Saturday, October 03, 2009

நம்பிக்கை

இறைவனிடத்து நாம் நம்பிக்கை வைத்தல் வேண்டும். எப்படி?

"தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்" என்றான் அமைதியாக பிரஹலாதன். ந்ருஸ’ம்ம ஸ்வாமி தூணிலிருந்து வெளிப்பட்டார்!

தாலி கட்டிய ஐவர் கைகட்டி, தலை குனிந்து அமர்ந்திருக்க, இரு கைகளையும் விரித்து "கிருஷ்ணா" என்று அலறிய திரௌபதிக்குக் கிருஷ்ணன் வந்தான்!

கால்களை முதலைக்குக் கொடுத்து விட்டு தத்தளித்த கஜேந்திரன் "நாராயணா! என்னைக் காக்க வாராயோ?" என்று ஒரு முறை இரைந்தவுடன் கருட வாகனமாக எழுந்தருளினார் மஹாவிஷ்ணு!

ஆக, இறையிடத்து அசையா நம்பிக்கை வேண்டும். இதை விளக்க ஒரு சுவையான கதை உண்டு.

நாராயணனின் திருநாமத்தை எப்போதும் தன் நாவில் வைத்திருக்கும் நாரதர் பூமிக்கு ஒரு முறை வந்தார். அவரைக் கண்ட வேதியன் (வேதம் நன்கு கற்று அறிந்த அந்தணன்) ஒருவன் "ஐயா! எனக்கு ஒரு சந்தேகம்" என்றான். "சொல்லப்பா" என்றார் நாரதர். "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பொழுது போக்கு என்ன? அதை அவரிடமிருந்து கேட்டு எனக்கு சொல்ல முடியுமா?" என்றான். "நிச்சயம் சொல்கிறேன்" என்று கூறினார். வழியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைக் கண்டார். அவனும் அதே வினாவைத் தொடுத்தான். அதிசயித்த நாரதர் "எல்லாம் அவன் செயல்" என உணர்ந்தார்.

பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளைக் கண்டார். தொழுதார். பின் 'வினா'வினார். பரமன் புன்னகைத்தான். "நாரதா! என் பொழுதுபோக்கே யானைகளை ஒவ்வொன்றாய் ஊசி முனையில் நுழைப்பதுதான்!" என்றான்! நாரதர் திகைத்தார்.

மீண்டும் பூமிக்கு வந்தார். வேதியனைக் கண்டார். நடந்ததைக் கூற அவன் நாரதரை ஏளனமாகப் பார்த்தான். "நாரதரே! இது சாத்தியமே இல்லை" என்று மறுத்தான். 'சரி, செருப்புத் தொழிலாளியிடம் என்ன பாக்கி இருக்கிறதோ வாங்கிக்கொள்வோம்' என்று அவனிடம் வந்தார்.

அனைத்தையும் கவனமாகக் கேட்ட தொழிலாளி ஆனந்தக்கூத்தாடினான். நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடம் காரணத்தைக் கேட்டார்.

"ஐயா! சிறு ஆலமர விதையிலிருந்து ஒரு பெரிய ஆலமரம் வரவழைக்கும் ஆற்றல் பெற்ற கிருஷ்ணனுக்கு பெரிய யானைகளை ஊசி முனையில் நுழைத்து அனுப்புவது ஆகக்கூடிய காரியம்தானே? அவனுக்கு ஏற்ற பொழுதுபோக்குதான் அது. எனக்கு தெரியவைத்த உமக்கு கோடானு கோடி நன்றி!" என்றானே பார்க்கலாம்!

நாரதர் வெட்கத்தில் தலைகுனிந்தார். தான் கூட இதுவரை நம்பாததற்கு!

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இறைவனிடம் அசையா நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல; உங்க்ளைச் சுற்றி இருப்பவருக்கும் கூட எக்காலத்திலும் நன்மை தரக்கூடிய செயல் அது ஒன்றுதான்.

1 comment:

இன்றைய கவிதை said...

அமர்க்களமான கதை , நன்றி நன்பா

முந்தைய பதிவுகள்

Followers