Wednesday, August 18, 2010

காஞ்சி மாமுனியும், பால் ப்ரண்டனும்


யோகாப்பியாசத்தில் சித்தி பெற்று, அதன் பயனை நிதர்சனமாகக் காட்டக்கூடிய ஒரு மஹானை நான் காண விரும்புகிறேன். அவரிடம் அதிகமாகப் பேசுவதைக் கூட நான் விரும்பவில்லை. நான் இவ்விதம் கேட்பதால் என் நிலைமைக்கு அதிகமானதொரு பயனை நான் எதிர்பார்ப்பதாகத் தாங்கள் நினைக்கலாம். இவ்விஷயத்தில் எனக்கு வழி காட்டுவீர்களா?

உயரிய யோக மார்க்கத்தை நீங்கள் பயில வேண்டும் என்று நினைப்பதில் யாதொரு தவறுமில்லை. அதில் உங்கள் சிரத்தைதான் உங்களுக்குப் பயனளிக்கும். தீவிரமான மன உறுதியும் இதற்கு வேண்டும். இவை உங்களிடம் இருப்பதாகவும் நான் நினைக்கின்றேன். இப்பொழுது உங்கள் உள்ளத்தில் ஓர் ஒளி தோன்ற முற்பட்டிருக்கிறது. அந்த ஒளியே நீங்கள் கோரும் பயனை அளிப்பதற்கு உங்களுக்கு நிச்சயமாக உதவியளிக்கும்.

தாங்கள் கூறுவதை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆயினும் இதுவரை நானும் சிந்தனை செய்து வந்திருக்கிறேன். பாரத நாட்டின் பழைய காலத்து ரிஷிகள், கடவுள் நமது இதயத்திலேயே வசிப்பதாகக் கூறியுள்ளார்கள். இதை எனக்கு விளக்கமாகக் கூறுவீர்களா?

கடவுள் எங்கும் நிறைந்தவர். அவரை ஒருவர் இதயத்தில் மாத்திரம் அடங்கியவராக எண்ணிவிடலாகாது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் அவரேதான் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் நான் எந்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கூறுவீர்களா?

உங்கள் சுற்றுப் பிரயாணத்தை மேலும் தொடர்ந்து செய்து, அது ஒருவாறு முடிந்தவுடன் நீங்கள் சந்தித்த யோகிகளையும் சாதுக்களையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களில் யாரை உங்கள் மனத்திற்கு உகந்தவர்களாக எண்ணுகின்றீர்களோ, அவரையே அடையுங்கள். நீங்கள் கோரும் மார்க்கத்தை அவர் உங்களுக்கு உபதேசிப்பார்.

என் மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடியவராக எனக்கு எவருமே கிடைக்காவிட்டால், நான் மேலும் என்ன செய்ய வேண்டும்?

அவ்விதம் ஒருவரும் கிடைக்காவிட்டால் நீங்களாகவே தனிமையில் முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் தியானத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். அற்ப விஷயங்களையெல்லாம் மனத்தை விட்டு அகற்றி, உயரிய விஷயங்களை அன்புடன் சிந்தனை செய்ய வேண்டும். ஆன்மாவைப் பற்றி அடிக்கடி நினைக்க வேண்டும். அதுவே சாதனைக்கு உதவும். இந்த அப்பியாசங்களைச் செய்வதற்கு விடியற்காலையே ஏற்ற காலமாகும். மாலைச் சந்தி நேரங்களிலும் தியானம் செய்யலாம். இந்த இரண்டு நேரங்களிலுமே அமைதி நிறைந்து இருக்கும். அப்பொழுது தியானத்திற்கு இடையூறும் அதிகமாக ஏற்படாது.

என் சொந்த முயற்சியிலும் எனக்குப் பயன் கிடைக்காவிட்டால், நான் மறுபடியும் தங்கள் உதவியை நாடலாமா?

நான் ஒரு பொது ஸ்தாபனத்தின் தலைவனாக அமர்ந்துள்ளேன். அநேகமாக இரவு பகல் முழுவதுமே இந்த ஸ்தாபனத்தின் காரியங்களில் நான் ஈடுபட வேண்டியவனாக இருக்கிறேன். ஆகையால், தனிமையில் காலத்தைச் செலவிட வசதியுள்ள ஒரு குருவையே நீங்கள் நாட வேண்டும்.

