Saturday, August 15, 2009

மஹாதேவன்

சிவ நாமாக்களில் ரொம்ப உசந்ததாக எட்டு உண்டு. அதிலே முடிவான நாமா 'மஹான்'தான். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹான் என்று இப்படி அஷ்ட நாமா.


ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்தர அர்ச்சனை எல்லாம் பண்ணி முடித்து கோவிலிலே இந்த எட்டுப் பெயர்களை


பவாய தேவாய நம:
சர்வாய தேவாய நம:
ஈசானாய தேவாய நம:
பசுபதயே தேவாய நம:
ருத்ராய தேவாய நம:
உக்ராய தேவாய நம:
பீமாய தேவாய நம:
மஹதே தேவாய நம:


என்று இந்த ஆர்டரில் சொல்லி அர்ச்சித்து விட்டு, அப்புறமே தூப - தீப - நைவேத்யம் என்று போகிறதுதான் தொன்று தொட்டு வந்துள்ள பூஜாவிதி.

எட்டுப் பேர்களில் ஒவ்வொன்றுக்கும் 'பவாய தேவாய', 'சர்வாய தேவாய' என்று தேவ சப்தம் சேர்த்துச் சொல்லிக் கொண்டே போய், கடைசியில் 'மஹதே தேவாய' என்று பூர்த்தி பண்ண வேண்டும்.

அந்த விசேஷத்தில்தான் 'மஹாதேவன்' என்றே சிவனுக்குப் பிரஸித்தமாக நாமா இருக்கிறது.

இந்த அஷ்ட நாமாக்களில் ஒரு விசேஷம்; வேடிக்கை. அம்பாளுக்கு லகுவாக (எளிதாக) அர்ச்சனை பண்ண வேண்டுமா? அதற்கும் இந்த நாமாக்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்த பெயர்க்காரருடைய பத்தினிக்கு நமஸ்காரம் என்று அர்ச்சித்து விட்டால் போதும்: 'பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:', 'சர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:' என்று இப்படி சொல்லிக்கொண்டே போய், 'மஹதோ தேவஸ்ய பத்ன்யை நம:' என்று முடித்துவிட வேண்டும்.

இப்படியே ஸ¤ப்ரம்மண்யர்-விக்நேச்வரர்களுக்கும் இந்த அஷ்ட நாமாக்காரரின் பிள்ளை என்று சொல்லியே சுருக்கமாக அர்ச்சனை பண்ணி விடலாம்: 'பவஸ்ய தேவஸ்ய புத்ராய நம:' என்று ஆரம்பித்து, 'மஹதோ தேவஸ்ய புத்ராய நம:' என்று முடிப்பது!

-தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers