Monday, February 20, 2006

"நான்"

உனக்கு முன்னால் நான் இருக்கிறேன் அல்லவா? ஆனால் என் முகத்துக்கு முன்னால் ஒரு துணியைப் பிடித்துக் கொண்டேனானால் என்னைக் காண்பதில்லை. உடனே நான் மறைந்து போகிறேன். முன்னைப் போலவே நான் உனக்கு அருகில் இருந்து வருகிறேன். ஆயினும் துணிக்குப் பின்னால் நான் மறைந்து உன்னுடைய பார்வைக்குத் தெரியாமற் போகிறேன்.

அதுபோலவே ஈசுவரன், உனக்கும் எனக்கும் அனைவருக்கும் மிக அண்மையிலேயே இருக்கிறான். மற்ற எப்பொருளையும் விட மிக அருகிலேயே எப்போதும் இருக்கிறான். ஆனால் 'நான்' என்னும் திரை அவனை மறைத்துவிடுகிறது. உன் கண்ணுக்கு முன்னால் சிறிய துணியை வைத்துக் கொண்டாலும் கூடப் பெரிய மலையும் பார்வையிலிருந்து மறைந்து போய்விடுகிறது. அகங்காரம், ஆணவம் என்று சொல்லப்படும் இந்தத் திரையை நாம் பிடித்துக் கொண்டிருக்கும் வரையில் நாம் கடவுளைக் காணவே முடியாது. நான் என்பது ஒழிந்தால் ஆண்டவன் 'பளிச்'சென்று தெரிவான். 'நான்' என்ற உணர்வு அகல வேண்டும் என்று கூறுவது இதைத்தான். அது இந்த உடலைப் பொறுத்தது மட்டும் அல்ல.

'நான்' என்பது இரண்டு விதமானதாகும். ஒன்று பக்குவப்பட்டும் பழுத்த பக்தியோடு கலந்த 'நான்' என்கிற உணர்ச்சி. மற்றொன்று பழுக்காத ஆணவம். என் வீடு, என் குழந்தை, என் மனைவி, என் உடல், என் சொத்து போன்ற எண்ணங்கள், பழுக்காத அகங்காரத்திற்கு உரியவை. இது கடவுளை மறைக்கிற திரை.

'ஆண்டவன் ஆணைப்படி பணி செய்பவன் நான். இவை அனைத்தும் ஆண்டவன் சொத்து. இவையெல்லாமே அவனுடைய சிறப்பு. அவனே எல்லாச் செயலையும் செய்பவன். நான் செய்வது ஒன்றும் இல்லை. நான் அவனால் பொம்மையைப் போல ஆட்டுவிக்கப்படுகிறேன். ஆண்டவன் விரும்பியபடி பணி செய்யும் ஆள் மட்டுமே நான்!' என்று எண்ணுபவன் பக்தியோடு தனது வாழ்க்கையை நடத்துவான். அத்தகைய வாழ்க்கையின் பயனாக ஆணவம் கனிந்த பழமாக மாறிவிடும். 'நான்' என்னும் திரை ஒழிந்து பெருங்காட்சி அடைவோம்.

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களின் பிறந்த தினம் இன்று (20/02/06) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது
.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers