Wednesday, October 07, 2009

உடைகள்

முன்பு ஒரு நாள், அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துக் கொண்டன.

'நாம் சேர்ந்து குளிப்போமா?' என்று அழகு கேட்க, அவலட்சணமும் ஒப்புக் கொண்டது. இரண்டும் உடைகளைக் களைந்து விட்டு கடலில் ஆனந்தமாக நீந்திக் குளித்தன.

சிறிது நேரம் கழித்து, குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்துகொண்டு, தன் வழியே சென்றுவிட்டது.

பின்னர், குளித்துத் திரும்பிய அழகு, தன் உடைகளைக் காணாமல் தவித்துப் போனது. ஆடையில்லாமல் தெருவில் செல்வதற்கு அதற்குக் கூச்சமாக இருந்தது. ஆகவே, வேறு வழியில்லாமல், அவலட்சணத்தின் உடைகளை அணிந்துகொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை, உலகத்தார் பலரும், ஆடையை வைத்து, அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடையைப் பார்த்து முகம் சுளித்து, அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் ஆடைகளில் மயங்கி, அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

-மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான், தமிழில்: என். சொக்கன், கிழக்கு பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers