Friday, May 04, 2012

மகா பெரியவாளும் பின்கோடும்!


செகந்திராபாதில் பெரியவா முகாம்.

அப்போது ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சிலர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தனர்.  அவர்களுக்கு ஒரு பெரிய குறை…

“பெரியவாளோட அனுக்ரஹத்தால எங்களோட கர்ம அனுஷ்டானங்களை எல்லாம் கூடிய வரைக்கும் விடாமல் பண்ணிண்டு இருக்கோம்.  ஆனா…இந்த ஊர்ல, பூஜை, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் இதை எல்லாத்தையும் சரியாப் பண்ணி வெக்க, வேதம் படிச்ச சாஸ்திரிகள் இல்லே!  ஒரே ஒருத்தர்தான் இருக்கார்…அவருக்கும் பண்ணி வெக்கும்போது சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை…அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா…இந்தக் காலத்துப் பசங்களாச்சே!  அதான்…பெரியவா தயவு பண்ணி மடத்துலேந்து  யாராவது வேதம் படிச்ச சாஸ்திரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்” என்று ப்ரார்த்தனை பண்ணினார்கள்.

“ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு….” என்று பெரியவா ஆரம்பித்தபோது, ஸ்ரீ மடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக்கொண்டு போஸ்ட்மேன் வந்தார்.  பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார்.  அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டி “PIN..ன்னு போட்டிருக்கே…அதோட அர்த்தம் தெரியுமா?”

ரொம்ப சாதாரண கேள்விதான்.  அந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.  கொண்டு வந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

‘POSTAL INDEX NUMBER” என்றார் சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து.

“நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா..ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே….அவ்வளவு ஏன்? PINCODEன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம்.  ஆனா…PINCODEன்னு போட்டிருக்குற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா…அது சரியா போய்ச்சேர வேண்டிய எட்த்துக்கு போறா மாதிரி…பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ…அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்!  அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம்…அதனால, இப்போ இருக்குற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறையும் வராது! “ என்று கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத, இன்று வழக்கொழிந்து போன PINன்னை வத்தே எப்பேர்ப்பட்ட தத்துவத்தை எளிமையாக விளக்கிவிட்டார்!

மஹா பெரியவா இந்த சம்பவத்தில் PINஐ வைத்து (சும்மா) பின்னி விட்டார் என்று ஹாஸ்யமாக சொல்லத் தோன்றினாலும் என்னதொரு வியக்கத்தக்க PINPOINT கவனிப்பு?  சிறு ‘பின்’னும் விளக்கத்திற்கு உதவும் தானே!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத, இன்று வழக்கொழிந்து போன PINன்னை வத்தே எப்பேர்ப்பட்ட தத்துவத்தை எளிமையாக விளக்கிவிட்டார்!!!!!!!!!!!!

முந்தைய பதிவுகள்

Followers