Sunday, January 01, 2006

ஆத்ம தத்துவம்

நாம் பழரசத்தை ஒரு கோப்பையில் எடுத்துக் கொள்கிறோம். அதிலிருந்து ஒரு குழல் மூலம் உறிஞ்சிக் குடிக்கிறோம். இதில் அந்தக் கோப்பைக்குப் பழரசத்தின் அருமையோ, இனிமையோ தெரியாது. பழரசத்தை உறிஞ்ச உபயோகப்படும் குழலுக்கு (ஸ்ட்ரா) அதன் அருமையோ, சுவையோ தெரியாது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட பழரசம் நாக்கிற்கு வந்து சேருகிறது. ஆனால் நாக்கு அதன் ருசியைப் பருகுகிறதே தவிர, சில வினாடிகளுக்கு மேல் அனுபவிப்பதில்லை. அதேபோல, அதை விழுங்கி உட்செலுத்தப் பயன்படும் தொண்டையையும் இந்த இனிமை எட்டுவதில்லை. வயிற்றில் உள்ள ஜீரண உறுப்புகளுக்குத்தான் இவை போய்ச் சேருகின்றன. ஆனால் சுவை எதுவானாலும் அதில் நல்லவற்றையே எடுத்து, உடலுக்கு அளித்து அதன் நன்மைக்கு வழி செய்கின்றன அந்த ஜீரண உறுப்புகள். அவற்றை நாம் கண்ணால் கூடப் பார்க்க முடிவதில்லை.

அதேபோல வாழ்க்கையில் நமது தேவைகளுக்குப் பயன்படும் நிதரிசனமான சாதனங்களாகிய உடலும், சுவையைப் பிரிக்கும் நாக்கைப் போல அனுபவங்களைப் பகுத்தறிவும், மூளையும் ஒவ்வொரு காரியத்திற்கும் உதவி செய்கின்றன. ஆனால் அவை நம்முடைய முடிவான பலனுக்கு உதவுவதில்லை. உடலைக் காத்து உறுதிப்படுத்தும் ஜீரண உறுப்புகளைப் போல, இந்தச் செயல்கள் தரும் ஆத்மானுபவமே நம்முடைய வாழ்க்கைக்கு நற்பலன்களை அளிக்கிறது. நல்ல பழரச பானம் உடலுக்கு உறுதியும் வளமும் தருவதைப் போல, நற்காரியங்கள் ஆத்மாவை வளப்படுத்துகின்றன. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆத்ம தத்துவம் பெறும் அனுபவத்தை, கண்ணுக்குத் தெரியும் உடலாலும், உடன் இருந்து இயங்கும் பகுத்தறிவாலும் நம்மால் உணர மட்டுமே முடியும். ஆனால் அந்த அனுபவமே நம்முடைய வாழ்க்கையின் நல்ல முடிவை நிர்ணயிக்கிறது.

-பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா

No comments:

முந்தைய பதிவுகள்

Followers