Saturday, June 23, 2012

வீணை வித்வான்!!!சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.


பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில்  இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.


பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.


வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.


அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?


வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.


சரியா இருக்கு!


பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார்.


அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.


வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.


யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.


என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?


ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.


எதிரில் நாரதர் வந்தார்.


என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?


நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!


அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!


என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா?


எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?


ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!


கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம்.  பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம்.


பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?


(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)


மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.


ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான்.


நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.


நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும்.


அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.


நான்தான் மாட்டிக் கொண்டேனே?


பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு.  வீணை இல்லையே?


இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.


ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.


அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???


வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.
இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.


பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான்.  மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?


"யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.

1 comment:

(Mis)Chief Editor said...

ஸாயி ஸத்சரிதத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.

”எந்த ஒரு காரியத்தைத் துவங்கு முன், என்னை நினைத்துக்கொண்டு துவங்குங்கள். காரியத்தின் நிறை/குறைகளை எனக்கு அர்ப்பணித்து விடுங்கள். காரியங்களின் கர்த்தாவாக நினைத்துக்கொண்டு உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள்.” என்கிறார் ஸாயி.

இப்படிச் செய்யும்போது தவறுகள் வருவதற்கு வாய்ப்பில்லை. சரியாக நடத்திச் செல்ல குரு துணைக்கிருக்கிறார். இதையே வீணை வித்வான் செய்திருந்தால், வருந்த வேண்டியிருந்திருக்காது.

இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். தவறு செய்த ஒருவரை எப்படித் திருத்த வேண்டும் என்கிற corporate lesson இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். நிறைந்திருந்த சபையில் அவரை சங்கடத்துக்குள்ளாக்காமல், மஹா பெரியவா சுட்டிக்காட்டிய விதம் இன்றைய மேலதிகாரிகளுக்கு ஒரு பாடம்.

பகிர்ந்த திரு ரவீந்திரன் சீதாராமன் அவர்களுக்கு நன்றி.

முந்தைய பதிவுகள்

Followers