைந்த நிறைவு என்ற லட்சியத்தை அடைந்து, அதிலிருந்து விலகாதபடி நிலைத்துவிட்டவனாக) ஆகி விட்டேனானால், அப்போது நீங்கள் எல்லோரும் தானே அந்த ஸித்தியை அடைந்து விடுவீர்கள்; நிறைந்து விடுவீர்கள்.

-ஜகத்குரு காஞ்சிப் பெரியவர்

முந்தைய பதிவுகள்

Followers