உண்மையான ஆசார்யர்கள் கிடைப்பது அரிது என்றும், அதிலும் ஒரு ஐரோப்பியன் அவர்களைக் காண முடியாதென்றும் கூறுகின்றார்களே?

உலகில் உண்மையான ஆசாரியர்கள் இல்லாமல் இல்லை. அவர்களை நாம் காணவும் முடியும்.

அப்படியானால் உண்மையான ஒரு ஆசார்யரிடம் என்னை அனுப்புவீர்களா?

அப்படிப்பட்ட இருவர்களை மாத்திரம் நான் மனத்தில் கொண்டுள்ளேன். அவர்களிலொருவர் இந்த நாட்டின் தென்பாகத்தில் அடர்ந்த காட்டில் வசித்து மௌனத்தை மேற்கொண்டு வருகிறார். வெகு சிலரே அவர்களைக் காண முடியும். இதுவரை ஐரோப்பியர் எவரும் அவரைக் கண்டதில்லை. நான் அவரிடம் தங்களை அனுப்பலாம். ஆனால், அவர் ஐரோப்பியரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடலாம்.

மற்றொருவரைப் பற்றி நான் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அவர் யார்?

மற்றொருவர் நாட்டுப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவர் ஒரு சீரிய ஞானியாக விளங்குகிறார். நீங்கள் அவரை நாடிச் செல்லலாம்.

அவரைப் பற்றி நான் மேலும் விவரம் தெரிந்து கொள்ளலாமா?

அவரை மஹரிஷி எனக் கூறுவார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஜோதிமயமாக விளங்கும் அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில் அவர் வசித்து வருகிறார். அவரை அடைய மேலும் விவரங்களை அவசியமானால் தெரிவிக்கின்றேன்.

தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதே இடத்திலிருந்து என்னைக் காண ஒருவர் வந்திருக்கிறார். தங்களுக்குள்ள எவ்வளவோ முக்கியமான அலுவல்களுக்கு இடையில் தங்களது காலத்தை நான் உபயோகித்துக் கொண்டுவிட்டேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். எனக்குப் போக அனுமதி தருகிறீர்களா?

சரி, நீங்கள் தவறாது திருவண்ணாமலைக்குச் செல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

தென்னிந்தியப் பயணத்தை நான் இன்றுடன் முடித்துக் கொண்டு, நாளை புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் முன்பே செய்து விட்டேன். நான் இந்த நிலையில் என்ன செய்வது?

உங்கள் ஏற்பாட்டை மாற்றிக் கொண்டு, மஹரிஷியைச் சந்தித்த பிறகே தென்னிந்தியாவை விட்டுப் புறப்படுவது என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் விருப்பமெல்லாம் நிறைவேறும்.

பிறகு நடந்தது சரித்திர நிகழ்வு, அனைவரும் அறிந்த நிகழ்வு!!

-பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு, பாகம் 1, அல்லயன்ஸ் பதிப்பகம்

3 comments:

கீதா சாம்பசிவம் said...

அற்ப விஷயங்களையெல்லாம் மனத்தை விட்டு அகற்றி, உயரிய விஷயங்களை அன்புடன் சிந்தனை செய்ய வேண்டும்.//

உண்மையான விஷயம், ஆனால் எங்கே நம் மனசு கேட்குது?? அற்ப விஷயங்கள் தானே முக்கியத்துவம் அடைகிறது?? :((((( எல்லாத்தையுமே திரும்பத் திரும்பப் படிச்சேன். நன்றி.

கீதா சாம்பசிவம் said...

to continue

கீதா சாம்பசிவம் said...

அவர்களிலொருவர் இந்த நாட்டின் தென்பாகத்தில் அடர்ந்த காட்டில் வசித்து மௌனத்தை மேற்கொண்டு வருகிறார். வெகு சிலரே அவர்களைக் காண முடியும். //

இவர் யாருனு புரியலையே?? கொஞ்சம் க்ளூவானும் கொடுத்திருக்கலாமோ? word verification vendame! :(

முந்தைய பதிவுகள்

Followers