Wednesday, January 18, 2006

பஜ கோவிந்தம் 2

பகவானை மறந்து விட்டு வெறும் பாண்டியத்துக்கும் அதனால் அடையக்கூடிய புகழுக்கும் ஆசைப்படவேண்டாம் என்று முதல் பாட்டில் எச்சரித்துவிட்டு, அடுத்தபடி பணம் சேர்க்கும் மோகத்தைப் பற்றி ஸ்ரீ சங்கரர் சொல்லுகிறார்.

பணம், பணம் என்னும் ஆசை எண்ணிறந்த ஜனங்களுக்கு அளவற்ற துக்கம் உண்டாக்கிவிடுகிறதை அனைவரும் கண்டாலும் கண்டதிலிருந்து மக்கள் அறிவு அடைவதில்லை.

மூட ஜஹீஹி தனாகம் த்ருஷ்ணாம்
குரு ஸத் புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல் லபஸே நிஜகர் மோ பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்.


செல்வம் ஈட்டுமாசை யரு தீராத் தாகம்
வெல்லுதல் வேண்டு மந்தப் பொல்லா நோயை
நல்லமுடிவு செய்துகொள் உள்ளத்திலே
சொந்தத்தில் பாடுபட்டு வந்ததை வைத்து
அந்தமட்டில் போது மென்று மகிழ்ந்தமர்

பாமர மக்கள் உட்பட எல்லோருக்கும் பாடியது பஜ கோவிந்தம். ஞானமும் பக்தியும் அனைவருக்கும் உரித்தான பெருஞ்செல்வம். சங்கரருடைய உபதேசம் உலகத்தைத் துறந்த சந்நியாசிகளுக்கு மட்டுமல்ல. கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்களுக்குகென்றும் பாடுகிறார். 'யல் லபஸே நிஜ கர்மோ பாத்தம் வித்தம்' என்றால், உன் சொந்த உழைப்பினாலேயே நீ சம்பாதிக்கும் பொருளை வைத்து, 'தேன வினோதய சித்தம்' அதை அனுபவித்து உள்ளத்தில் திருப்தி பெறுவாயாக என்கிறார்.

பணம், பணம், இன்னும் பணம் என்று ஒரு தீராத தாகத்தை உண்டாக்கிக் கொண்டு துக்கப்படாதே! அது உனக்கு நன்மையல்ல; அதை உன் சத்துருவாகக் கருது; அதை வென்று உள்ளம் திருப்தி நிலையில் நிற்கச் செய் என்கிறார். நீ பணத்தின் வழியாகக் கோருவது மகிழ்ச்சியல்லவா? நல்ல வழியில் பாடுபட்டு அடைந்த சொத்தை வைத்துத் திருப்தியடையாமல், இது இல்லையே அது இல்லையே என்று துக்கப்படுவது மடமை; மகிழ்ச்சிக்கு வழியல்ல.

இறல்ஈனும் எண்ணாது வே·கின்; விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு


என்று உறுதியாகச் சொன்னார் வள்ளுவர்.

(எண்ணாது) பின் விளைவதைப் பற்றி யோசிக்காமல் பொருளுக்கு ஆசைப்பட்டு அதற்காக முயற்சி செய்தால் (இறல்) கேடு விளையும். அவ்வாறின்றி, பிறரிடம் பொருளைக் கண்டாலும் அதற்காக ஆசைப்படாமலிருக்கும் மன நிலையை நீ பயிற்சி செய்து பெற்றுவிட்டால் அதுவே மகிழ்ச்சிக்குக் காரணம். அது உனக்கு (விறல்) வெற்றியைத் தரும். ஆசையை அடக்கி வேண்டாமை நிலையை அடைந்து விட்டால் அதுவே ஒரு பெருஞ்செல்வம். வேண்டாமை என்று திருவள்ளுவர் சொல்லுவதே சங்கரர் சொல்லும் 'வித்ருஷ்ணாம்'. அந்த நிலையை வள்ளுவர் செருக்கு என்கிறார். சத்துருவை யுத்தத்தில் தோற்கடித்தால் ஒருவன் செருக்கடைவானல்லவா? வேண்டாமை அவ்விதமான செருக்குக் காரணம் என்றார்.

-பஜ கோவிந்தம், மூதறிஞர் ராஜாஜி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers