Saturday, January 07, 2006

பஜ கோவிந்தம் 1

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
ஸம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ரிஞ் கரணே


கோவிந்தன் வாழி! நம் கோவிந்தன் வாழி!
கதிவேறில்லை மதிகெட்ட மனமே.
மரணம் வந்தெதிரில் நிற்கும் போது
சரணம் வேறில்லை. மாதவனடியின்றி,
வாவென்று காலன் வந்தழைக்குங்கால்
ஆவென்று அலறுவாய் கற்றறி மூடனே!
நெட்டுருச் சூத்திரங்க ளப்போது
சற்றேனும் உதவா மூடமதியே!


கலைமகளே வந்து தன் அன்புக்குரிய சங்கரர் வாய்வழிச் சொல்லுகிறாள்; கற்ற கல்வியும், படித்த நூல்களும் பயின்ற கலைகளும் இவையெல்லாம் அந்திம காலத்தில் உன்னை ரக்ஷ¢க்குமா? இல்லை. கோவிந்தனை வந்தனை செய்து கடைத்தேறு. யமன் வந்து உன்னை வாவென்று அழைக்கும்போது படித்த நூல்களைக் கொண்டு நீ அவனிடம் வாதித்து ஒன்றும் அடைய முடியாது. கோவிந்தனை வழிபட்டால்தான் மீள்வாய். ஈசுவர பக்தியன்றிக் கற்ற கல்வியறிவு ஏதும் யமன் முன் பயன்படாது.

மனிதனை மயக்கும் பல மோகங்களில் கல்விச் செருக்கும் ஒன்று. சுக போகத்துக்கும் பணத்துக்கும் மக்கள் ஆசைப்பட்டுத் துன்பமடைவது யாவரும் அறிந்த விஷயம். அவற்றைப் போலவே கல்வி கற்பதிலடையும் புகழாசையும் ஒரு மோகம் என்கிறார் சங்கரர். மரணம் வந்து எதிரே நிற்கும் வரையில் நூல்களைப் படிப்பதிலேயே வாழ்நாட்களைச் செலவழித்து, பக்தி செய்யாமல் கெட்டுப் போக வேண்டாம் என்கிறார். பல மோகங்களுள் கல்வி மோகத்துக்கு முதல் பாட்டிலேயே ஆசிரியர் இடம் வைத்தார்.

'டுக்ரிஞ்' என்பது புகழோங்கிய பாணினி இலக்கணச் சூத்திரங்களைக் குறிக்கும். "யமன் முன்னிலையில் பாணினி சூத்திரங்களை ஒப்புவிக்கப்போகிறாயா?" என்று பரிகாசமாகக் கேட்கிறார். ஈசுவர பக்தியில்லாமல் எவ்வளவு பாண்டித்தியம் பெற்றாலும் பயனில்லை என்று படித்தவர்களுக்கு அழுத்திச் சொல்லுவதற்காகப் பாணினி சூத்திரங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டார். பாணினி சூத்திரங்களைப் பற்றிச் சொன்னதில் பக்தி செய்யாமல் கற்கும் எல்லா கல்விகளும் அடங்கும்.
-பஜ கோவிந்தம், மூதறிஞர் ராஜாஜி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers