Sunday, September 20, 2009

பராசக்தி

சிவனோடு பிறந்த சகோதரியைப் பிரம்மா தம்முடைய சக்தியாக்கிக் கொண்டார். விஷ்ணுவோடு பிறந்த சகோதரியைச் சிவன் தம் சக்தியாக்கிக் கொண்டார். பிரம்மாவோடு பிறந்த சகோதரியை விஷ்ணு தம் சக்தியாக்கிக் கொண்டார். இதற்கு என்ன அடையாளம்?

சிவன், ஸ்வச்சமாகப் பார்வதியோடு கலப்பில்லாமல் இருக்கக்கூடிய ஸ்வரூபம் தக்ஷ¢ணாமூர்த்தி. அவருடைய வர்ணம் என்ன? ஒரே வெளுப்பு. ஒரு கையிலே புஸ்தகம். ஒரு கையில் ஜபமாலை-இரண்டும் உண்டு. இந்த இரண்டும் எந்தப் பெண் தெய்வத்தினிடம் இருக்கின்றன? சரஸ்வதியிடம் இருக்கின்றன. அவள் நிறம் நல்ல வெளுப்பு. அவள் கையிலும் புஸ்தகமும் ஜபமாலையும் இருக்கின்றன. அவள் ஞானம் கொடுப்பவள். சிவனும் ஞானத்தைத்தான் கொடுக்கிறார். இரட்டையாகப் பிறப்பவர்களுக்கு வர்ணம், குணம் மாறுவதில்லை. சிவனும் சரஸ்வதியும் இரட்டைப் பிறப்பு.

அடுத்தாற்போல வருபவர்கள் பிரம்மாவும் லக்ஷ்மியும். பிரம்மா உருக்கிவிட்ட தங்க நிறம்; லக்ஷ்மியும் அதே நிறம்தான். இரண்டு பேருக்கும் ஆசனம் தாமரை; தாமரைப் புஷ்பத்தில் அமர்ந்திருக்கிறார்கள்; பிரம்மா, சதா சிருஷ்டி பண்ணிக் கொண்டிருக்கிறார். லக்ஷ்மியும் ஐசுவரியத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்.

மற்ற இரண்டு பேர் இருக்கிறார்கள்: விஷ்ணுவும் பார்வதியும் இரட்டை. விஷ்ணு நல்ல நீலமேக சியாமள நிறம். பார்வதியும் அப்படித்தான். அம்பாள் தனியாக இருக்கக்கூடிய ஸ்வரூபத்தைக் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். துர்க்கையாக வடக்குப் பிராகாரத்தில் கையில் சங்கு சக்கரத்தோடு அவள் இருக்கிறாள். துர்க்கையின் கையில் சங்கு சக்கரம் இல்லாமல் இருப்பதில்லை. மகாவிஷ்ணுவுக்கு சங்கு சக்கரம் இருக்கும். இவரும் பச்சை, அவளும் பச்சை. நாராயணி, நாராயண சகோதரி என்று அதனால்தான் இவளுக்குப் பெயர். லலிதாவாக இவளைப் பாடும்போது கிருஷ்ணசகோதரி என்று பாடுவது உண்டு.

இப்படி மூன்று மூர்த்தி, மூன்று சக்தி, மூன்று குணம், மூன்று அவஸ்தை-நிலை; எல்லாம் மூன்றாக இருக்கின்றன. நாம் ஒன்று தூங்கிக்கொண்டிருப்போம். அல்லது விழித்துக்கொண்டிருப்போம்! இல்லாவிட்டால் கனாக் காண்போம். சத்துவம், ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள் உண்டு. இந்த மூன்று குணங்களே மூன்று அவஸ்தைகள்.
இந்தச் சுற்றை விட்டு நான்காவதை அடைகிறபோது ஆனந்த ஆனந்த அலை உண்டாகிறது. கிட்டத்தட்ட நாமம், ரூபம் எல்லாம் மூன்றாவதற்கும் நான்காவதற்கும் ஒன்றாகவே சொல்கிறோம். மூன்றாவது சக்தியைப் பார்வதி என்கிறோம். நான்காவதும் பார்வதிதான். அவளையும் உமா என்கிறோம். இவளையும் உமா என்கிறோம்.

நான்காவது நிலை, கலப்பில்லாத பிரகாசமான ஆனந்தம். ஓர் உப்புக் கட்டியை வாயில் போட்டால் கரிக்குமே தவிர வேறு ஏதாவது சுவை இருக்குமா? இருக்காது. அப்படி நான்காம் நிலை ஆனந்தக் கட்டி; ஆனந்தத்தைத் தவிர வேறில்லை.

அப்படிப்பட்ட நான்காவது நிலையாக, காமேசுவர மஹிஷியாக இருக்கிறாள் பராசக்தி.

-மகா பெரியவர், ஆசாரிய ஸ்வாமி உபந்நியாசங்கள், முதற் பகுதி, கலைமகள் காரியாலயம்.

2 comments:

Life Lessons from a Late Bloomer said...

wow wow! very nice! I will share this with my mother. She will be too happy to read MahaPeriyavas! If it is from Kalaivani, it must be quite a long time back,right?

(Mis)Chief Editor said...

என் தந்தையின் நினைவாக வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று...
கலைமகள் காரியாலயம், மகா பெரியவர் அவர்கள் 1958-ம் ஆண்டில் நிகழ்த்திய உபந்நியாசங்களின் தொகுப்பு.

முந்தைய பதிவுகள்

Followers